முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இவை தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதோடு, இளநரையைத் தடுக்கும். முடிக்கும் ஊட்டமளிக்கும்.
தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்கும் செழிப்பாக வளர்வதற்கும் முட்டை மிக முக்கிய காரணமாக அமைகின்றது. அதற்காக நாம் எப்படி வேண்டுமானாலும் முட்டையைத் தலைக்குப் பயன்படுத்திவிட முடியாது.
அப்போ முட்டையை எப்படியெல்லாம் தலைக்குப் பயன்படுத்தலாம்?
முட்டையும் ஆலிவ் ஆயிலும்
முட்டையை வெள்ளை மற்றும் மஞ்சள் கருவுடன் 5 ஸ்பூன் அளவுக்கு ஆலிவ் ஆயிலைச் சேர்த்து, நன்கு கலந்துகொள்ள வேண்டும். அந்த கலவையை தலைக்குத் தேய்க்கும் முன் தலையை சீப்பால் நன்கு சீவிக்கொண்டு, பின் இந்த மாஸ்க்கைத் தலைக்குப் போட்டு, அரைமணி நேரம் வரை வைத்திருக்கவும். அதன்பின் வேர்க்கால்களுக்குள் இறங்கும்படி, நன்கு மசாஜ் செய்து, தலையை அலச வேண்டும்.
முட்டையும் எலுமிச்சையும்
இரண்டு முட்டையை உடைத்து மஞ்சள் மற்றும் வெள்ளைக்கருவை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். அதன்பின் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறினைக் கலந்து கொண்டு, தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்யவும். இந்த கலவையைத் தலையில் தேய்த்து இரண்டு மணிநேரம் கழித்து, தலையை நன்கு ஷாம்பு கொண்டு அலசவும்.
முட்டை மாஸ்க்
வெறும் முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவினை எடுத்து நன்கு நுரைபொங்க அடித்துக் கொண்டு, அந்த கலவையைத் தலையில் வேர்க்கால்களில் படும்படி நன்கு தேய்த்து, 3 மணி நேரம் வரையிலும் உலரவிடவும். பின் மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும்.