26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
24
மருத்துவ குறிப்பு

பல் கவனம்… உடல்நலத்துக்கு உதவும்! நலம் நல்லது!

24

ன்றைக்கோ ஒருநாள் `சுரீர்’ என பல்லில் வலி. அப்போதுதான் நம் பகுதியில் பல் மருத்துவர் அருகில் எங்கே இருக்கிறார் என நினைவில் தேட ஆரம்பிப்போம். அவரைத் தேடி ஓடுவோம். பல் மருத்துவ உலகம் என்ன சொல்கிறது தெரியுமா?… ‘பற்களின் பாதுகாப்பு பிறந்தவுடன் தொடங்கியிருக்க வேண்டும்’ என்கிறது அழுத்தம் திருத்தமாக! சிசுவுக்கு, தாய் பால் புகட்டியதும் மிருதுவான, சுத்தமான துணியால் மிக மிக மென்மையாக ஈறுகளைத் துடைத்துவிடுவார் இல்லையா? அப்போது தொடங்குகிறது பல் பராமரிப்பு.
பற்களை பாதுகாப்பது தொடர்பான சில அத்தியாவசியமான விஷயங்கள் இங்கே…
* ஆலும் வேலும் மட்டும் அல்ல… மருதம், இலந்தை, இலுப்பை, இத்தி, கருங்காலி… எனப் பல துவர்ப்புத் தன்மையுள்ள மூலிகைக் குச்சிகளை, அதன் பட்டையோடு சேர்த்து பல் துலக்கப் பயன்படுத்தியது நம் பாரம்பர்யம். ஆலங்குச்சியில் குளிர்ச்சி, இலந்தையில் இனிய குரல்வளம், இத்தியில் விருத்தி, இலுப்பையில் திடமான செவித்திறன், நாயுருவியில் புத்திக்கூர்மை, தைரியம், மருதத்தில் தலைமயிர் நரையின்மை, ஆயுள் நீட்டிப்பு… என பல்குச்சி மூலம் சகல நிவாரணங்களைச் சொல்லிக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். பல் துலக்க, துவர்ப்புத்தன்மை பிரதானமாக இருக்க வேண்டும். நம் முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கும் இந்தக் குச்சிகள் எல்லாம் அந்தச் சுவையைத்தான் தந்தன. துவர்ப்புச் சுவை தரும் தாவர நுண்கூறுகள் அனைத்தும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும், எதிர் நுண்ணியிரித் தன்மையையும், ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மையையும் தருபவை என்பது தாவரவியலாளர்கள் கண்டறிந்தது.

25

* துவர்ப்புச் சுவையுடைய மெஸ்வாக் குச்சி மரத்தின் பெயர் `உகாமரம்.’ வழக்குமொழியில் அதை `குன்னிமரம்’ என்பார்கள். உகா குச்சியின் பயனை நாம் மறந்துவிட்டோம்; பேஸ்ட் தயாரிக்கும் கம்பெனிகள் மறக்கவில்லை. மூலிகைப் பற்பசையில் அதற்கு என தனிச் சந்தை உண்டு. ஆக, பல் பாதுகாப்புக்கு துவர்ப்புச் சுவை நல்லது.
* `திரிபலா சூரணம்’ எனும் மூலிகைக் கூட்டணி, வாய் கொப்பளிக்கவும், பல் துலக்கவும் எளிதான, மிக உன்னதமான ஒரு மூலிகைக் கலவை.
* கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கூட்டணி பல் ஈறில் ரத்தம் வடிதல், வலி, ஈறு மெலிந்து இருத்தல், கிருமித்தொற்று… போன்ற வாய் மற்றும் பற்கள் பிரச்னைக்கு பலன் அளிக்கும் எளிய மருந்து.
* பற்கள் கிருமித் தொற்றால், அழற்சியால் பாதிப்பு அடையும்போது, அதை நீக்காமல் பாதிப்படைந்த சதைப்பகுதியை மட்டும் நீக்கி, இயல்பாக பல்லைப் பாதுகாக்கும் சிகிச்சைதான் `ரூட் கேனால்’. குடும்ப மருத்துவர் பரிந்துரைத்தால், அந்தச் சிகிச்சையை மேற்கொண்டு பற்களைப் பாதுகாக்கலாம்.
* `Periodontitis’ எனும் அழற்சி பலருக்கு வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்தப் பிரச்னை அதிகம். ஆனால், வாய் துர்நாற்றத்துக்கு பல் பிரச்னை மட்டும் காரணம் அல்ல. அஜீரணம், நாள்பட்ட குடல்புண், ஈரல், கணைய நோய்கள்கூட காரணங்களாக இருக்கலாம். இதற்கும் என்ன பிரச்னை எனத் தெரிந்துகொள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.
பொதுவான பராமரிப்பு...
* நள்ளிரவானாலும், குழந்தைக்குப் பால் கொடுத்த பிறகு, குழந்தையின் ஈறுகளைச் சுத்தம் செய்யாமல் விடக் கூடாது.
* குழந்தைகளுக்கு அனைத்துப் பற்களும் முட்டிக்கொண்டு வெளியே வந்தவுடன், அவர்களுக்கு தினமும் இரு முறை பல் துலக்கும் பயிற்சியைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு என தனியாக ஃப்ளூரைடு கலக்காத பற்பசைகளைப் பயன்படுத்தலாம். `ஈ… காட்டு’ என குழந்தைகளைப் பயமுறுத்தி, பல் துலக்கப் பயிற்றுவிக்கக் கூடாது. பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை ஒரு குதூகலமான விளையாட்டுப்போல அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
* பற்பசையை, பிரஷ்ஷில் கணிசமான அளவில் பிதுக்கி, பற்களில் அப்பி, சுவரைப் பட்டி பார்க்க உப்புத்தாள் போட்டு தேய்ப்பதுபோல தேய்க்கக் கூடாது. பல் துலக்க, ஒரு நிலக்கடலை அளவுக்கான பற்பசையே போதுமானது.

26

* நம்மில் பலருக்கு, இன்னமும் பற்களின் இடையே சிக்கியிருக்கும் துணுக்குகளை நீக்கும் Dental Floss (பற்களுக்கு இடையே மெல்லிய இழையைவிட்டு சுத்தம் செய்யும் பயிற்சி) பழக்கம் தெரியாது. ஒருவருக்கு கல்யாணம் நிச்சயமாகிறதா? உடனே, பல் மருத்துவரிடம் போய், `கல்யாணம்… பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும்’ என்று நிற்பார். மருத்துவர், பற்களைச் சுத்தம் செய்து பல அழுக்குகளை வெளியே எடுக்கும்போதுதான், ‘இத்தனை வருஷம் இவ்வளவு அழுக்கா நம்ம வாய்க்குள்ள இருந்துச்சு?’ என வந்தவர் நொந்துபோவார். எனவே அடிக்கடி Dental Floss செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
* பராமரிப்பு என்பதையும் தாண்டி, பல்லைப் பாழடிக்கும் பழக்கங்களில் இருந்து விடுபடுவதுதான் பற்கள் பாதுகாப்புக்கான முதல் படி.
* சிலர் சாப்பிட்ட பிறகு, உதடுகளை மட்டும் தேய்த்து, துடைத்துக்கொள்வார்கள். நன்றாக வாயைக் கொப்பளிக்கவேண்டியது முக்கியம். ஆரோக்கியம் தரும் வைட்டமின் சி சத்துள்ள பழங்களைச் சாப்பிட்டால்கூட, வாயைக் கொப்பளிக்காமல்விட்டால், பழங்களின் அமிலத் துணுக்குகள் பற்களில் கறையை உண்டாக்கும்; பல் எனாமலைச் சுரண்டிவிடும்.

Related posts

மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு பிரச்சனைக்கு தீர்வு

nathan

ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோர்களிடம் மறைக்கும் 6 விஷயங்கள்!!!

nathan

தூக்கத்தில் பற்களைக் கொறிக்கும் பழக்கம் உள்ளதா? உங்களுக்குதான் இந்த விஷயம்…

nathan

அன்பை அதிகரிக்கும் அன்பளிப்புகள்

nathan

இந்த இடத்தில் இப்படி அறிகுறி இருந்தால் புற்றுநோய் தாக்கியிருக்கும் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

அதிகமாக பதட்டமடைவதனால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் மற்றும் அதிலிருந்து வெளிவருவதற்கான வழிகள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல்நலம் காக்கும் நல்லெண்ணெய்யின் பயன்கள்…!

nathan

தெரிந்துகொள்வோமா? இப்படியெல்லாம் செஞ்சா இரட்டைக் குழந்தை பிறக்கும்-ன்னு சொன்னா நம்பாதீங்க…

nathan

‘பிரா’ப்ளம் சால்வ்டு!

nathan