கடலை மிட்டாய் என்பது உடைத்த நிலக்கடலை, கருப்பட்டி அல்லது வெல்லம் கொண்டு செய்யப்படும் இனிப்புச் சுவையுடைய ஒரு தின்பண்டம். வட இந்தியப் பகுதிகளில் சிக்கி என்ற பெயரில் இந்த இனிப்பு வெவ்வேறு
மாறுதல்களுடன் செய்யப்படுகிறது. இதைப்போன்ற தின்பண்டம் தென் அமெரிக்க நாடுகளிலும் விரும்பப்படுகின்றன. ஆனால் கோவில்பட்டி கடலை மிட்டாய், பெயர் பெற்றதாகும்.
கடலை மிட்டாய் என்பது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கக்கூடியதாக பரவலாக இருந்தாலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் அதன் சுவையே தனி.
கடலைமிட்டாயை எப்படி செய்வது என்றால், வெல்லத்தை காய்ச்சி, பாகு முறுகியதும் வறுத்த கடலை சேர்த்து கிளறி கலவையை அரிசி மாவு தடவிய சதுர பலகையில் கொட்டி மிதமான சூட்டில் பூரிக்கட்டையால் விரித்து வில்லைகள் போட்டு எடுத்தால் சுவையான கடலை மிட்டாய் தயாராகி விடுகிறது.
ஒரு சிலர் உடைத்த நிலக்கடலையைக் கருப்பட்டி பாகில் இட்டு தேங்காய்த் துருவல் கலந்து தயாரிக்கின்றனர். கருப்பட்டி மிகுதியாகக் கிடைக்காத பகுதிகளில் வெல்லமிட்டும் செய்யப்படுகிறது.
கட்டம் கட்டமாய் வார்த்தும் உருண்டைகளாகப் பிடித்தும் விற்கின்றனர். சிலர் மணம் கூட்டும் பொருட்டு ஏலக்காயும் சேர்க்கின்றனர். இப்படிப்பட்ட சுவையான கடலைமிட்டாயை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது.
இன்றளவிலும், எந்த பெட்டி கடைக்கு சென்றாலும், அங்கே கண்ணாடி குடுவையில் அடைத்து விற்கப்படும் கடலை மிட்டாய் நம்மை சுவைக்க தூண்டும்.
கடலை மிட்டாய் வெறும் சுவைக்காக மட்டும் அல்லாமல் உடலுக்கு பலம், ஆரோக்யம் மற்றும் புத்துணர்ச்சி அளிக்க கூடியதாவும் இருக்கிறது.
பல்வேறு வகையான கடலை மிட்டாய்களை நாம் சுவைத்திருந்தாலும் உன்னதமான தரமும், சுவையும் இருப்பது என்னவோ இந்த கோவில்பட்டி கடலை மிட்டாயில் தான்.
தரமான கடலைகளை தேர்ந்தெடுத்து சுத்தமான முறையில் இந்த கோவில்பட்டி கடலைமிட்டாய் தயார் செய்கிறார்கள்.
இத்தகைய அறிய வகை கோவில்பட்டி கடலை மிட்டாயை அதிக அளவில் உண்பதால் நல்ல உடல் கட்டுப்பாடோடு இருப்பதுடன் அதிக எடை உள்ளவர்களின் எடை குறையும்.
கோவில்பட்டியில் உள்ள மார்க்கெட் சாலையில் முழுவதும் கடலை மிட்டாய் விற்கும் கடைகள் நாம் அதிக அளவில் காணலாம்.
இங்கு செய்யப்படும் கடலை மிட்டாயின் தனி ருசிக்குக் காரணம் 60 ஆண்டுக் கால அனுபவமும் அதில் கலக்கப்படும் சுவையான பொருட்களும்தான்.
வெல்லம், தேனி வெல்லம் என இரு விதமான வெல்லத்தைத் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். அதுபோல கடலை மிட்டாய்த் தயாரிப்பை ஒரு ஆன்மிக வழிபாடு போல செய்கிறார்கள்.
அதுமட்டும் மல்லாமல் கோவில்பட்டி ஊர் மண் வாசனையும், கோவில்பட்டியில் பல வருட அனுபவத்துடன் கடலைமிட்டாய் தயாரிக்கும் உற்பத்தியாளர்களின் கை பக்குவம் தான் கடலை மிட்டாயின் அதிக சுவைக்கு காரணம் என்றே பலர் நம்புகின்றனர்.
என்னத்தான் நவீன உலகில் வண்ணங்கள் உடன் சுவையாக கடைகளில் விற்றாலும் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு நிகர் இல்லை.
கோவில்பட்டியில் விளையும் கடலையும் மிக தரமானதாக இருப்பதால் இந்த கடலை மிட்டாய் இயற்கையாகவே மிக அதிக ருசி பெறுகிறது.