பிறக்கும்போதே இடுப்பு எலும்பு இடம் பிறழுதல் என்பது என்ன? (What is congenital hip dislocation?)
பிறக்கும்போதே இடுப்பு எலும்பு இடம் பிறழுதல் (CHD) என்பது, குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பந்துகிண்ண மூட்டு சரியாக வளராமல் இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
இந்த இடுப்பு மூட்டுதான் தொடை எலும்பை கீழ் இடுப்புப் பகுதியுடன் இணைக்கிறது. தொடை எலும்பின் மேல் முனைப் பகுதி பந்து போன்ற கோள வடிவம் கொண்டது, இது இடுப்புப் பகுதியில் கோப்பை போன்ற குழியில் பொருந்தும் வகையில் இருக்கும். ஆனால், CHD பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு, இந்தக் குழியில் கோள வடிவப் பகுதி இறுக்கமாகப் பொருந்தாமல் தளர்வாக இருக்கும், இதனால் எலும்பு இடம் பிறழ அதிக வாய்ப்புள்ளது. இதனை இடுப்பின் பிறழ் வளர்ச்சி (டெவலப்மென்ட் டிஸ்ப்ளேசியா ஆஃப் ஹிப்) என்றும் குறிப்பிடுகின்றனர்.
பிறக்கும் 1000 குழந்தைகளில் ஒருவர் அல்லது இருவருக்கு இந்தப் பிரச்சனை இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சனை இடுப்பின் ஒரு பக்கத்திலோ இரு பக்கங்களிலுமோ ஏற்படலாம். ஆனால் இடது பக்க இடுப்பில் ஏற்படுவதே அதிகம்.
அறிகுறிகள் (Symptoms)
பெரும்பாலும், இந்தப் பிரச்சனை உள்ள குழந்தைகளில் அறிகுறிகள் எதுவும் தென்படாது.
இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு:
கால்கள் இரண்டும் சமமான நீளத்தில் இருக்காது
ஒரு பக்கத்தில் வளையும் தன்மையும் நகரும் திறனும் குறைவாக இருக்கும்
தொடையில் தோல் வழக்கத்திற்கு மாறாக மடிந்திருக்கும்
கால் விரல்களை ஊன்றி நடப்பது
தாங்கித் தாங்கி நடப்பது
காரணங்கள் (Causes)
இந்தப் பிரச்சனைக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பின்வரும் காரணிகள் பங்களிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது:
குடும்பத்தில் பிறருக்கு இந்தப் பிரச்சனை இருந்திருப்பது
கருவில் இருக்கும்போது பனிக்குடத் திரவம் குறைவாக இருப்பது
குழந்தை பிறக்கும்போது தலைக்கு பதில் பிற பாகங்கள் முதலில் வெளிவந்து பிறப்பது
ஆபத்துக் காரணிகள் (Risk Factors)
ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகமுள்ளது
குடும்பத்தில் பிறருக்கு இந்தப் பிரச்சனை இருந்திருப்பது
நோய் கண்டறிதல் (Diagnosis)
மருத்துவர் கண்களால் பார்த்து உடலை ஆய்வு செய்வார், அத்துடன் CHD உள்ளதா எனக் கண்டறிய உடல் பரிசோதனையும் செய்வார். அப்போது இடுப்பை பல்வேறு திசைகளில் நகர்த்திப் பார்த்து, அப்போது ‘கிளங்க்’ எனும் சத்தம் கேட்கிறதா என்றும், தொட்டுப்பார்த்தும் மருத்துவர் இந்தப் பிரச்சனையைக் கண்டறிவார்.
இடுப்பு இடம் பிறழ்ந்து பிறகு மீண்டும் இயல்பு நிலையை அடைய முடிகிறதா என்பதைக் கண்டறிவதற்காக குறிப்பிட்ட விதங்களில் இடுப்பு அசைத்துப் பார்க்கப்படும்.
நோயை உறுதிப்படுத்துவதற்கு, அல்ட்ராசவுண்ட், எக்ஸ்ரே போன்ற சோதனைகள் செய்யப்படும்.
சிகிச்சை (Treatment)
பிறக்கும்போதே இந்தப் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டால், பிரேஸ், ஹார்னஸ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி இதனைச் சரிசெய்யலாம்.
அறுவை சிகிச்சை அல்லாத பிற முறைகள்
குழந்தையின் வயதைப் பொறுத்து, பின்வரும் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன:
பிறந்த குழந்தைகள்: தொடை எலும்பின் மேல் முனைப் பகுதியை குழியில் பொருத்தி வைக்க, பாவ்ளிக் ஹார்னஸ் எனும் மிருதுவான சாதனம் பயன்படுத்தப்படும். இதனைப் பயன்படுத்தியிருந்தாலும், கால்களை தடையின்றி அசைக்கலாம், டயப்பர் மாற்றுவதிலும் தடை இருக்காது. இந்த ஹார்னஸ் பந்துகிண்ணம் இயல்பான நிலைக்கு வளர உதவுகிறது.
1 – 6 மாதங்கள்: இந்த வயதுள்ள குழந்தைகளுக்கு ஹார்னஸ் போன்ற ஒரு சாதனம் பயன்படுத்தப்படுகிறது. ஹார்னஸ் பயன்படுத்தியும் பலன் கிடைக்காவிட்டால், குழந்தையின் கால்களை சரியான நிலையில் வைத்திருக்க பிரேஸ் பயன்படுத்தப்படலாம். சில சமயம், அனஸ்தீஷியா கொடுத்து, தோலை அறுக்காமல் எலும்பு சரியாகப் பொருத்தப்படும். அதன் பிறகு இறுக்கிப் பிடிக்கும் சாந்துக்கட்டு போடப்படலாம்.
6 மாதங்கள் – 2 வயது: அறுவை சிகிச்சையின்றி அனஸ்தீஷியா கொடுத்து பொருத்தப்படும் சிகிச்சை செய்யப்படும், பிறகு இறுக்கிப் பிடிக்கும் சாந்துக்கட்டு போடப்படும். சில சமயம் ஸ்கின் ட்ராக்ஷன் செய்யப்படலாம்.
அறுவை சிகிச்சை முறைகள் (Surgical Approaches)
6 மாதங்கள் – 2 வயது: அறுவை சிகிச்சை இல்லாமல் எலும்பைப் பொருத்தும் சிகிச்சையால் பலன் கிடைக்காவிட்டால், அறுவை சிகிச்சை செய்யப்படும். சில சமயம் பந்து கிண்ணத்தில் தொடை எலும்பின் மேல் முனைப் பகுதி சரியாகப் பொருந்துவதற்காக, எலும்பின் உயரம் குறைக்கப்படலாம். அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, சாந்துக்கட்டு போடப்படும்.
2 வயதுக்கு மேல்: சில சமயம் வயது அதிகமாகும்போதும் உடல் செயல்பாடு அதிகமாகும்போதும் பந்து கிண்ண மூட்டு மேலும் தளர்வடைந்து மோசமாகும். இந்த நிலையில் இடுப்பை மீண்டும் சீரமைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்யப்படும். இடுப்பை பந்து கிண்ணத்தில் சரியாகப் பொருத்தி வைக்க சாந்துக்கட்டு போடப்படும்.
தடுத்தல் (Prevention)
CHD பிரச்சனையை வராமல் தடுக்க முடியாது.
சிக்கல்கள் (Complications)
CHD இன் சிக்கல்கள்
மீண்டும் எலும்பு இடம் பிறழ்தல்
பிற்காலத்தில் கீல்வாதம் ஏற்படலாம்
தொடை எலும்பின் மேல் பகுதியில் எலும்புத் திசு இறப்பு
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
உங்கள் குழந்தைக்கு CHDக்கான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், இடுப்பு மற்றும் மூட்டு அசைவுகள் தடையின்றி நடைபெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும். மருத்துவர் குறித்த நேரத்தில் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்று அதன்படி செயல்படவும்.