இயற்கையான உதட்டுச் சாயம்
பீட்ரூட் கிழங்குகளில் நல்ல தரமானதாகப் பார்த்து தேர்ந்தெடுத்து, அதனை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் கொண்டால் அது நல்ல உதட்டுச் சாயம் ஆகிவிடும். இந்த உதட்டுச் சாயம் உதடுகளை இயற்கையான சிவப்பு நிறமாக்கும். எந்த வகையிலும் உதட்டுச் சாயம் உதட்டைக் கெடுக்கவோ, பக்க விளைவுகளையோ ஏற்படுத்தாது.
முகப்பூச்சு பூசியிருந்தால்…
அலங்கார நேரத்தில் முகத்திற்கு க்ரீம்கள் ஏதாவது தடவியிருந்தால் முகத்தைக் கழுவாமல் இரவில் தூங்கிவிடக் கூடாது. முகத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து க்ரீமை அகற்றிய பிறகே தூங்கச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் முகத்தில் சருமம் பாதிக்கப்பட்டு அவலட்சணமாக தோன்ற காரணியாகி விடும்.
உள்ளங்கை மென்மை பெற…
சர்க்கரையுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் குழப்பி உள்ளங்கைகளில் தொடர்ந்து தடவி வர, உள்ளங்கைகள் மலர் போன்ற மென்மைத் தன்மையும் நல்ல நிறமும் பெற்றுத் திகழும்.
மருதாணி நல்ல நிறம் பெற…
மருதாணி இலையை அரைக்கும்போது அதனுடன் கத்தைக் காம்பு என்ற சரக்கையும், களிப்பாக்கையும் சேர்த்து கடுக்காய் ஊறிய நீர் விட்டு அரைத்தால் மருதாணி நல்ல நிறத்துடன் காணப்படும். மருதாணி இலையை மைய அரைத்து எலுமிச்சம் பழச் சாற்றில் குழப்பித் தடவினாலும் நல்ல நிறம் கிடைக்கும்.
முகம் பளபளக்க…
முகத்தில் சில காரணங்களால் திடீரென சுருக்கங்கள் தோன்றலாம்! அந்தச் சுருக்கங்களை அகற்ற சிறிதளவு கிளிசரினை பன்னீர் விட்டுக் கலந்து நாள்தோறும் படுக்கைக்குச் செல்லும்போது தடவி வந்தால் முகச்சுருக்கம் மறைந்து முகம் பளபளப்பாகவும் அழகாகவும் மாறும். முகச் சுருக்கம் முற்றிலும் மறையும் வரை தொடர்ந்து தடவி வர வேண்டும்.