உ றங்கச் செல்வதற்கு முன் கேசத்துக்கு எண்ணெய் வைக்கலாமா, ஷாம்பூவில் எது பெஸ்ட், முடி கொட்ட என்ன காரணம்? இப்படிக் கூந்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த பியூட்டி தெரபிஸ்ட் ரதி ராதிகா.
தினமும் ஹேர் வாஷ் செய்வது நல்லதா?
யெஸ், நிச்சயம் செய்ய வேண்டும். வெளியில் செல்லும்போது தூசு, புகை போன்றவை நம் கேசத்தின் வேர்க்கால்களில் படிந்து அரிப்பு உண்டாகும்; முடிகொட்டுதல் பிரச்னை ஏற்படும். இதைத் தடுக்க, தினமும் ஹேர் வாஷ் செய்துகொள்வது நல்லது.
ஜலதோஷம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது ஹேர் வாஷ் செய்துகொள்ளுங்கள்.
தினமும் ஹேர் வாஷ் செய்தால் கூந்தல் வறண்டு போகிறது என்பவர்கள் உங்கள் கூந்தலின் தன்மைக்கு ஏற்ப மைல்டு ஷாம்பூகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
வெளியே செல்லும்போது கூடுமானவரை கேசத்தை ஏதேனும் ஸ்கார்ஃப் கட்டிப் பாதுகாத்துக்கொள்வது நல்லது.
எந்த எண்ணெய் தலைமுடிக்கு நல்லது?
ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், செம்பருத்தி எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் எனக் கூந்தலுக்கு எல்லா வகையான எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.
அதற்கு முன், உங்கள் கூந்தலின் தன்மையைப் பொறுத்து எண்ணெய்த் தேர்வு இருப்பது அவசியம். கூந்தல் அதிக வறட்சியாக இருக்கிறது என்பவர்கள் ஆலிவ் எண்ணெய்யைத் தேர்வு செய்யலாம்.
கூந்தல் வலிமையிழந்து அடர்த்தியின்றி இருக்கிறது எனில் பாதாம் எண்ணெய் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். சில்க்கி ஹேர் வேண்டுமெனில் செம்பருத்தி எண்ணெய்யைப் பயன்படுத்தலாம்.
உடல் சூடு காரணமாகக் கூந்தல் உதிர்கிறது எனில் வாரத்துக்கு மூன்று முறை நல்லெண்ணெய் மசாஜ் செய்துகொள்ளலாம்.
பொடுகுப் பிரச்னை நீங்க, அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யுடன் சிறிது லேவண்டர் ஆயிலைக் கலந்துகொள்ளலாம்.
உங்கள் கூந்தலின் தன்மை மற்றும் பிரச்னைகளுக்கு ஏற்ப சரியான எண்ணெய்யைத் தேர்வு செய்து பயன்படுத்தினால் கூந்தல் பிரச்னைகள் நிச்சயம் குறையும்.
எண்ணெய் அப்ளை செய்யும் முறை
முன்பெல்லாம் எண்ணெய் வைத்துத் தலைசீவித்தான் பெண்கள் வெளியே செல்வார்கள். ஆனால், இன்றிருக்கும் சுற்றுச்சூழல் மாசில் எண்ணெய் வைத்து வெளியே சென்றால் கூந்தலில் அழுக்குப் படிந்து பிசுபிசுப்புத் தன்மை ஏற்படும்.
எனவே, வெளியில் செல்லும்போது தலைக்கு எண்ணெய் அப்ளை செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.
அதேபோன்று சிலர் தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் எண்ணெய் தேய்த்து, மறுநாள் காலையில் ஹேர்வாஷ் செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இது பயனற்றது.
நீங்கள் தேய்க்கும் எண்ணெய் தலையணை உறைக்குத்தான் செல்லும். எனவே, தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கூந்தலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
எண்ணெய்யைக் கூந்தலில் மட்டுமல்லாது ஸ்கால்பிலும் படும்படி அப்ளை செய்வதே நல்ல பலன் அளிக்கும்
ஷாம்பூ தேர்வு
உங்களால் தினமும் சீயக்காய் பயன்படுத்தி ஹேர்வாஷ் செய்ய முடியும் எனில் சீயக்காயே பெஸ்ட் சாய்ஸ்.
இயலாது என்பவர்கள் PH மதிப்பு 4.5-க்கும் கீழ் உள்ள கெமிக்கல் ஃப்ரீ ஷாப்பூகளை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
விளம்பரங்களைப் பார்த்து அடிக்கடி ஷாம்பூவை மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ஷாம்பூவைப் பயன்படுத்தும்போது அப்படியே நேரடியாகக் கூந்தலில் அப்ளை செய்யாமல், ஒரு கப் தண்ணீரில் தேவைக்கேற்ப ஷாம்பூ எடுத்து, தண்ணீர் விட்டுக் கலந்துதான் பயன்படுத்த வேண்டும்.
இப்படிச் செய்வதன் மூலம் ஷாம்பூவில் உள்ள கெமிக்கல்கள் உங்கள் கூந்தலை அதிகம் பாதிக்காமல் இருக்கும். இதனால் இளநரை, கூந்தல் வறட்சி போன்றவற்றையும் தவிர்க்க முடியும்.
முடி உதிர்வைத் தடுக்க
அதிகப்படியான முடி உதிர்வு ஏற்படுகிறது எனில் முதலில் உங்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை செக் செய்வது அவசியம்.
ஹீமோகுளோபின் குறைவாக இருப்பின் கீரைகள், பேரீச்சம்பழம், நெல்லிக்காய், புதினா போன்றவற்றை உணவில் ரெகுலராக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கூந்தல் பிரச்னையையும் சரிசெய்யலாம்.
வறட்சியால் முடி உதிர்வு ஏற்படுகிறது எனில் ஹேர் ஸ்பா ஒரு முறை செய்து கொள்ளலாம். அல்லது தினமும் ஆலிவ் ஆயில் மசாஜ் செய்துகொள்ளலாம்.
முடி வெடிப்பு அல்லது பிளவு காரணமாகவும் சிலருக்கு முடி உதிர்வு ஏற்படவும், வளர்ச்சி தடைப்படவும் செய்யும்.
இதுபோன்ற நிலையில் மாதம் ஒரு முறை கூந்தலின் அடிப்பகுதியை ட்ரிம் செய்து கொண்டால் கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்தலாம்.
ஈரமான கூந்தலுடன் தலைசீவுவது கேசத்தை வலிமையிழக்கச்செய்து முடி உதிர்வை அதிகப்படுத்தும்.
எனவே, கூந்தலை நன்கு காயவைத்த பின்னர் பெரிய பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்தி சிக்குகளை எடுத்து பின் தலைவாரிக் கொள்ளவும். ஹேர் டிரையர்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில் கூல் டிரையர்கள் பயன்படுத்துவது நல்லது.
ஹென்னா பயன்படுத்துபவர்களின் கவனத்துக்கு
ஹேர் ஸ்ட்ரைட்டனிங், கர்லிங், கலரிங் என அடிக்கடி ஹேர் பேட்டர்னை மாற்றுபவர்கள் ஹென்னா பயன்படுத்தினால் சரியான ரிசல்ட் இருக்காது.
நரைமுடியை மறைக்க ஹென்னா பயன்படுத்துகிறீர்கள் எனில் பிளைன் ஹென்னா பவுடருடன் பீட்ரூட் கலவை 4 டீஸ்பூன் கலந்து தலைக்கு அப்ளை செய்து 20 நிமிடங்களுக்குப் பின் ஹேர் வாஷ் செய்ய அழகான பர்கண்டி கலர் ஹேர் கிடைக்கும்.
அடர்த்தி அல்லது கண்டிஷனிங் காரணங்களுக்காக ஹென்னா பயன்படுத்துபவர்கள் ஹென்னா பவுடருடன் சிறிதளவு டீ -டிக்காக்ஷன் சேர்த்து கேசத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து ஹேர் வாஷ் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.