கவர் ஸ்டோரி
மாதவிலக்கு அவஸ்தைகளை குடும்பத்தினர் உணர்ந்து பெண்களை அவர்கள் புரிந்துகொள்ளவும், முதலில் பெண்களே அவர்களைப் புரிந்துகொள்ளவும் வேண்டும் என்றால் PMS பற்றி நாம் பேசியாக வேண்டும். பி.எம்.எஸ் பற்றி விளக்குகிறார் மகளிர் சிறப்பு மருத்துவர் மைதிலி பாலாஜி.”ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிலக்கு வரும் 2 முதல் 14 நாட்களுக்கு முன்பு உடலளவிலும் மன அளவிலும் அசௌகரியமான பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த திடீர் மாற்றங்கள் நடைபெறும்போது பெண்களே அதை உணர்வதில்லை. இந்த மாற்றங்கள் சுமார் 70 சதவீதப் பெண்களின் அன்றாடச் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகிறது.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் இந்த அசௌகரியங்கள் இயற்கையான இயக்கத் தைப் பாதிக்கும்போது நோய் அறிகுறிகளாகவும் வெளிப்படுகின்றன. மரபுவழி, சத்துக்குறைவு, மனம் மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் இது அமையலாம்.”மாதவிலக்குக்கு முந்தைய அறிகுறிகள் என்னென்ன ?”இடுப்பு வலி, வயிறு உப்புசம், வயிற்றுவலி, பசி உணர்வில் மாற்றம், மார்பகங்களில் வலி அல்லது கனமாகத் தோன்றுவது, உடல் மற்றும் மனச் சோர்வு, தலைவலி, மூட்டு மற்றும் தசைகளில் வலி, முதுகு வலி, உடலில் நீர் கோர்த்துக் கொண்டு உடல் உப்புவது, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இவை உடல்நிலையில் ஏற்படும் அறிகுறிகள். சில பெண்களுக்கு மாதாமாதம் மைக்ரேன் தலைவலிகூட வருவதுண்டு. இந்த அறிகுறிகளில் மாதத்துக்கு மாதம் வித்தியாசமும் ஏற்படலாம்.”PMS எப்படி கண்டறியப்படுகிறது?
”நடைமுறையில் இதற்கான பரிசோதனை எதுவும் இல்லாவிடினும் தைராய்டு பரிசோதனை மேற்கொள்கிறோம். ஏனெனில், தாய்மைக்குத் தயாராகும் வயதில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு தைராய்டு அறிகுறிபோன்றே PMS-லும் உடல் எடை கூடுகிறது. தைராய்டு பிரச்னை இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் PMS பிரச்னைக்கான சிகிச்சையை தொடங்குவோம்.அறிகுறிகளைப் பற்றி டைரியில் குறிப்பெடுக்கச் சொல்லியும் நோயாளிகளை அறிவுறுத்துகிறோம். அந்த குறிப்புகளை வைத்து, ஒவ்வொரு மாதமும் தோன்றும் அறிகுறிகள் ஓன்றுபோல இருக்கின்றதா அல்லது மாதாமாதம் வேறுபடுகி-்றதா என்பதையும் கவனிக்கிறோம்.”சிகிச்சைகள் என்னென்ன?
”மாதவிலக்கு காலத்துக்கு முன்பு உண்டாகும் நீர்த்தேக்கத்தால்(water retention) பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு மற்றும் வலி ஏற்படும். நீர்த்தேக்கத்தை தடுக்க உணவில் உப்பை குறைத்தல், சத்தான காய்கறிகள், பழங்கள் எடுத்துக் கொள்ளுதல், காபியை அறவே தவிர்ப்பது போன்ற உணவுப் பழக்கங்களோடு தவறாமல் உடற்பயிற்சியும் அவசியம். சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகளையும் அதிகமான ஈஸ்ட்ரோஜன் சுரப்பை கட்டுப்படுத்த ப்ரொஜஸ்ட்ரோன் மாத்திரைகளையும் பரிந்துரைக்கிறோம்.”
அச்சம் தேவையில்லை!
கீதா இளங்கோவன் (பெண்ணிய செயற்பாட்டாளர், ‘மாதவிடாய்’ ஆவணப்படத்தின் இயக்குநர்) :”பெண்களின் உடலை தூய்மைப்படுத்த இயற்கை அளித்த வரப்பிரசாதம் மாதவிலக்கு. முதலில் பூப்பெய்தும் குழந்தைகளிடமிருந்து இதற்கான கற்றலை தொடங்கவேண்டும். ‘நீ உடலளவில் பெண்ணாகிவிட்டாய், இது ஒரு உயிரியல் மாற்றம், அதற்காக வேதனைப்படவோ, அச்சம் கொள்ளவோ தேவையில்லை’ என்பதை பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.வெளியில் செல்லக்கூடாது, சைக்கிள் ஓட்டக்கூடாது, ஓடி ஆடி விளையாடக்கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் வேறு. இந்த நிலையையெல்லாம் மாற்றி அந்த நேரங்களில் சத்தான உணவை கொடுத்து, ஓடி, ஆடி விளையாடச் செய்தாலே அவர்களது மன அழுத்தம் குறைந்துவிடும்.
அதுமட்டுமல்ல, பல பள்ளிகளில் சுகாதாரமான டாய்லெட் வசதிகள் கூட கிடையாது. தண்ணீர் குடித்தால், சிறுநீர் கழிக்க வேண்டுமே, சிறுநீர் கழிக்கச் சென்றால் நாப்கினை மாற்றவேண்டுமே என்றெல்லாம் கவலைப்பட்டு தண்ணீர் குடிப்பதையே மறுக்கும் சிறுமிகள் இருக்கிறார்கள்.பள்ளிச் சிறுமிகளின் நிலை இவ்வாறென்றால், பெரும்பாலான அலுவலகங்களில் நாப்கினை சுகாதாரமான முறையில் அகற்றுவதற்கான வசதிகள் கிடையாது. இந்த காரணங்களுக்காகவே அந்த மூன்று நாட்களை நினைத்து அரண்டு போயிருக்கும் பெண்களே அதிகம்.
பெண்களின் இந்த பிரச்னைகளைப் புரிந்துகொண்டு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாலே நல்ல மாற்றம் ஏற்படும். வீட்டில் உள்ளவர்கள் பரிவுடன் நடந்து கொள்வதும், அலுவலகத்தில் சாதகமான சூழலும் அவசியம். பெண்ணுக்குப் பெண் வலி அளவும் வேறுபடும் என்பதால் அதிகமான மனஅழுத்தத்துக்கும், உடல் உபாதைகளுக்கும் ஆளாகும் பெண்களுக்கு விடுமுறை தேவை.மாதவிலக்கு, பிரசவம், கருச்சிதைவு, மெனோபாஸ் இப்படி எதுவாக இருந்தாலும் ‘அது இயற்கைதானே’ என்று குடும்பத்தினர் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் பெண்ணைச்சுற்றி இயங்கும் நீங்கள் அவளுக்குச் செய்யும் மிகப்பெரிய கொடுமை. எனவே, பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்… அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்!”