தற்போது உடல் பருமன் பலரும் சந்திக்கும் முதன்மையான பிரச்சனைகளுள் ஒன்று. ஒருவருக்கு உடல் பருமனடைய பல காரணங்கள் உள்ளன. உடல் பருமனைக் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அந்த வழிகளால் சிலருக்கு தீர்வு கிடைக்கலாம் மற்றும் சிலருக்கு தீர்வு கிடைக்காமலும் போகலாம்.
கொழுப்பு விநியோக முறை
உடலில் உள்ள கொழுப்பு விநியோகத்தை 2 வகைகளாக பிரிக்கலாம். அவை ஆன்ராய்டு மற்றும் கைனாய்டு
* ஆன்ராய்டு வகை கொழுப்பு விநியோக முறை பெண்களை விட ஆண்களிடம் அதிகம் வெளிப்படும். அதாவது இந்த வகையினர் ஆப்பிள் வடிவ உடலமைப்பைக் கொண்டிருப்பர்.
* கைனாய்டு வகை கொழுப்பு விநியோக முறை பெண்களிடமே பொதுவாக வெளிப்படும். இந்த வகையினர் பேரிக்காய் வடிவ உடலமைப்பைக் கொண்டிருப்பர்.
கீழே 6 வகையான உடல் கொழுப்புக்களும், அவற்றைக் குறைக்கும் எளிய வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
மேல் உடல் (ஆன்ராய்டு)
இத்தகையவர்கள் அளவுக்கு அதிகமாக உண்பதோடு, குறைவாக உடற்பயிற்சியை செய்பவர்களாக இருப்பவர். இவர்கள் இனிப்புக்களை முற்றிலும் தவிர்ப்பதோடு, தினமும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை உடல் எடை குறையாமலேயே இருந்தால், உடனே ஃபிட்னஸ் நிபுணரை அணுகுங்கள்.
வயிற்றின் மையப் பகுதி (ஆன்ராய்டு)
வயிற்றின் மையப் பகுதியில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அவர்கள் மன அழுத்தம், மன இறுக்கம் மற்றும் பதற்றம் கொண்டவர்களாக இருப்பர். இத்தகையவர்கள் தங்களது வயிற்றுக் கொழுப்பை குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ரிலாக்ஷேசன் டெக்னிக்குகளை முயற்சிக்க வேண்டும்.
கீழ் உடல் (கைனாய்டு)
பெரும்பாலான பெண்கள் தான் இம்மாதிரியான உடலமைப்பைக் கொண்டிருப்பார்கள். உடலின் கீழ் பகுதியில் சேரும் கொழுப்புக்களைக் குறைப்பது என்பது மிகவும் கடினம். எனவே இத்தகையவர்கள் கால் பயிற்சிகளையும், கார்டியோவாஸ்குலர் பயிற்சிகளையும் மேற்கொள்வது நல்லது. இதனால் உடலின் கீழ் பகுதியில் உள்ள கொழுப்புக்கள் நன்கு கரையும். ஒருவேளை எந்த மாற்றமும் தெரியாவிட்டால், ஃபிட்னஸ் நிபுணரை அணுகுங்கள்.
தொப்பை (ஆன்ராய்டு)
இந்த வகையினருக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருப்பதோடு, சுவாச பிரச்சனையும் இருக்கும். இத்தகையவர்கள் மது அருந்துவதை தவிர்ப்பதோடு, மூச்சு பயிற்சிகளை தவறாமல் அன்றாடம் செய்ய வேண்டும்.
கீழ் உடல் மற்றும் கால் பகுதி (கைனாய்டு)
கர்ப்பிணிப் பெண்களுக்கு தான் இந்த உடலமைப்பு இருக்கும். இவர்களுக்கு கால்கள் வீக்கமடையும். எனவே இத்தகையவர்கள் வாட்டர் ஏரோபிக்ஸ் மேற்கொள்வது மிகவும் நல்லது. இதனால் கால் மற்றும் பாதங்களில் உள்ள அழுத்தம் குறையும்.
பெரிய தொப்பையுடன் வீங்கிய முதுகுப் பகுதி (ஆன்ராய்டு)
இம்மாதிரியான கொழுப்புத் தேக்கம் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்களுக்கு தான் வரும். இத்தகையவர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. அதோடு இவர்கள் இரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது கண்காணிக்க வேண்டியது அவசியம். முக்கியமாக இவர்கள் நீண்ட நேரம் பட்டினி இருக்கக்கூடாது. அவ்வப்போது சிறு அளவில் உணவை உண்ண வேண்டும்.