எங்க தாத்தா இந்த வயசுலயும் உடம்ப கட்டுகோப்பா வச்சிருக்காரு. இந்த மாதிரி நம்பள பார்த்து நம்ப பேர குழந்தைகள் சொல்வாங்களா? நிச்சயம் கிடையாது… ஏன்? என்ற கேள்வி வரும்.
காரணம்… நாம் தினசரி சாப்பிடும் உணவு, விளையும் பயிர், குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று, சுற்றுச்சூழல், பார்க்கும் வேலைகள் இவையே பிரதான காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கிராமத்து பக்கம் போனால் ஒவ்வொரு வீட்டிலும் வயதானவர்கள் இருப்பர். தற்காலத்தில் சத்தான உணவு இல்லாததால், குழந்தைகளே சிறு வயதில் மடிந்து விடுகின்றனர்.
கிராமத்தில் உள்ள ஒரு பெரியவரிடம் “சாப்பிட்டீர்களா” என்று கேட்டால், “இப்போ தான் பழையகஞ்சி குடிச்சேன்” என்பார். பழைய சாதம் அவர்களால் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. ஆனால் அதே பழைய சாதம் இந்த நாகரீக யுகத்தில் குப்பைக்குத் தான் போகிறது. “அதையா சாப்பிடுவது?” என்று நாம் யோசிப்பதில் தான் அதிகம் சத்துள்ளது. சத்து நிறைந்தது என்று தெரிந்தும் பலரும் சாப்பிடுவதில்லை.
முன்னோர்களோ பழைய சாதம், கேள்வரகு, கம்பு, சோளம், பயிர், திணை, கிழங்கு வகைகள் இது தான் அவர்களின் சாப்பாடு. பீட்ஸா, பர்கர், கிரில் சிக்கன், பார்பிக்யூ என எப்போது சமைத்த உணவு என்றே தெரியாமல் விரும்பி சாப்பிடுகிறது தற்கால வட்டம்.
வெந்ததும் வேகாததும் நம் முன்னோர்கள் சாப்பிட்டார்கள். ஆனால் அதெல்லாம் பயிர், தானியம், போன்ற சத்துக்கள் நிறைந்த உணவு. இப்போது சாப்பிடுவது எல்லாம் வறண்ட ரொட்டி, காய்ந்த பன் போன்றவை தான்.
சோளம் முன்னோர்களின் உணவாகவே இருந்தது. ஆனால் தற்காலத்தில் அதிலும் கலப்படம். சுவீட் கார்ன் என்ற பெயரில் சோளக்கருது. கண்ணுக்கு தென்படும் வித்தியாசமான பொருட்கள் எல்லாம் சத்தான உணவுகளின் பட்டியலில் வந்துவிடாது. செயற்கை என்றாலே ஆபத்தும் கூடவே இருக்கும்.
முன்னோர்கள் சாதம் சாப்பிடுவதை விட காய்கறிகள் அதிகம் சாப்பிடுவார்கள் ஆனால் இப்போது சுழலும் உலகில் உடனே எது கிடைக்கிறதோ அதனை உட்கொண்டுவிட்டு நகர்ந்து விடுகின்றனர். இப்போது நன்றாக தான் இருக்கும் அதன் விளைவுகள் நினைத்து கூட பார்க்க முடியாத அளவாக மாறும்.
ஒரு மனிதன் சத்தான உணவு சாப்பிட்டால் 300 ஆண்டுகள் வாழலாமாம் நாம் வாழ்வது எத்தனை காலமோ?