சமீப காலமாக உங்கள் தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? உங்கள் தலைமுடி பலவீனமாக இருப்பது போல் உள்ளதா? அப்படியெனில் உங்கள் தலைமுடிக்கு சற்று அதிகமாக பராமரிப்பு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். தலைமுடி பலவீனமானால், அது எலி வால் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இதனால் பல நேரங்களில் சங்கடத்தையும் உணர்வோம்.
தலைமுடி பலவீனமாவதற்கு ஊட்டச்சத்து குறைபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சில உடல்நல பிரச்சனைகளும் காரணங்களாகும். ஆனால் ஒருவர் முறையான பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால், நிச்சயம் தலைமுடியின் வலிமையை அதிகரிக்கலாம்.
இங்கு தலைமுடியின் வலிமை மற்றும் அடர்த்தியை அதிகரிக்கும் ஓர் அற்புத ஜூஸ் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஜூஸைக் குடித்தால், தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். சரி, இப்போது அந்த ஜூஸை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
கிவி ஜூஸ் – 1/2 கப்
உருளைக்கிழங்கு ஜூஸ் – 1/2 கப்
கிவி
கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது ஸ்கால்ப்பில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து, தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் உள்ள பேன்டோதெனிக் அமிலம் மற்றும் குறைந்த அளவிலான புரோட்டீன், தலைமுடிக்கு போதிய சத்தை வழங்கி, முடியின் அடர்த்தியையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
தயாரிக்கும் முறை:
கிவி ஜூஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஜூஸை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இனிப்பு வேண்டுமானால், அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
குடிக்கும் முறை:
இந்த ஜூஸை தினமும் காலையில் உணவு உட்கொண்ட பின் மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் குடிக்க வேண்டும். இப்படி மூன்று மாதத்திற்கு குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.