தித்திப்பும் நல்ல மணமும் கொண்ட பப்பாளியின் சுவை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளரக்கூடிய, எளிதாகவும்
குறைவான விலையிலும் கிடைக்கக் கூடிய பப்பாளி எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. அதன் பெருமைகளை இந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்ப்போம். மத்திய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது பப்பாளி. தற்சமயம் இந்தியாவில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம் மற்றும் தென்னிந்திய மாநிலங்கள் பலவற்றிலும் வெகுவாக பயிரிடப்பட்டு வருகிறது. இது 30 அடி உயரம் வரை கிளைகள் இல்லாமல் வளரக்கூடிய மரமாகும். பயிரிட்ட 3 ஆண்டுகளுக்குள் காய்க்க ஆரம்பிக்கும்.
இதன் இலைகள் 7 பிரிவினை உடையது. பப்பாளியின் இலை ஆமணக்கு செடியின் இலையைப் போல இருப்பதால் இதற்கு ‘பரங்கி ஆமணக்கு’ என்ற பெயரும் உண்டு. ஆங்கிலத்தில் Papaya என்று பரவலாக அறியப்படுகிறது. இதன் தாவரப் பெயர் Carica papaya என்பது ஆகும். ஆயுர்வேதத்தில் ‘பபிதா’ என்று குறிப்பிடுகிறார்கள். பப்பாளியின் மருத்துவப் பயன்கள் பப்பாளிப்பழம் வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்க வல்லது; செரிமானத்தை சீர் செய்யக்கூடியது. ரத்தம் கசியச் செய்யும் மூலத்தை குணமாக்கக் கூடியது. இருமலுடன் வெளிவரும் சளியில் ரத்தம் கலந்து வருவது குணமாகும். சீதபேதியையும், அதிகார பேதியையும் குணமாக்க வல்லது. பப்பாளிப் பழம் உணவாக பலன் தருவதைப் போலவே மேற்பூச்சாகப் பயன்படுத்தும்போது மேகப்படை, வண்டுக்கடி, படர் தாமரை ஆகிய நோய்கள் குணமாகும்.
பப்பாளியின் காயை சமைத்து உண்பதால் வாதத்தால் ஏற்பட்ட உடல் வலி குணமாகும். தேள் கொட்டிய இடத்தில் பப்பாளிப் பாலைத் தடவுவதால் விஷம் விரைவில் இறங்கி வலி குறையும். பப்பாளி இலையை வதக்கி நரம்பு வலியுள்ள இடங்களில் போட வலி விரைவில் தணியும். பப்பாளிப் பாலை சர்க்கரை கலந்து உள்ளுக்குக் கொடுக்க குடற்புண், வயிற்றுவலி ஆகிய நோய்கள் விலகும். பப்பாளிப் பாலுக்கு வயிற்றுக் கிருமிகளை வெளித்தள்ளும் தன்மையும் உண்டு. அதனால், வயிற்றுக் கிருமிகளால் அவதிப்படும் குழந்தைகளுக்குக் கொடுப்பதும் பலன் தரும். பப்பாளி விதைகள் மாதவிலக்கைத் தூண்டக்கூடியது, காய் வயிற்றுக் கிருமிகளை வெளித்தள்ளக் கூடியது.
பப்பாளி விதைச் சாறு ஈரல் வீக்கத்தைக் கரைக்கக் கூடியது. ரத்த மூலத்தை குணப்படுத்தக்கூடியது. பப்பாளிப் பாலில் Papain எனும் வேதிப்பொருள் மிகுந்துள்ளது. இந்த வேதிப்பொருள் வீக்கத்தைக் கரைக்கக் கூடியது. இதை நவீன ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. சோரியாஸிஸ், கால் ஆணி, மருக்கள், நாள்பட்ட ஆறாக் காயங்கள், புரையோடிய கட்டிகள், தீக்காயங்கள் ஆகியவற்றுக்கு பப்பாளிப்பால் அருமருந்தாகும். மேற்பூச்சாகப் பப்பாளிப் பாலைப் பயன்படுத்தும்
போது எக்ஸிமா போன்ற தீவிரமான சரும நோய்களும் குணமாகும். பப்பாளிப் பாலில் அடங்கியிருக்கும் வேதிப்பொருட்களான Papain, Chymopapain, Alkaloids ஆகியன மிகுதியாக அடங்கியுள்ளன.
இவை இதயத்தை சாந்தப்படுத்தும் குணம் கொண்டதாகவும் உயர் ரத்த அழுத்தத்தை சமன்படுத்தக் கூடியதாகவும் விளங்குவதாக ஆய்வுகள் தெரியப்படுத்தி
இருக்கின்றன. வயது முதிர்வதால் ஏற்படுகிற பார்வைக் கோளாறுகளை சரிசெய்யக் கூடியதாகவும் பப்பாளி விளங்குகிறது. பப்பாளியில் பீட்டா கரோட்டின் எனும் வைட்டமின் சத்து மிகுதியாக இருப்பதால் ஆஸ்துமா வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாக விளங்குகிறது. இந்த பீட்டா கரோட்டின் ஆசனவாய்ப் புற்றுநோயையும் குணப்படுத்தக்கூடியது. மேலும் பப்பாளியில் வைட்டமின் கே என்னும் பொட்டாசியம் சத்து இருப்பதால் அது எலும்புகளுக்கு பலம் தருவதாக அமைகிறது. சுண்ணாம்புச் சத்து வீணாகாமல், சிறுநீரில் வெளியேறாமல் பாதுகாத்து எலும்புகளுக்கு ஆரோக்கியம் அமைய உதவுகிறது.
முதல் நிலை சர்க்கரை நோயாளிகள் (டைப் 1) அதிக அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு
வெகுவாகக் குறைய ஏதுவாகிறது. இரண்டாம் நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவும், கொழுப்பு மற்றும் இன்சுலின் அளவும் கூடுவதற்கும் துணை செய்கிறது.பப்பாளியில் மிகுந்திருக்கும் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் உணவு சீக்கிரத்தில் செரிமானம் ஆவதற்குத் துணை செய்கிறது. இதனால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. பப்பாளியில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்கள் ஆகியன இதயநோய்கள் வராமல் பாதுகாக்கின்றன. பப்பாளிப் பழத்தில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் ஆகியன சருமத்துக்கு ஆரோக்கியம் தந்து சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுத்து இளமையோடு இருக்க உதவுகிறது.
ஆண்களைத் துன்புறுத்தும் புரோஸ்டேட் கேன்சர் எனப்படும் விதைப்பை புற்றுநோயினையும் வராமல் தடுக்கும் திறன் கொண்டு விளங்குகிறது.
பப்பாளியில் உள்ள மருத்துவ வேதிப் பொருட்கள் 275 கிராம் கொண்ட நடுத்தரமான அளவும் எடையும் கொண்ட ஒரு பப்பாளிப்பழத்தில் எரிசத்து 119, வைட்டமின் சி 224%, ஃபோலேட்ஸ் 20%, நார்ச்சத்து 19%, வைட்டமின் ஏ 15%, மெக்னீசியம் 14%, பொட்டாசியம் 14%, செம்பு 13%, பேன்டோதெனிக் அமிலம் 11% அளவு அடங்கியிருக்கிறது.
பப்பாளி மருந்தாகும் விதம்
பப்பாளி இலையை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து வீக்கம், நரம்பு வலி, நரம்பு தளர்ச்சி ஆகியவற்றுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். பப்பாளி
இலையை சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டோடு மேற்பற்றாகவும் வைத்துக் கட்டலாம். பப்பாளிப் பாலுடன் சிறிது மஞ்சள் சேர்த்துக் குழைத்து வேர்க்குரு போன்ற சருமத்தில் ஏற்படும் தொல்லைகளுக்குத் தடவ விரைவில் குணமாகும். பப்பாளிக்காயை சமைத்துச் சாப்பிட சுவையாக இருப்பதோடு ஈரல் நோய்கள் குணமாகும். பப்பாளிக்காயை உலர்த்தி, பொடித்துக் கூட மருந்தாகப் பயன்படுத்தலாம்.
பப்பாளிப்பால் 10 மி.லி., அதற்கு சம அளவு தேன், 40 மி.லி. நீர் ஆகியவற்றை நன்கு கலந்து உள்ளுக்குக் குடித்துவிட்டு 2 மணித்துக்குப் பிறகு, 50 கிராம் ஆமணக்கு எண்ணெயும் சம அளவு பழச்சாறும் கலந்து குடிக்க வயிற்றிலுள்ள புழுக்கள் அத்தனையும் வெளியேறிவிடும். பப்பாளிப் பால் 10 மி.லி. அளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து உள்ளுக்குக் குடிப்பதால் வயிற்றுவலி, அல்சர் ஆகியன குணமாகும். பப்பாளிப் பாலை எடுத்து மேற்பூச்சாகத் தடவி வர வாய்ப்புண், அச்சரம், நாக்குப் புண், தொண்டை ரணம் ஆகியன குணமாகும்.பப்பாளிப் பாலை படிகாரத்துடன் சேர்த்துக் குழைத்து மேற்பூச்சாகப் பூச சொறி, சிரங்கு ஆகிய சரும தோல் நோய்கள் தீரும். படிகாரம் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும்.
10 முதல் 15 எண்ணிக்கையில் பப்பாளி விதைகளை எடுத்து தீநீராக்கிக் குடிப்பதால் வயிற்றுப்பூச்சிகள் விலகும். ஒரு கைப்பிடி அளவு பப்பாளி இலையை எடுத்து அதனோடு மிளகு, சீரகம், லவங்கம், ஏலம் ஆகியன சேர்த்து தீநீராக்கிக் குடிப்பதால் டெங்கு, மலேரியா, டைபாய்டு, காமாலைக் காய்ச்சல், காய்ச்சல் ஆகியன அனைத்தும் குணமாவதோடு உடல் வலியும் தணியும். பப்பாளி இலையைத் தீநீராக்கிக் குடிப்பதால் ரத்த வட்டணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
பப்பாளி எச்சரிக்கை பப்பாளி பல்வேறு பலன்களைத்தந்தாலும் கருச்சிதைவை உண்டாக்கும் அபாயத்தையும் கொண்டது. அதனால், கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளியின் காய், பழம், விதைகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.