பொருளாதார விஷயத்தில் சொந்தக் காலில் நிற்கும் பெற்றோர் என்றாலும், பணி ஓய்வு காலத்தில் உரிய வழிகாட்ட வேண்டியது பிள்ளைகளாகிய நமது கடமை.
பொருளாதார விஷயத்தில் உதவ வேண்டியது பிள்ளைகளின் கடமை
உங்கள் தந்தை அல்லது தாய் பணி ஓய்வு பெறப் போகிறாரா? அப்படியானால், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் அவருக்கு உதவலாம்.
பொதுவாக, பெற்றோர் தங்களின் ஓய்வு காலத் திட்டங்கள் குறித்துத் தங்கள் பிள்ளைகளிடம் விவாதிப்பதை அவ்வளவாக விரும்புவதில்லை என்பது உண்மை. அது, பொருளாதார விஷயத்தில் தங்களின் குறைபாடுகளை வெளிக்காட்டிவிடும் என்று அவர்கள் கருதுகிறார்கள். தமது உண்மையான பொருளாதார நிலை என்ன என்று பிள்ளைகளிடம் வெளிப்படையாகப் பேச பல பெற்றோர் தயக்கம் காட்டுகிறார்கள்.
எனவே நீங்கள் இந்த விஷயத்தை மிகவும் கவனமாகவும், கையில் நடைமுறை சார்ந்த திட்டங்களை வைத்துக்கொண்டும்தான் அணுக வேண்டும்.
பெற்றோர் மட்டுமல்ல, உங்களுக்கும் கூட பணம் சார்ந்த விஷயத்தை பெற்றோருடன் பேசுவதற்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருக்கும். சில சங்கடமான, கடுமையான ஆனால் நிதர்சனமான விஷயங்களையும் பேச வேண்டியிருக்கும்.
எப்படியிருந்தாலும், தந்தை அல்லது தாய், பணி ஓய்வு பெறும் முன்பே அதுகுறித்துப் பேசி தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
அதற்கு உதவும் வழிகாட்டி இதோ…
என்னென்ன செலவுகள்?: பணி ஓய்வு பெறும் பெற்றோருக்கு மாதம் எவ்வளவு பணம் தேவைப்படும், அதை எப்படிப் பெறப் போகிறார்கள் என்று கேளுங்கள். முதலில் நீங்கள் கீழ்க்கண்ட சில அடிப்படைக் கேள்விகளைக் கேட்கலாம்:
ஓய்வுக்குப் பிறகு நீங்கள் எங்கே வசிக்க விரும்புகிறீர்கள்?
என்னுடன் (மகன் அல்லது மகளுடன்) வசிக்க விரும்புகிறீர்களா அல்லது தனியே ஒரு வீட்டில் வசிக்க விரும்புகிறீர்களா?
சொந்தமாக உள்ள தனி வீட்டில் வசிக்க விரும்புகிறீர்கள் என்றால், அதைப் புதுப்பிக்க, பழுதுநீக்க வேண்டுமா? அதற்கென்று பணம் எதுவும் ஒதுக்கியிருக்கிறீர்களா?
நான் உங்களுக்கு பண உதவி எதுவும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
வருமான வழிகள்: பணிபுரியும் காலத்தைப் போல, பணி ஓய்வுக் காலத்திலும் வருமானம் என்பது மிகவும் முக்கியம். ‘உங்களுக்கு ஓய்வூதியம் எதுவும் வருமா? அப்படியென்றால் எவ்வளவு ஓய்வூதியம் வரும்?’ என்று கேட்டறியுங்கள்.
‘பிக்சட் டெபாசிட்’ (எப்.டி.) போன்றவற்றின் மூலம், மாற்று வருமான வழி எதையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்களா என்று அறியுங்கள். அவர்கள் சின்னச்சின்னதாக நிறைய ‘எப்.டி.’க்கள் போட்டு வைத்திருந்தால், எல்லா தொகையையும் ஒன்றிரண்டாக மாற்றச் சொல்லுங்கள். பாதுகாப்பான மாற்று வழிகள் இருந்தாலும் கூறுங்கள்.
முதலீட்டு விவரங்கள்: ஓய்வு பெறும் உங்கள் பெற்றோர், முதலீடுகள் எதுவும் செய்திருக்கிறார்களா என்று கேட்டறிந்து கொள்ளுங்கள். அவர்களின் மாதாந்திரச் செலவுகளுக்கு உதவும் வகையில் அந்த முதலீடுகளை ஒழுங்கு படுத்திக்கொடுங்கள். அவர்கள் ஓய்வு பெறும் நேரத்தில் காப்பீட்டுத் தொகை எதுவும் முதிர்ச்சி அடையப் போகிறது என்றால், அதை எடுத்து வேறு எந்த திட்டத்திலாவது முதலீடு செய்ய விரும்புகிறார்களா என்று கேட்டு, அதற்கு உதவி செய்யுங்கள்.
கடன்கள்: உங்கள் பெற்றோர் தனி வீட்டில் வசிக்கிறார்கள், அது வங்கிக் கடனில் கட்டிய அல்லது வாங்கிய வீடு என்றால், ஓய்வுக்கு முன் அந்தக் கடனைக் கட்டி முடித்துவிடுவதே நல்லது. அதேபோல, அவர்களுக்கு வேறு கடன்கள் இருந்தாலும் அவற்றை முடிக்கச் செய்யுங்கள். கடனில் திருப்பிச் செலுத்தவேண்டிய தொகை, அதற்கு இருக்கும் கால அவகாசம் போன்றவற்றை அறிந்து செயல்படுங்கள்.
மருத்துவக் காப்பீடு: நீங்கள் பெற்றிருக்கும் குடும்ப மருத்துவக் காப்பீடு, உங்கள் பெற்றோரையும் உள்ளடக்கியதா? அவர்கள் தனியாக காப்பீடு பெற்றிருக்கிறார்களா? உங்கள் தந்தை அல்லது தாய் பணிபுரியும் நிறுவனத்தால், பணி ஓய்வுக்குப் பின்பும் அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி அளிக்கப்படுமா? அப்படியென்றால், எவ்வளவு காலத்துக்கு?
இவைதான் பணி ஓய்வு பெறும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் விஷயங்கள். உங்களுக்குச் சில தனிப்பட்ட சூழல் கள், விஷயங்களும் இருக்கலாம். அதற்கேற்ப யோசித்து, பெற்றோருடன் கலந்தாலோசித்து முடிவெடுங்கள்.
பொருளாதார விஷயத்தில் சொந்தக் காலில் நிற்கும் பெற்றோர் என்றாலும், பணி ஓய்வு காலத்தில் உரிய வழிகாட்ட வேண்டியது பிள்ளைகளாகிய நமது கடமை.
அப்போதுதானே நமது குழந்தைகள் நாளை நம்மைத் தாங்குவார்கள்?