தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தைகளின் அக்கறையில் மட்டுமல்ல, தன்னுடைய ஆரோக்யம் குறித்து அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.அவ்வாறு தாய்க்கும், குழந்தைக்கும் நன்மை பயக்க கூடிய சத்துக்கள் குறித்து இங்கே காணலாம்..
கால்சியம் :
குழந்தையின் ஆரோக்யமான வளர்ச்சிக்கு ஏராளமான கால்சியம் தேவைப்படுகிறது. பால் கொடுக்கும் தாய்மார்கள், தங்களது உணவில் கால்சியம் இல்லாவிட்டால் . பிற்காலத்தில் எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயம் உள்ளது.. ஒரு நாளைக்கு 1,000 மி.கி., கால்சியத்தை கட்டாயம் பால் கொடுக்கும் தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பால், தயிர், சீஸ், பால் பொருட்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான தாய்ப்பாலின் முக்கிய பகுதியாகும்.
எலும்புகளை வலுப்படுத்த உதவும் வைட்டமின் டி யை பால் வழங்குகிறது. புரதம் மற்றும் வைட்டமின் பி யை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பால் பொருட்கள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகவும் திகழ்வதால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒமேகா -3 கொழுப்பு அமிலம்:
இது கண் மற்றும் மூளையின் விழித்திரையின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும் . ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, டிஹெச்ஏவின் உகந்த அளவு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய தேவையாக இருக்கிறது. தாயின் உணவு DHA நிறைந்ததாக இருந்தால் மட்டுமே தாயின் பால் DHAன் வளமான ஆதாரமாக இருக்க முடியும்.
புரத உணவுகள், முழு தானியங்கள், ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், பால் ஆரோக்யமான கொழுப்புகள் ஆகியவற்றை பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்களது உணவில் சேர்த்துக்கொள்வது மிக அவசியமாகும்.
வைட்டமின் டி
வைட்டமின் டி குறைபாடு உயர் இரத்த அழுத்தம், சில புற்றுநோய்களின் ஆபத்து, ஆஸ்டியோபோரோசிஸ், டைப் 1 நீரிழிவு போன்ற பிரச்னைகளை பிற்காலத்தில் தாய் – சேய் என இருவரும் சந்திக்க நேரிடும் . தாயின் உணவில் வைட்டமின் டி சத்துக்கள்நிறைந்ததாக இருக்க வேண்டியது அவசியம்.
வைட்டமின் பி 12
சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி, டி.என்.ஏ தொகுப்பு மற்றும் ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை மேம்படுத்துவதில் வைட்டமின் பி 12 முக்கிய பங்கு வகிக்கிறது. இறைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்கள் தானியங்கள், பருப்பு வகைகள், காளான்கள் போன்ற உணவுகளை பால் கொடுக்கும் தாய்மார்கள் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
புரதம்:
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்களுடைய உணவிலும் ஆரோக்கியமான புரத மூலத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதன் மூலம் குழந்தைக்கு தேவையான புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். இறைச்சி, கோழி, கடல் உணவு, முட்டை, சீஸ், பால் மற்றும் தயிர், பாலாடைக்கட்டி, உலர்ந்த பீன்ஸ் ஆகியவற்றில் அதிக புரத சத்துக்கள் நிறைந்துள்ளன.