தோல் குத்தல் பரிசோதனை (Skin Prick Test)
ஒவ்வாமைப் பரிசோதனைகளிலேயே மிகவும் முக்கியமான பரிசோதனை இதுதான். ஒவ்வாமையை ஏற்படுத்துவதாகக் கருதப்படும் 200-க்கும் மேற்பட்ட பொதுவான பொருட்களும் உணவு வகைகளும் திரவ மருந்தாக (ஆன்டிஜன்களாக) தனித்தனியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வாமையை ஏற்படுத்தத் தேவைப்படும் குறைந்தபட்ச அளவுக்கு மருந்து இருக்குமாறு இது தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தைச் செலுத்துவதற்கு ‘இன்சுலின் சிரிஞ்ச்’ போன்ற மெல்லிய ஊசிகள்கொண்ட சிரிஞ்சுகள் இருக்கும். இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி இந்த மருந்திலிருந்து 0.01 மி.லி அளவுக்கு எடுத்து, முன்கையில் அல்லது முதுகில் போட்டுக்கொள்ளலாம்.
இந்த மருந்தை தோலின் மேலோட்ட மாகத்தான் போட வேண்டும். தோலுக்கு இடையில் (Intradermal injection) அல்லது அடியில் போடக் கூடாது. அப்படிப் போட்டால், முடிவுகள் தவறாகிவிடும். இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளும் முன்பு, வழக்கமாக எடுத்துக்கொள்ளும் ஒவ்வாமை மருந்து களையும் ஸ்டீராய்டு மருந்துகளையும் மூன்று நாட்களுக்கு முன்னரே நிறுத்திவிட வேண்டும்.
இந்த மருந்தைத் தோலில் போட்ட அரை மணி நேரத்தில், எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை உள்ளதோ அந்த மருந்து போட்ட இடத்தில் தோல் சிவந்து, தடித்துவிடும். இதன் அளவை 6, 12, 24, 72 மணி நேர இடைவெளிகளில் இதற்கென்றே உள்ள சிறப்பு அளவுகோலில் அளப்பார்கள். அதன்படி எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை உள்ளது, எவ்வளவுத் தீவிரமாக உள்ளது என்று கணித்துவிடலாம்.
இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளும் போது, அதிர்ச்சி ஒவ்வாமை (Anaphylaxis) ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்து நேரவும் அதிக வாய்ப்பு உள்ளதால், அதைச் சமாளிக்க அவசரசிகிச்சைக்கான மருந்துகளையும் உயிர் காக்கும் கருவிகளையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். எனவே, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக்கூடங்களில் அல்லது மருத்துவமனைகளில் மட்டுமே இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
பட்டைப் பரிசோதனை (Patch Test)
இதுவும் தோலில் செய்யப்படும் பரிசோதனைதான். இதில் ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளதா எனத் தெரிந்துகொள்ள முடியும். தோலில் ஒட்டிக்கொள்ளும் தன்மையுள்ள ஒரு பட்டையில் இந்த ஒவ்வாமைப் பொருட்களைப் புதைத்து வைத்திருப்பார்கள். இவைதான் ஆன்டிஜன்களாகச் செயல்பட்டு பரிசோதனை முடிவைத் தெரிவிக்கும்.
இந்தப் பட்டைகளை முன் கையில் அல்லது முதுகில் ஒட்டிக்கொள்ளலாம். அப்போது அதிலுள்ள ஆன்டிஜன்கள் தோலில் படும். எந்த ஆன்டிஜனுக்கு ஒவ்வாமை இருக்கிறதோ, அந்த இடத்தில் தோல் சிவந்து, தடித்து, லேசாக அரிக்கும். சிலருக்கு இதை ஒட்டிய உடன் தாங்க முடியாத அளவுக்கு அரிப்பு ஏற்படும். அப்போது பட்டையை உடனே கழற்றிவிட வேண்டும். அரிப்பு இல்லை என்றால் மட்டும் இரண்டு நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும். பட்டையில் தண்ணீர்/ஈரம் பட்டுவிடக் கூடாது. அதற்குப் பிறகு அதைக் கழற்ற வேண்டும்.
தோலில் காணப்படும் சிவந்த தடிப்புகளுக்கு உரிய ஆன்டிஜன் எது என்று பார்த்து, அது தயாரிக்கப்பட்ட பொருளுக்கு ஒவ்வாமை உள்ளது என்று உறுதிசெய்யப்படும். இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளும் முன்பு, வழக்கமாக எடுத்துக்கொள்ளும் ஒவ்வாமை மருந்துகளை மூன்று நாட்களுக்கு முன்னரும் ஸ்டீராய்டு மருந்துகளை ஒரு மாதத்துக்கு முன்னரும் நிறுத்திவிட வேண்டும்.
ஐஜிஇ பரிசோதனைகள் (IgE Tests)
இந்தப் பரிசோதனையின்போது ரத்தத்தில் ஐஜிஇ அளவைப் பரிசோதிக்கிறார்கள். இதன் மொத்த அளவு எவ்வளவு (Total IgE), தனித்தனி ஒவ்வாமைப் பொருளுக்கு இதன் அளவு (Specific IgE) என்ன என்று இரண்டு விதமாகப் பரிசோதித்து, எந்தப் பொருளுக்கு ஒவ்வாமை உள்ளது என்று கணிக்கப்படுகிறது.
‘ராஸ்ட்’ பரிசோதனை (RAST- RadioAllergoSorbent Test)
இதுவும் தனித்தனி ஒவ்வாமைப் பொருளுக்கு ஐஜிஇ அளவு (Specific IgE) எவ்வளவு உள்ளது என்று பரிசோதிக்கும் பரிசோதனைதான் என்றா லும் நவீனமான பரிசோதனை இது. முடிவு துல்லியமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கண்ஒவ்வாமை மற்றும் குளூட்டன்அலர்ஜி உள்ளவர்களுக்கு இது பெரிதும் பயன்படுகிறது.
ஐஜிஏ பரிசோதனை (IgA Test)
இந்தப் பரிசோதனையின்போது ரத்தத்தில் ஐஜிஏ அளவைப் பரிசோதிக்கிறார்கள். இது மொத்தத்தில் எவ்வளவு (Total IgA) உள்ளது என்று அளந்து அதற்கேற்ப ஒவ்வாமைப் பொருளைக் கணிக்கிறார்கள். குளூட்டன் அலர்ஜி உள்ளவர் களுக்கு இது மேற்கொள்ளப்படுகிறது.
டிரிப்டேஸ் பரிசோதனை (Tryptase Test)
மருந்து, மாத்திரைகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை இது. குறிப்பிட்ட மருந்தை உடலில் சிறிதளவு செலுத்தி ரத்தத்தில் டிரிப்டேஸ் என்சைமின் அளவு அளந்து பார்க்கப்படும். இந்த அளவு அதிகமாக இருந்தால், அந்த மருந்துக்கு ஒவ்வாமை இருக்கிறது என்று பொருள்.