ராகி என்னும் கேழ்வரகின் நன்மைகளை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ராகியை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், உடலின் வலிமையானது அதிகரிப்பதுடன், உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் அந்த ராகியை காலையில் உணவில் சேர்த்து வருவது இன்னும் நல்லது.
அதுவும் தோசையாக எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. இங்கு அந்த ராகி தோசையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோடா மாவு – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை நீரில் போட்டு 5-6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பௌலில் ராகி மாவை போட்டு, அதில் தண்ணீர் மற்றும் அரைத்து வைத்துள்ள உளுத்தம் பருப்பு கலவையை சேர்த்து கலந்து, 8-10 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, மாவு கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக சுட்டு எடுத்தால், ராகி தோசை ரெடி!!!