கிட்டத்தட்ட 74 நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் கணினிகளை கைப்பற்றி உலகையே அச்சுறுத்தி வருகிறது ‘ரான்சம்வேர்’ என்கிற இணைய மால்வேர். இந்த மால்வேரில் உள்ள டூல்ஸ்கள் அமெரிக்கப் பாதுகாப்பு துறை பயன்படுத்துகின்ற வகையைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது. எப்படியாவது கணினிக்குள் புகுந்துவிடும் இது, திடீரென்று ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த கணினியையும் கையகப்படுத்திவிடும். பின்னர், ‘பிட்காயின்’ என்கிற டிஜிட்டல் கரன்சி வடிவத்தில் குறிப்பிட்ட அக்கவுன்ட்டில் பணம் செலுத்தினால் மட்டுமே மேற்கொண்டு இயக்கமுடியும். இல்லையெனில், தகவல்கள் அழிக்கப்படும் என மிரட்டும்.
இந்த ‘ரான்சம்வேர்’ இணையத் தாக்குதலுக்கு இங்கிலாந்தில் உள்ள பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. ரஷ்யா, ஸ்பெயின், ஜெர்மனி என பல்வேறு நாடுகளிலும் இணையத் தாக்குல் நடத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ‘ரான்சம்வேர்’ மால்வேர் தாக்குதலா அல்லது, ‘வானா க்ரை’ என்கிற மால்வேரின் தாக்குதலா எனத் தெரியவில்லை. இங்கிலாந்திலும் தென் அமெரிக்க நாடுகளிலும் நடக்க இருந்த பல்வேறு அறுவை சிகிச்சைகள் இந்த இணையம் தாக்குதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் உள்ள இரண்டு புகழ்பெற்ற மருத்துவமனைகள் அவசரப்பிரிவை மூடிவிட்டன. புதிய நோயாளிகளை அனுமதிக்கவும் இல்லை.
வெள்ளிக்கிழமை மதியம் முதல் இந்தத் தாக்குதல் தெரியவர ஆரம்பித்தது. முதலில் மருத்துவக் குழுமங்களை மட்டும் குறிவைத்து தாக்கப்பட்டிருக்கிறது எனத் தகவல்கள் வெளியானது. நேரம் செல்லச் செல்ல அனைத்து வகையான கணினிகளையும் தாக்கத் தொடங்கியிருப்பது தெரியவந்தது. ரஷ்யாதான் இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு எனச் சொல்லப்படுகிறது. ரஷ்யாவை தலைமையாகக்கொண்டு இயங்கும் உலகின் முன்னணி கணினி வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிறுவனமான ‘காஸ்பர்ஸ்கீ’ இந்தத் தகவலை சொல்லியுள்ளது. இந்தியா, உக்ரேன் மற்றும் தைவான் போன்ற நாடுகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. "உங்கள் கணினியும் அதிலுள்ள தகவல்களும் பாதுகாப்பாக இருக்க அதை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்" என காஸ்பர்ஸ்கீ நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இப்படியான ஒரு தாக்குதல் நடக்க இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. எனவே, அதற்கான தடுப்பு அப்டேட்களை மைக்ரோசாப்ட் மார்ச் மாதமே வெளியிட்டது.
இதுவரை 12 பேர் அந்த அக்கவுன்ட்டில் மீட்புத்தொகையை கட்டியுள்ளனர். 250 டாலர்கள் முதல் 500 டாலர்கள் வரை இதில் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே அமெரிக்க அரசின் முன்னாள் இணைய ஹேக்கரும், தற்போது மாஸ்கோ விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்திருப்பவருமான எட்வர்ட் ஸ்னோடன், ‘இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கப் பாதுகாப்பு துறையின் குளறுபடியே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். விண்டோஸ் நிறுவனத்தின் கணினிக்குள் புகுந்து உளவுப் பார்க்கும் மென்கருவிகளை அமெரிக்கப் பாதுகாப்புத்துறை வைத்திருக்கிறது. அசட்டையாக இருந்ததால், அது எதிரிகளின் கைகளுக்கு போய், இப்படியான தாக்குதல் சாத்தியமாகியுள்ளது’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.