27.1 C
Chennai
Saturday, May 24, 2025
26p2
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா வலிப்பு வந்தவருக்கு சாவியை விடவும் வேறு வழி உண்டு

சாவி போன்ற இரும்புப் பொருளை வலிப்பு வந்தவர்களுக்குக் கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்று சொல்வதற்கு எவ்வித மருத்துவ ஆதாரமும் இல்லை.

இது ஒரு மூட நம்பிக்கை. திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண்பிப்பதால், இந்த நம்பிக்கை மக்களின் பொதுப்புத்தியில் பதிந்துவிட்டது.

பொதுவாக, வலிப்பு சில நிமிடங்களுக்குள் தானாகவே நின்றுவிடும். அருகில் உள்ளவர்கள் இரும்புப் பொருளை எடுத்துக் கொடுப்பதற்கும் சில நிமிடங்கள் ஆகுமல்லவா?

இயற்கையாக உடலில் வலிப்பு நிற்பதற்கும் இவர்கள் இரும்புப் பொருளை வலிப்பு வந்தவருக்குக் கொடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும். காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைதான்.

மற்றபடி, வலிப்பு நிற்பதற்கும் கையில் சாவியைக் கொடுப்பதற்கும் தொடர்பில்லை. இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், வலிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.

வலிப்பு ஏற்படும் விதம்

மூளை, நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின்புயல் போல் கிளம்புகிறது.

அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் ‘வலிப்பு’ என்கிறோம்.

பூமியின் உள்அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப் போல, மூளையில் உண்டாகிற மின்அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.

என்ன காரணம்?

தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.

p69p

பரம்பரையாகவும் வலிப்பு வரலாம். கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு. பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக் குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள், சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக்கூடும். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக ‘பொய் வலிப்பு’ (Pseudo seizure) வருவதும் உண்டு.

குழந்தைகளுக்கு வலிப்பு!

குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம். பெரும்பாலும் ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வரும் சாத்தியம் அதிகம். சூடம் சாப்பிட்ட குழந்தைக்கு வலிப்பு வருவதுண்டு.

என்ன செய்ய வேண்டும்?

ஒருவருக்கு வலிப்பு வந்துவிட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் சாவியைத் தேடி நேரத்தை வீணாக்குவதைவிடக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றலாம்:

# அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வையுங்கள்.

# சட்டை பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து ‘டை’ போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.

# மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.

# அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.

# மூக்குக் கண்ணாடி, செயற்கை பல் செட்டை அகற்றிவிடுங்கள்.

# உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.

# ஒருவருக்கு வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம்.

என்ன செய்யக்கூடாது?

# அவரைச் சுற்றிக் கூட்டம் கூட அனுமதிக்காதீர்கள்.

# வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.

# வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக் கூடாது.

# முழு நினைவு வந்ததை உறுதி செய்து கொண்டு (இதற்கு அவர் பெயரைச் சொல்லச் சொல்லலாம்) தண்ணீரைப் பருகச் செய்யலாம்.

# மூக்கில் வெங்காயச் சாற்றை ஊத்துவதும் கூடாது.

26p2

Related posts

உங்களுக்கு தெரியுமா ஆலிவ் ஆயிலில் அத்திப்பழத்தை 40 நாட்கள் ஊற வைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்!

nathan

உங்களுக்கு கழுத்தின் இடது பக்கம் மட்டும் அடிக்கடி வலிக்கிறதா?

nathan

இதோ அற்புதமான எளிய தீர்வு! முடக்கு வாதத்தை வேரிலிருந்து குணப்படுத்த இவ்வளவும் போதும்!

nathan

எலுமிச்சை, புதினா, சோம்பு, வெட்டிவேர்..! அரிய எண்ணெய்களின் அபார பலன்கள்

nathan

கைகள் இல்லை… கால்கள் இல்லை… கவலையும் இல்லை! இயற்கை தந்த சவால்களை எதிர்கொண்டு, சாதனையாளராக உயர்ந்…

nathan

எதுக்கலிப்பதற்கான சில பொதுவான அறிகுறிகள்….

sangika

இன்றைய இளம் தலைமுறையினருக்கு தற்கொலை எண்ணம் வரக்காரணம்

nathan

உங்களுக்கு தெரியுமா பிரசவத்திற்கு பின் பெண்களின் உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன?

nathan

பற்களுக்கு அடியில் வெங்காயத்தை வைப்பதால் உடல் பெறும் நன்மைகள் தெரியுமா?

nathan