பரிமாறும் அளவு – 3 நபருக்கு
தேவையான பொருள்கள் –
பாஸ்மதி அல்லது சீரக சம்பா அரிசி – 2 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
சிக்கன் – 250 கிராம்
கொத்தமல்லி தழை மற்றும் புதினா – 1/2 கப்
மஞ்சள் பொடி – 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் – 1 மேஜைக்கரண்டி
மல்லித் தூள் – 1 மேஜைக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
தயிர் – 2 மேஜைகரண்டி
எலும்பிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டி
தண்ணீர் – 3 3/4 கப்
உப்பு – தேவையான அளவு
அரைக்க –
இஞ்சி(துருவியது) – 2 மேஜைக்கரண்டி
பூண்டு(துருவியது) – 2 மேஜைக்கரண்டி
பச்சை மிளகாய் – 3 அல்லது 4
பட்டை – 2
கிராம்பு – 2
சோம்பு – 1 மேஜைக்கரண்டி
தாளிக்க –
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
நெய் – 3 மேஜைக்கரண்டி
பட்டை – 2
கிராம்பு – 2
பிரிஞ்சி இலை – 2
ஏலக்காய் – 2
சோம்பு – 1 மேஜைக்கரண்டி
செய்முறை –
அரிசியை கழுவி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை நன்றாக கழுவி சிறியதாக வெட்டி கொள்ளவும். கொத்தமல்லி தழை, புதினாவை சிறியதாக வெட்டி கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் மற்றும் சோம்பு போட்டு தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.
அதன் பின் சிக்கன், உப்பு, மஞ்சள் பொடி, சீரகத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா தூள் போட்டு கிளறி விடவும்.
கொத்தமல்லி தழை, புதினா, தயிர் மற்றும் எலும்பிச்சை சாரை சேர்த்து சிக்கன் பாதி வேகும் வரை கிளறி விடவும்.
சிக்கன் பாதி வெந்ததும் அதனுடன் 3 3/4 கப் தண்ணீரை சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியை போட்டு கிளறி விட்டு பாத்திரத்தை மூடி விடவும். தீயை குறைத்து கொள்ளவும்.
10 – 15 நிமிடம் வரை கொதித்து தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைக்கவும். அடி பிடிக்காமல் இருக்க நடுவில் ஓரிரு முறை மெதுவாக கிளறி விடவும்.
அடுப்பில் இருந்து இறக்கிய பின்னர் ஒரு 15 நிமிடம் கழித்து மூடியை திறந்து மெதுவாக கிளறி விடவும். கொத்தமல்லி தழையைத் தூவி பரிமாறலாம்.
குறிப்புகள் –
சிக்கனை மசாலா பொடிகள், தயிர், எலுமிச்சை சாருடன் 30 நிமிடம் ஊற வைத்தும் சேர்க்கலாம்.
பிரஷர் குக்கரில் செய்தால் 2 அல்லது 3 விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.
காரமாக விரும்பினால் 1 தேக்கரண்டி மிளகாய் தூளை சேர்த்து செய்யலாம்.