காலையில் ஜிம் செல்பவர்கள், ஜிம் செல்லும் முன் எதையேனும் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய தேவையான ஆற்றலானது இல்லாமல் போகும். எனவே அப்போது லைட்டாக எதையேனும் உட்கொள்வது மிகவும் நல்லது. அதிலும் முட்டை சாலட் சாப்பிடுவது இன்னும் சிறந்தது.
இங்கு முட்டை சாலட் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை காலை வேளையில் சாப்பிட்டு சென்றால், ஜிம்மில் விரைவில் சோர்வடையாமல் நன்கு உடற்பயிற்சி செய்ய முடியும். முக்கியமாக தண்ணீர் குடிப்பதை மறக்க வேண்டாம்.
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை – 150 கிராம்
முட்டை – 2
தக்காளி – 2
மிளகுத் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பசலைக்கீரையை நன்கு கழுவி, பொடியாக நறுக்கி ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் முட்டையை போட்டு அடுப்பில் வைத்து, வேக வைக்க வேண்டும்.
அடுத்து தக்காளியை வட்டத் துண்டுகளாக்கி, பின் அதனை லேசாக நெருப்பில் க்ரில் செய்து கொள்ள வேண்டும்.
பின் முட்டையானது வெந்ததும், அதனை இறக்கி ஓட்டை உரித்து, பின் அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியில் பௌலில் வைத்துள்ள பசலைக்கீரையின் மேல் தக்காளியை வைத்து ஒருமுறை பிரட்டி, பின் அதன் மேல் முட்டையை வைத்து, வேண்டுமானால் மேலே லேசாக உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.