29.5 C
Chennai
Sunday, Nov 24, 2024
1 2
சிற்றுண்டி வகைகள்

வெரைட்டியாக ருசிக்க… 30 வகை உருளைக்கிழங்கு சமையல்

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குக்கூட பிடித்த உணவு… உருளைக்கிழங்கு. அதில் 30 வகை ரெசிப்பிக்களை செய்து காட்டுகிறார், கரூரைச் சேர்ந்த ப்ரியா பாஸ்கர்.

“ஆரோக்கியத்தை முன்னிறுத்தி, இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிப்பிக்கள் எதிலுமே சுவை யூட்டிகள், கலர் பவுடர், சர்க்கரை, மைதா போன்ற உடலுக்குக் கெடுதல் தரக்கூடிய பொருட்கள் சேர்க்கப்படவில்லை. ருசியுடன் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தரும் இந்த உருளை ரெசிப்பிக்கள், குழந்தைகளுக்கு மட்டுமல்ல… பெரியவர்களுக்கும் பிடிக்கும்” என்று உற்சாகமாகச் சொல்கிறார், கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா பாஸ்கர்.

அவகேடோ உருளை மிக்ஸ்டு சாலட்

தேவையானவை: அவகேடோ பழம் – 1, பெங்களூரு தக்காளி (கனிந்தது) – 1, உருளைக்கிழங்கு – 2, எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, உப்பு – தேவையான அளவு, நறுக்கிய செலரி – கால் கப், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

1

செய்முறை: உருளையை தோல் நீக்கி சிறு சதுரங்களாக நறுக்கி வேகவிடவும். இத்துடன் தோல் நீக்கி மசித்த அவகேடோ பழத்தைச் சேர்க்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் செலரியைச் சேர்த்து வேகவிடவும். இத்துடன் எலுமிச்சைச் சாறு, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். பிறகு, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்தால், சுவையான சாலட் தயார்.

குறிப்பு: வெண்ணெய்ப் பழம் என்று அழைக்கப் படும் அவகேடோ, நல்ல கொழுப்புள்ள சுவையான பழமாகும். இது குழந்தைகளுக்கு நல்லது. அவகேடோ வுடன் பால் சேர்த்து மில்க்‌ஷேக் செய்தால் சுவையாக இருக்கும்.

ஹெல்த்தி உருளை அல்வா

தேவையானவை: வேகவைத்து தோல் நீக்கிய உருளைக்கிழங்கு – 2, முந்திரி – 5, பாதாம் – 5, பொடித்த வெல்லம் – 3 டேபிள்ஸ்பூன், நெய் – 50 கிராம், ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன், பால் – 100 மில்லி.

2

செய்முறை: உருளையை மசித்து பால் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, பாதாமை வறுத்து தனியாக வைக்கவும். அதே நெய்யில் உருளை கலவையைச் சேர்த்து நன்கு வதக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். உருளையுடன் பாகை சேர்த்துக் கலக்கவும். ஏலக்காய்த் தூளையும் சேர்த்து உருளைக்கலவை வாணலியில் ஒட்டாமல், நெய் பிரிந்து வரும்வரை கிளறவும். பிறகு, நெய்யில் வறுத்த நட்ஸைச் சேர்த்துப் பரிமாறவும்.

க்ரீமி உருளை சூப்

தேவையானவை: உருளைக்கிழங்கு – 3, நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, கொத்தமல்லித்தழை – சிறிது, நறுக்கிய தக்காளி – 1, செலரி – சிறிதளவு, நறுக்கிய கேரட் – 1, பால் – 100 மில்லி, மிளகுத்தூள் – தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

3

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் மசித்த கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.

பிறகு காய்ச்சிய பால், தேவையான தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் காய்களை வேகவிடவும். பிறகு உப்பு, மிளகுத்தூள், செலரியைச் சேர்க்கவும். சூப் க்ரீமி பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லித்தழை கொண்டு அலங்கரிக்கவும்.

குறிப்பு: சூப்பை கொதிக்கவிடாமல் மிதமான சூட்டில் தயார் செய்ய வேண்டும்.

உருளை உருண்டைக் குழம்பு

தேவையானவை: உருளைக்கிழங்கு – 2, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – 50 கிராம், துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், நறுக்கிய தக்காளி – 1, காய்ந்த மிளகாய் – 3, பூண்டு – 5 பல், நறுக்கிய சின்னவெங்காயம் – 30 கிராம், புளி – அரை எலுமிச்சை அளவு, நறுக்கிய பூண்டு – 1 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, சோம்பு – ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

4

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு பூண்டு, காய்ந்த மிளகாய், சோம்பு, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து கொரகொரவென தண்ணீர் விடாமல் அரைக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, உருளை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு, உப்பு, கெட்டியாகக் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதி வரும்போது 2 உருண்டைகளை உதிர்த்து குழம்பில் விடவும். மீதமுள்ள உருண்டையையும் குழம்பில் சேர்க்கவும். உருண்டைகள் வெந்ததும் இறக்கவும்.

உருளைக்கிழங்கு – தேங்காய் – முந்திரி கூட்டு

தேவையானவை: பெரிய உருளைக் கிழங்கு – 2, பச்சை மிளகாய் – 3, ஊறவைத்த முந்திரி – 7, பூண்டு – 3 பல், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1, இஞ்சி – சிறு துண்டு, தக்காளி (பொடியாக நறுக்கியது) – 1, சோம்பு – அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 50 கிராம், பட்டை – 2 இஞ்ச் அளவு, சீரகம் – 1 டீஸ்பூன், கிராம்பு – 2, மல்லி (தனியா) – 1 டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு, கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

5

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசிக்கவும். தேங்காய், 2 பச்சை மிளகாய், மல்லி (தனியா), இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து நைஸாக அரைக்கவும். ஊறவைத்த முந்திரியை விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும். மசித்த உருளையை சேர்த்து வேகவிடவும். பிறகு தண்ணீர், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

உருளைக்கிழங்கு – பாலக்கீரை கட்லெட்

தேவையானவை: உருளைக்கிழங்கு – 2, பாலக்கீரை – 100 கிராம், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கோதுமை மாவு – 50 கிராம், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 200 மில்லி (பொரிக்க), சீரகத்தூள் – அரை டீஸ்பூன், வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – ஒன்று, கரம்மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், பிரட் க்ரம்ஸ் – 150 கிராம், கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

6
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நன்கு மசிக்கவும். அதனுடன் நறுக்கிய கீரை, வெங்காயம், கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள், சீரகத் தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்துப் பிசையவும். கலவையுடன் 2 டீஸ்பூன் பிரட் க்ரம்ஸை சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாகச் செய்யவும். கோதுமை மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கவும். உருண்டைகள்மீது இந்த பேஸ்டைத் தடவி, மீதமிருக்கும் பிரட் கிரம்ஸில் அவற்றை நன்கு புரட்டியெடுத்து, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும். கட்லெட்டை டொமேட்டோ சாஸ் (அ) புளி சட்னியுடன் சுவைக்கவும்.

குறிப்பு: மைதா மாவு உடலுக்குக் கேடு என்பதால் கோதுமை மாவு சேர்ப்பது நல்லது. பிரெட் க்ரம்ஸுக்குப் பதில் பொடித்த ரஸ்க்கும் பயன்படுத்தலாம்.

உருளை விண்டாலோ

தேவையானவை: மீடியம்சைஸ் உருளைக்கிழங்கு – 3, பெரிய வெங்காயம் (சதுரமாக நறுக்கவும்) – 2, காய்ந்த மிளகாய் – 2, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 5 பல், குடமிளகாய் (சதுரமாக நறுக்கவும்) – 1. விண்டாலோ மசாலா செய்ய: கிராம்பு – 2, சீரகம் – அரை டேபிள்ஸ்பூன், ஏலக்காய் – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பட்டை – 1 இன்ச், கடுகு – அரை டீஸ்பூன், மிளகு – அரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

7

செய்முறை: காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து மைய அரைக்கவும்.பிறகு சதுரமாக நறுக்கிய உருளை மீது தடவி 10 நிமிடம் ஊறவிடவும். மிக்ஸியில் கிராம்பு, சீரகம், பட்டை, ஏலக்காய், மஞ்சள்தூள், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து பொடியாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு சேர்த்து, பொரிந்ததும் வெங்காயம், குடமிளகாயைச் சேர்த்து வதக்கவும். பிறகு ஊறிய உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியவுடன் அரைத்த பொடியைச் சேர்த்து வதக்கவும். உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து (உருளைக்கிழங்கு வெந்து தண்ணீர் வற்றும்வரை) நன்கு வதக்கவும். வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். இந்த உருளை விண்டாலோவை சாதம், பிரெட், சப்பாத்தி உடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

குறிப்பு: அதிக தண்ணீர் சேர்த்து விண்டாலோ குழம்பும் செய்யலாம்.

ஃப்ரை உருளை நட்ஸ் பாயசம்

தேவையானவை: உருளைக்கிழங்கு – 1, ஏலக்காய் – அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 100 கிராம், முந்திரி – 5, பால் – 200 மில்லி, உலர்ந்த திராட்சை – 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் – 150 கிராம், நெய் – 1 டேபிள்ஸ்பூன்.

8

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி நறுக்கிய உருளையைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பொடித்த ஏலக்காய், முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள நெய்யில் தேங்காய்த் துருவலை வதக்கி பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் ஃப்ரை செய்த உருளையை லேசாக மசித்துச் சேர்த்து கொதிக்கவிடவும். பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கலக்கி மேலும் கொதிக்க விடவும். வறுத்த ஏலக்காய், முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

ஆலு – கோபி சில்லி 65

தேவையானவை: உருளைக்கிழங்கு-3, நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள் – 100 கிராம், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயத் தாள் – சிறிது, மல்லித்தூள் (தனியாத்தூள்) – 1 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிது, எண்ணெய் – தேவையான அளவு, கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் – 1 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

9

செய்முறை: உருளையை துண்டுகளாக்கி முக்கால் பதம் வேகவைத்து தோல் நீக்கவும். காலிஃப்ளவரை சுடுநீரில் போட்டு எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி – பூண்டு விழுது, உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு கார்ன் ஃப்ளார், கடலை மாவு சேர்த்துக் கலக்கவும். இதில் உருளைத் துண்டுகள், காலிஃப்ளவர் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உருளை, காலிஃப்ளவரைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் தூவி அலங்கரிக்கவும். விரும்பினால் எலுமிச்சைச் சாறு அல்லது டொமேட்டோ சாஸுடன் சுவைக்கலாம்.

பேபி உருளை மோர்க்குழம்பு

தேவையானவை: பேபி உருளை – கால் கிலோ, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, புளிக்காத மோர் – 200 மில்லி.

மோர்க்குழம்பு மசாலா செய்ய: மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, பூண்டு – 5 பல், இஞ்சி – ஒரு இஞ்ச் அளவு, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சரிசி – அரை டேபிள்ஸ்பூன், மல்லி (தனியா) – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2.

தாளிக்க: எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை – சிறிது, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, சீரகம் – 1 டீஸ்பூன்.
10

செய்முறை: ஒரு மணி நேரம் ஊறவைத்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பச்சரிசியுடன் மல்லி (தனியா), பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, தேங்காய்த் துருவல், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து மையாக அரைக்கவும். பேபி உருளையை தோல் சீவி இரு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழையைச் சேர்த்து வதக்கவும். இதில், பேபி உருளையைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும். பெருங்காயத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக புளிக்காத மோரைச் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: வெள்ளைப்பூசணி, சுரைக்காய், சௌசௌ, வாழைத்தண்டு, புடலங்காயிலும் மோர்க்குழம்பு செய்யலாம்.

ஸ்வீட் க்ரிஸ்பி உருளை

தேவையானவை: உருளைக் கிழங்கு – 2, முந்திரி – 5, கான்ஃப்ளார் – 3 டீஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், பாதாம் – 3, நாட்டுச்சர்க்கரை – 100 கிராம், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்.

11

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி கேரட் துருவியால் துருவவும். அதை கான்ஃப்ளாரில் புரட்டவும். கடாயில் நெய் விட்டு, துருவிய உருளையை சேர்த்து வதக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், பொடித்த முந்திரி, பாதாம் சேர்த்து பொன்னிற மாக வறுக்கவும். பொடித்த நாட்டுச் சர்க்கரையை அதில் சேர்த்து நன்றாகக் கலக்கிச் சுவைக்கவும்.

குறிப்பு: சமையலில் இனிப்பு சுவைக்கு சர்க்கரையைத் தவிர்த்து… வெல்லம் அல்லது தேன் பயன் படுத்தலாம்.

உருளை ஸ்வீட் கச்சாயம்

தேவையானவை: உருளைக்கிழங்கு – 1, எண்ணெய் – தேவையான அளவு, கோதுமை மாவு – 100 கிராம், தேங்காய்த் துருவல் – 50 கிராம், நாட்டுச்சர்க்கரை – 100 கிராம், ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்.

12
செய்முறை: உருளையை வேகவைத்து தோல் நீக்கி கட்டியில்லாமல் மசிக்கவும். அதனுடன் கோதுமை மாவு, நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவலைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் தயார் செய்து வைத்திருக்கும் கலவையை சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

பேபி உருளை ரைஸ்

தேவையானவை: பாசுமதி அரிசி – 100 கிராம், பேபி உருளைக்கிழங்கு – 100 கிராம், பெரிய வெங்காயம் – 2, பூண்டு – 3 பல், இஞ்சி – ஒரு இஞ்ச் அளவு, பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய் – 2, பட்டை – ஒரு இஞ்ச் அளவு, பிரிஞ்சி இலை – 2, கிராம்பு – 3.

13
செய்முறை: அரிசியை உதிராக வேகவைக்கவும். உருளையை தோல் சீவி, பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் லேசாகச் சீவிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பிறகு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய உருளையைச் சேர்த்து வதக்கவும். உருளை வெந்ததும், வெந்த சாதம், உப்பு சேர்த்து புரட்டவும். சுவையான பேபி உருளை ரைஸ் ரெடி.

குறிப்பு: ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்தால் போதும். அதிகம் சேர்த்தால் பாசுமதி அரிசி குழைந்துவிடும்.

மிக்ஸ்டு வெஜ் உருளை அடை

தேவையானவை: பச்சைப்பயறு – 100 கிராம், இஞ்சி பேஸ்ட் – 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 50 கிராம், துவரம்பருப்பு – 50 கிராம், கேரட் – 1, உருளைக்கிழங்கு – 2, பச்சை மிளகாய் – 2, பீன்ஸ் – 50 கிராம், சின்ன வெங்காயம் – 100 கிராம், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் (அடை சுட்டெடுக்க) – 50 மில்லி, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், தண்ணீர், உப்பு – தேவையான அளவு.

14

செய்முறை: துவரம்பருப்பையும் உளுத்தம் பருப்பையும் சுமார் இரண்டு மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும். சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்த பச்சைப்பயறை அதனுடன் சேர்த்து கொரகொரவென அரைக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், மிளகுத்தூள், இஞ்சி பேஸ்ட், நறுக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். வேகவைக்காமல் தோல் நீக்கி துருவிய உருளைக்கிழங்கை அரைத்து அதனுடன் சேர்க்கவும். போதுமான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அடை மாவாக நன்கு கலக்கவும். தோசைக்கல்லைச் சூடுசெய்து எண்ணெய் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும். டேஸ்ட்டியான இந்த மிக்ஸ்டு வெஜ் உருளை அடையை தேங்காய் சட்னி அல்லது மோர்க்குழம்புடன் சுவைக்கலாம்.

உருளை – வெங்காய பக்கோடா

தேவையானவை: உருளைக்கிழங்கு – 2, மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, சீரகம் – கால் டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, கடலை மாவு – 200 கிராம், கோதுமை மாவு -100 கிராம், பச்சரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை (நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.

15

செய்முறை: தோல் சீவி துருவிய உருளையுடன் கடலை மாவு, கோதுமை மாவு, பச்சரிசி மாவு, மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சீரகம், சோம்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், மாவை கிள்ளியெடுத்துப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.தேங்காய்ச் சட்னி (அ) தக்காளிச் சட்னியுடன் பக்கோடாவை சுவைக்கலாம்.

டாஸ்டு பட்டர் உருளை

தேவையானவை: உருளைக் கிழங்கு – 2, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

16

செய்முறை: உருளைக் கிழங்கை தோல் சீவி அரை இஞ்ச் கனமுள்ள வட்டமாக நறுக்கவும். வாணலியில் உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேக விட்டு தண்ணீரை வடிக்கவும். வாணலியில் வெண்ணெய் சேர்த்து, வெந்த உருளையை அதன் வடிவம் சிதையாமல், மிளகுத்தூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் உருளையின் மேல் சீஸை துருவியும் சுவைக்கலாம்.

ஆலு கார முறுக்கு

தேவையானவை: பச்சரிசி மாவு – 1 கப், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு – கால் கப், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், நெய் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 2 (நடுத்தர அளவு), எள் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

17

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி மையாக அரைக்கவும். அதனுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, நெய், எள், சீரகம், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, தேவையெனில் தண்ணீரும் சேர்த்து மாவைப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் முறுக்குப் பிழியும் அச்சில் மாவை வைத்து எண்ணெயில் மாவை பிழிந்து இருபுறமும் திருப்பி வேகவிட்டு எடுக்கவும்.

ஆலு மஞ்சூரியன்

தேவையானவை: உருளைக்கிழங்கு – 3, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் – 2 டீஸ்பூன், பச்சரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

மஞ்சூரியன் கிரேவிக்கு: கறிவேப்பிலை – சிறிது, சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 50 கிராம், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு.

18

செய்முறை: உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி அரைவேக்காடு பதத்துக்கு வேகவைக்கவும். கார்ன்ஃப்ளார், பச்சரிசி மாவுடன் மிளகுத்தூள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவாகக் கரைக்கவும். இதில் உருளைத்துண்டுகளைச் சேர்த்து நன்கு புரட்டி சூடான எண்ணெயில் பொரிக்கவும். பொரித்த உருளையுடன் வெங்காயத்தாள், சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்துப் புரட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். கான்ஃப்ளார் கலவையில் மீதமிருந்தால் வதக்கிய இஞ்சி – பூண்டு விழுதுடன் புரட்டி, அதில் பொரித்த உருளையை நன்கு புரட்டி வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தாள் கொண்டு அலங்கரிக்கவும்.

படுகா உருளை – அவரைக்குழம்பு

தேவையானவை: உருளைக்கிழங்கு – 1, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், ஃப்ரெஷ் அவரைப் பருப்பு – 100 கிராம், தேங்காய்த் துருவல் – 50 கிராம், கடுகு – அரை டீஸ்பூன், பூண்டு – 5 பல், பட்டைத்தூள் – அரை டீஸ்பூன், சின்னவெங்காயம் – 100 கிராம், கிராம்பு – 2, உப்பு – தேவையான அளவு.
குழம்பு மசாலாவுக்கு: காய்ந்த மிளகாய் – 3, சீரகம் – ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) – 50 கிராம், சோம்பு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன். (மசாலாவுக்கு கொடுத்தவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து அரைக்கவும்)

19

செய்முறை: தேங்காய்த் துருவல், 50 கிராம் சின்ன வெங்காயம், பூண்டு, பட்டைத்தூள், கிராம்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும். மீதமுள்ள சின்ன வெங்காயத்தை நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும், சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், குழம்பு மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு, தோல் சீவி நறுக்கிய உருளைக்கிழங்கு, அவரைப்பருப்பு சேர்த்து வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். பிரஷர் நீங்கியதும் குழம்பை மீண்டும் கொதிக்கவிட்டு இறக்கவும். இந்த படுகா அவரைக் குழம்பில் எண்ணெயில் தாளித்த கடுகைச் சேர்க்கவும்.

குறிப்பு: காய்ந்த அவரைப்பருப்பை சேர்த்தால், அதை ஒருநாள் இரவு ஊறவிட்டு அதிக விசில்விட்டு வேக வைக்கவும்.

பச்சைப்பயறு – உருளை வடை

தேவையானவை: பச்சைப்பயறு – 200 கிராம், சீரகம் – ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1, நறுக்கிய கறிவேப்பிலை – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) – 2, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

20

செய்முறை: தோல் சீவிய உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்து மசிக்கவும். அதனுடன், ஊறவைத்து கொரகொரவென அரைத்த பச்சைப் பயறு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், பூண்டு விழுது, உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, கொத்த மல்லித் தழையைச் சேர்த்துப் புரட்டவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மாவை வடைகளாகச் செய்து பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: தண்ணீர் அதிகம் சேர்த்தால் மாவு பதம் தவறிவிடும் பச்சைப்பயறுக்குப் பதில் கடலைப்பருப்பையும் சேர்க்கலாம்.

ஆலு சன்னா மசாலா

தேவையானவை: உருளைக்கிழங்கு – 2, கொண்டைக்கடலை – 100 கிராம், பெரிய வெங்காயம் – 2, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெங்களூரு தக்காளி – 1, மிளகாய்த்தூள்-அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தூள் (தனியாத் தூள்) – 1 டீஸ்பூன், கரம்மசாலா – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

21

செய்முறை: ஒருநாள் இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி, வேகவைத்த கொண்டைக்கடலை, தோல் சீவி பொடியாக நறுக்கிய உருளையைச் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மசாலாவை நன்கு கொதிக்கவிட்டு சுண்ட வைத்து இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து, பூரி, சப்பாத்தியுடன் சுவைக்கவும்.

காலிஃப்ளவர் – காளான் – உருளை ஃப்ரை

தேவையானவை: உருளைக்கிழங்கு – 2, பெரிய வெங்காயம் – 1, காளான் (நறுக்கியது) – 50 கிராம், மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், காலிஃப்ளவர் (நறுக்கியது) – 50 கிராம், கொத்தமல்லித்தழை (நறுக்கியது) – சிறிதளவு, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

22

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சிறுதுண்டுகளாக நறுக்கிய உருளைக்கிழங்கு, காளான், காலிஃப்ளவர் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துப் புரட்டவும். போதுமான அளவு தண்ணீரைச் சேர்த்து நன்கு கிளறி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும் (வறவறவென இருக்குமாறு).

குறிப்பு: காய்கறிகளைக் கூடுமான வரை குக்கரில் சமைத்தால் சத்து வீணாகாது.

உருளை பூரி

தேவையானவை: உருளைக் கிழங்கு (நடுத்தர அளவு) – ஒன்று, எண்ணெய் – தேவையான அளவு, கோதுமை மாவு – 250 கிராம், சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

23

செய்முறை: தோல் சீவிய உருளைக்கிழங்கை மையாக அரைக்கவும். அதனுடன் கோதுமை மாவைச் சேர்த்துப் பிசையவும். உப்பு, சீரகம், சுமார் 2 டீஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து மிருதுவாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், பிசைந்து வைத்திருக்கும் மாவைச் சிறு வட்டமாகத் தேய்த்து மொறு மொறுவென பூரியைச் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: இதேபோல பசலை மற்றும் பாலக்கீரை சேர்த்தும் பூரி செய்யலாம்.

ஹனி சில்லி உருளை

தேவையானவை: உருளைக்கிழங்கு – 2, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், தேன் – 2½ டேபிள்ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி – பூண்டு – 2 டீஸ்பூன், குடமிளகாய் – ஒன்று, கார்ன் ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான அளவு, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

24

செய்முறை: தோல் சீவிய உருளைக்கிழங்கை நீளவாக்கில் நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் உப்பு, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கார்ன் ஃப்ளார் சேர்த்துக் கலந்து, அதில் உருளைக்கிழங்கை நன்குப் புரட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் புரட்டிய உருளையைப் பொன்னிறமாக வறுக்கவும். மற்றொரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கிய இஞ்சி – பூண்டு, குடமிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் சேர்த்து நன்குப் புரட்டவும். தேவையெனில், சிறிதளவு உப்பு சேர்க்கலாம். இதில் ஃப்ரை செய்த உருளையைச் சேர்த்து நன்கு புரட்டவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை, வெங்காயத்தாள் கொண்டு அலங்கரித்துச் சுவைக்கவும்.

உருளை வெஜ் ஆம்லெட்

தேவையானவை: வேகவைத்த உருளைக்கிழங்கு – 100 கிராம், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடலை மாவு – 100 கிராம், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம், தண்ணீர் – தேவையான அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன், துருவிய கேரட் – 50
கிராம், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – 2 பிஸ்பூன், பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு.

25

செய்முறை: அகலமான பாத்திரத் தில் துருவிய கேரட், வேகவைத்த உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, சீரகம், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கடலை மாவு, தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு கரைக்க வும். தோசைக்கல்லை சூடுசெய்து மாவை ஊற்றிப் பரப்பிவிடவும். எண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில், 5 நிமிடங்கள் ஆம்லெட்டில் சேர்த்துள்ள காய்கள் வேகும்வரை பொன்னிறமாக இருபக்கமும் சுட்டெடுக்கவும். டொமேட்டோ சாஸுடன் சுவைக்கவும்.

ஆலு ரப்டி

தேவையானவை: உருளைக் கிழங்கு (துருவியது) – 2, பாதாம் – 5, பால் – ஒரு லிட்டர், முந்திரி – 5, நாட்டுச்சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன், பிஸ்தா – 5, ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்.

26

செய்முறை:அகலமான பாத்திரத்தில் பாலை பாதியளவு சுண்டும் வரை காய்ச்சவும். அதனுடன் துருவிய உருளைக்கிழங்கைச் சேர்த்து வேகவிட்டு, நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா (நெய்யில் வறுக்கத் தேவையில்லை) சேர்க்கவும். சுவையான ஆலு ரப்டி ரெடி. சூடாகவோ குளிரவைத்தோ பருகலாம்.

குறிப்பு: நாட்டுச்சர்க்கரைக்குப் பதிலாக தேன் அல்லது வெல்லமும் சேர்க்கலாம்.

சேமியா – உருளை ரோல்

தேவையானவை: சேமியா – 75 கிராம், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 2, வறுத்துப் பொடித்த முந்திரி – 1 டேபிள்ஸ்பூன், வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிஸ்பூன், எண்ணெய் – பொரிக்க, உப்பு – தேவையான அளவு.

27

செய்முறை: சேமியாவை சுடுநீரில் ஊறவைத்து தண்ணீரை வடிக்கவும். அதனுடன் மசித்த உருளை, வறுத்துப் பொடித்த வேர்க்கடலை, முந்திரி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசையவும். மாவை கொழுக்கட்டை பதத்தில் உருட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் உருட்டியதை பொன்னிறமாகப் பொரித்தெடுத்து, டொமேட்டோ சாஸ் (அ) கிரீன் சட்னியுடன் சுவைக்கவும்.

ஃப்ரைடு சீரக உருளை

தேவையானவை: உருளைக் கிழங்கு – 2, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, சீரகம் – 3 டீஸ்பூன், பூண்டு – 5 பல், கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

28

செய்முறை: உருளைக்கிழங்கை தோல்சீவி சதுரமாக நறுக்கவும். வாணலியில் விட்டு, எண்ணெய் சூடானதும் சீரகம் சேர்த்து, பிறகு உருளைக்கிழங்கைச் சேர்த்து, மிதமான சூட்டில் பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள்தூள், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து 3 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவைத்து இறக்கி, பூரி, ரொட்டி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

கிரீன் உருளை சாட்

தேவையானவை: மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – 3,நறுக்கிய கொத்தமல்லித்தழை – 50 கிராம், பெரிய வெங்காயம் – 1, புதினா – 50 கிராம், இஞ்சி – பூண்டு விழுது – 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – 30 கிராம், சீரகத் தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், சாட் மசாலா – அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன், விதைகளை நீக்கி நறுக்கிய பச்சை குடமிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு.

29

செய்முறை: தோல் நீக்கிய உருளைக் கிழங்கைச் சிறுதுண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுதை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலையை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, வெந்து கொண்டிருப்பவற் றோடு சேர்த்துக் கிளறவும். இத்துடன் மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கி, குடமிளகாய், உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்துப் புரட்டி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, நன்கு வற்றும்வரை வேகவிட்டு இறக்கி, எலுமிச்சைச் சாறு பிழியவும்.

இதனை ரொட்டி, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

குறிப்பு: தேவையெனில் பிளாக் சால்ட் சேர்க்கலாம். வட இந்தியர் இதனை சமையலில் அதிகம் பயன்படுத்துவர்.

பச்சைப்பயறு – உருளை சாலட்

தேவையானவை: பச்சைப்பயறு – 50கிராம், பொடியாக நறுக்கிய செலரி – சிறிதளவு, தோல் சீவி பொடியாக நறுக்கிய உருளை – 50 கிராம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய கேரட் – 50 கிராம், பொடியாக நறுக்கிய பெங்களூரு தக்காளி – 50 கிராம், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 50 கிராம், ஃப்ரெஷ் க்ரீம் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

30

செய்முறை: சுமார் 3 மணி நேரம் நன்கு ஊறிய பச்சைப்பயறுடன் வேகவைத்த உருளை, நறுக்கிய கேரட், தக்காளி, வெங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்றாக கலக்கவும். நறுக்கிய செலரி, கொத்தமல்லித்தழையை அதன் மேல் தூவி அலங்கரித்துச் சுவைக்கவும்.

குறிப்பு: குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக இதைத் தரலாம். க்ரீமுக்குப் பதிலாக கெட்டியான ஃப்ரஷ் தயிர் அல்லது நன்கு அடித்த பாலாடையும் சேர்க்கலாம்.

Related posts

சுவையான பேபி கார்ன் 65 செய்வது எப்படி

nathan

கொல்கத்தா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் ஜால் முரி

nathan

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய சுறா புட்டு

nathan

சுவைக்க சுவைக்க சுவையான முள்ளங்கி சப்பாத்தி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்வீட் கார்ன் வடை

nathan

சுவையான உருளைக்கிழங்கு சமோசா

nathan

சுவையான கடலை மாவு போண்டா

nathan

போளி

nathan

10 நிமிடத்தில் செய்யலாம் சுவையான ஸ்நாக்ஸ்

nathan