ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதை அமெரிக்க அரசு கண்டுபிடித்ததை அடுத்து, 33 ஆயிரம் பவுடர் டின்களை அந்நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது!!
அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் உலகம் முழுவதும் குழந்தைகளை பராமரிப்பதற்கான பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. 130 ஆண்டுகள் பழமையான, அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன், அதன் பல்வேறு தயாரிப்புகள் தொடர்பாக ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. அதன் பேபி பவுடர் உள்ளிட்ட டால்கம் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்பட்டதாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளை நுகர்வோர் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இருப்பதை, அமெரிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கண்டறிந்துள்ளது. ஆன்லைன் மூலம் வாங்கப்பட்ட பவுடர் டின்னில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு தொகுப்பில் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இருந்ததை உறுதிப்படுத்தியுள்ள மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மற்றொரு தொகுப்பில் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இல்லை என தெரிவித்துள்ளது. எனவே, குறிப்பிட்ட அந்த தொகுப்பில் இருந்த ஜான்சன் அண்டு ஜான்சன் பேபி பவுடரை நுகர்வோர் பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரித்தது.
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு சந்தைக்கு அனுப்பப்பட்டு ஒரு தொகுப்பு பேபி பவுடர்களை, அதாவது 33 ஆயிரம் பவுடர் டின்களை மட்டும் திரும்பப் பெற்றுக்கொள்வதாக ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்னர் கூட, அமெரிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் நடத்திய சோதனையில் ஆஸ்பெஸ்டாஸ் கலப்பு இருப்பதாக கண்டறியப்படவில்லை என்றும், புதிய சோதனை முடிவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அந்நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்தித்தன.