விளம்பரங்களைப் பார்த்து கண்டகண்ட ஷாம்புக்களை, கண்டிஷனர்களைப் பயன்படுத்தி பொடுகை (Dandruff) விரட்டப்போய் முடியை இழப்பவர்கள் அதிகம். பொடுகுப் பிரச்னை ஏன் ஏற்படுகிறது? அதைத் தவிர்க்க வழிகள் என்னென்ன?
பொடுகு எப்படி உருவாகிறது?
பொடுகு என்பதை இறந்த செல்கள் எனலாம். உடலில் உள்ள செல்கள் குறிப்பிட்ட இடைவெளியில் உதிர்ந்து, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. நம் தலையின் மேற்புறத்தில் உள்ள தோல் செல் உதிர்ந்து, சருமம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் பயணத்தில் சிலருக்கு அளவுக்கு அதிகமாக உதிர்ந்து அரிப்பை ஏற்படுத்துவதை பொடுகு என்கிறோம். பொடுகு என்றால், சுத்தம், சுகாதாரமில்லாத நிலையால்தான் வருகிறது என்று கருத வேண்டியது இல்லை. இது பெரும்பாலானவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைதான்.
பொடுகுப் பிரச்னை ஏற்பட, உடல் மற்றும் மனம் என பல்வேறு காரணங்கள் உள்ளன. பொடுகுத் தொல்லை இருக்கும்போது, தலையில் செதில் செதிலாக தோல் படலம் ஏற்படுகிறது. நீண்ட நாள் பொடுகுப் பிரச்னையால், கண்கள், காதுகள், மூக்கு மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள சருமத்தையும் அது பாதிப்படையச் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.
காரணங்கள்
சருமத்தின் தன்மை: வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, எண்ணெய்ப் பசை சுரக்கும் செபாசியஸ் சுரப்பியின் (sebaceous secretions) குறைபாட்டால் பொடுகு ஏற்படும். எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கு, அதிகப்படியான சுரப்பு காரணமாக, பூஞ்சைத்தொற்று (Fungus) உருவாகி, பொடுகை ஏற்படுத்தும்.
சுகாதாரக் குறைபாடு: தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக்கொள்வது, முறையாகப் பராமரிக்காதது.
தோல் ஒவ்வாமை: சிலருக்குத் தோல் ஒவ்வாமை பிரச்னை இருக்கும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் சோப்பு அல்லது ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்துவதால், பொடுகு ஏற்படலாம்.
ஊட்டச்சத்துக் குறைபாடு: சில வகை உணவுகள் சருமப் பிரச்னைக்கு வழிவகுக்கும். துத்தநாகம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் குறைந்த உணவுகள் உட்கொள்வது, எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது பொடுகுக்குக் காரணம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தட்பவெப்பநிலை மாறுபாடு: குளிர் காலங்களில் வியர்வையே இன்றி இருப்பதும், கோடை காலத்தில் அதிகமாக வியர்ப்பதும் சிலரின் சருமத்தைப் பாதிக்கும். இந்த தட்பவெப்ப நிலை மாறுபாடுகளாலும் சிலருக்கு பொடுகு ஏற்படலாம்.
ஹார்மோன் சமச்சீரின்மை: பொடுகு, ஏற்பட ஹார்மோன் சமச்சீரின்மையும் ஒரு காரணம். ஆண்களுக்கு சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) மற்றும் பெண்களுக்கு சுரக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் (Androgen) ஆகிய ஹார்மோன் சீரின்மை காரணமாக இது ஏற்படலாம்.
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் தினசரி இரண்டு முறை குளிக்கலாம். பொடுகு என்பது ஒருவகையான தூய்மைக் குறைபாடுதான். நோய் அல்ல. இந்தப் பிரச்னையைக் கவனிக்காமல்விட்டால், சொரியாசிஸ் என்ற தோல்அழற்சி நோய் ஏற்படும்.
எந்த ஷாம்பு பெஸ்ட்?
பொடுகைக் கட்டுப்படுத்த கேடோகோனசால் (Ketoconazole) ஒரு சிறந்த பூஞ்சை எதிர்ப்பு (Anti-fungal) மூலப்பொருள். இது, எந்த வயதினரும் பயன்படுத்த ஏற்றது.
செலினியம் சல்ஃபைட் (Selenium sulfide) உள்ள ஷாம்பு, தலையில் அளவுக்கு அதிகமான எண்ணெய்கள் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. துத்தநாக பைரித்தியோன் (Zinc pyrithione) பூஞ்சையைக் கட்டுப்படுத்துகிறது.
நிலக்கரி தார் (Coal tar) ஓர் இயற்கையான பூஞ்சை எதிர்ப்புப் பொருள். சருமத்தின் மேற்புறத்தில் இறந்த செல்களை உதிர்த்துவிட்டு, சரும செல்களின் தேவையற்ற பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும். சாலிசிலிக் அமிலங்கள் (Salicylic acids) தோல் செல்களின் உற்பத்தியின் வேகத்தைக் குறைக்கிறது. இந்த ரசாயனங்கள் கலந்துள்ள ஷாம்புக்களை பயன்படுத்துவதன் மூலம் பொடுகைக் கட்டுப்படுத்தி, தவிர்க்க முடியும்.
கவனம்: தோல் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு துத்தநாக பைரித்தியோன், நிலக்கரி தார், சாலிசிலிக் அமிலங்கள் ஆகிய மூலப்பொருட்களால் தோல் சிவத்தல், எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். எனவே, இதுபோன்ற பிரச்னைகளுக்கு மருத்துவர் ஆலோசனையின் படி, சருமத்துக்கேற்ற ஷாம்புகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
–
பொடுகுத் தொல்லையைத் தவிர்க்க!
*வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது உடல்நலத்துக்கு நல்லதுதான். ஆனால், பொடுகுத்தொல்லை உள்ளவர்களுக்கு எண்ணெய்ப் பசை அதிகரிக்கும் என்பதால், அவர்கள் இதைத் தவிர்க்கலாம்.
*கொழுப்புச்சத்து நிறைந்த நெய், பால், வெண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட் களைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
*டீன் வயதில் உடலில் அதிகமான ஹார்மோன் சுரப்பு ஏற்படும். பொதுவாக, பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பினால் அதிகமான எண்ணெய் சுரக்கும். பொடுகுத் தொல்லையும் ஏற்படும். எனவே, எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
*தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஷாம்பு உபயோகிப்பது நல்லது. அதற்காக, குளிக்கும்போது கடுமையாக அழுத்தித் தேய்க்க வேண்டும் என்பது இல்லை. சாதாரணமாக உடலுக்கு சோப்பு தேய்த்துக் குளிப்பது போன்று தலை முடிகளை தேய்த்துக் குளித்தாலே போதுமானது. அதிக நேரம் தலையில் ஷாம்புவை ஊறவைத்துக் குளிக்க வேண்டாம்.
*குளிக்கும்போது, தேவையான ஷாம்புவை எடுத்து ஒரு கப் தண்ணீரில், நன்றாகக் கலந்து உபயோகிக்க வேண்டும்.
*குளிப்பதற்கு அதிக உப்புத்தன்மை கொண்ட நீரைத் தவிர்க்கவும்.
*தலைமுடிக்கு சோப் பயன்படுவதையும் அடிக்கடி ஷாம்புவை மாற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.
*அதிகமாக நுரை ஏற்படுத்தும் ஷாம்புக்களைப் பயன்படுத்த வேண்டாம்.
*உடல் உஷ்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க, நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறி, தண்ணீர், இளநீர் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.