பெண்களுக்கு நல்ல உறக்கம் இல்லாவிட்டால் ரத்த அழுத்தம், மாரடைப்பு ஏற்படும்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி
பெண்கள் அனைவரும் இதனை நன்றாக கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். தூக்கமின்மை பிரச்சினை உங்களுக்கு சிறியளவில் இருந்தாலும், அதாவது தூங்குவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் உங்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என சமீபத்தில் வெளியான ஆராய்ச்சியொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்வானது கைக்கடிகாரம் போன்ற எந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7-8 மணிநேரம் தேவையான நேரம் உறங்கும் பெண்களுக்கு, அவர்கள் உறங்கும்போது ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டாலும் அவர்களுக்கும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உறக்க பிரச்சினைகள் இருக்கும் பெண்களுக்கு இதய நோய்களை ஏற்படுத்தும் எண்டோதெலியல் செல்கள் பெருக்கம் அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என இந்த ஆய்வை மேற்கொண்ட கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் புரூக் அகர்வால் தெரிவிக்கிறார்.
இந்த ஆய்விலிருந்து மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் உறக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பதும், இந்த எண்ணிக்கை பெண்களிடத்தில் இன்னும் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை பிரச்சினை பெண்களிடையே மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என, புரூக் அகர்வால் தெரிவிக்கிறார்.
இந்த ஆராய்ச்சிக்காக 323 ஆரோக்கியமான பெண்களின் ரத்த அழுத்தம் மற்றும் தூக்க பழக்கவழக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டன. உறங்கும்போது இடையே தொந்தரவு ஏற்படுதல், குறைந்த நேர உறக்கம், உறங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல், தூக்கத்திற்கிடையே நடக்கும் பிரச்சினை உள்ளிட்டவை, சீரியஸான உறக்க பிரச்சினைகளைக் காட்டிலும் அதிகமாக காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.