நீங்கள் அடிக்கடி ஈரமான டிஸ்யூ கொண்டு முகத்தைத் துடைப்பீர்களா? ஈரமான டிஸ்யூ சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். நம்மில் பலர் அந்த ஈரமான டிஸ்யூவைப் பயன்படுத்தும் போது ஒருசில தவறுகளை செய்வோம். ஆனால் அந்த தவறுகளைப் பற்றி தெரியாமல், மேன்மேலும் அதையே திரும்ப செய்வோம்.
இங்கு ஈரமான டிஸ்யூவைப் பயன்படுத்தும் போது செய்யும் தவறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, அடுத்த முறை சரியான முறையில் அதைப் பயன்படுத்துங்கள்.
கடுமையாக அழுத்தி துடைப்பது ஈரமான டிஸ்யூவைக் கொண்டு அழுத்தி துடைத்தால், சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும் என்று நினைத்தால், அது தவறு. ஆகவே எப்போதும் மிதமான அழுத்தத்துடன், மேலிருந்து கீழாக துடைக்க வேண்டும். அதிலும் முகத்தில் பருக்கள் இருந்தால், இன்னும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
கண்களுக்கு மை போடும் இடத்தில் பயன்படுத்துவது ஈரமான டிஸ்யூவில் வாசனைக்காக ஒருசில கெமிக்கல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதை கண் மை போடும் இடத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் கண்களை மூடிக் கொண்டு, கண் பகுதியை துடைக்கலாம்.
குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பயன்படுத்துவது பெரும்பாலானோர் குறிப்பிட்ட பகுதியில் மட்டும், ஈரமான டிஸ்யூவை சற்று அதிகமாக பயன்படுத்துவார்கள். ஏனெனில் அப்பகுதிகளில் சற்று அதிகமாக மேக்கப்பை பயன்படுத்தியிருப்பார்கள். மேக்கப் போட்டால், அது ஒரே இடத்தில் மட்டும் இருக்கப் போவதில்லை. முகம் முழுவதும் தான் இருக்கும். ஆகவே முகம் முழுவதையும் துடைத்து எடுக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
பாக்கெட்டை திறந்தே வைப்பது ஈரமான டிஸ்யூவை பாக்கெட்டில் இருந்து எடுத்த பின், அந்த பாக்கெட்டை திறந்தே வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அதில் உள்ள ஈரப்பசை போய்விடும். பின் அந்த முழு பாக்கெட்டும் வீணாகிவிடும். எனவே ஒரு ஈரமான டிஸ்யூவை எடுத்தால், தவறாமல் மூடி வையுங்கள்.
தாடைப் பகுதியில் கவனம் செலுத்தாமல் இருப்பது பெரும்பாலான நேரங்களில் தாடைப் பகுதியை சரியாக துடைத்து எடுக்கமாட்டார்கள். ஆனால் உதட்டிற்கு கீழே உள்ள மடிப்பில் அழுக்குகள் சற்று அதிகம் தேங்கும். ஆகவே அப்பகுதியில் சற்று கவனத்தை செலுத்துங்கள்.
முகத்தைக் கழுவாமல் இருப்பது பயணத்தின் போது ஈரமான டிஸ்யூவை மட்டும் பயன்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் வீட்டை அடைந்ததும், தவறாமல் முகத்தை நீரால் கழுவிட வேண்டும். மேலும் ஈரமான டிஸ்யூவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது.