“பனிக்காலமும்… மழைக்காலமும் சுகமானது” என்பார்கள். உண்மைதான்… ஏனென்றால் உணவும், உறக்கமும் இந்த காலத்தில் அதிகரிக்கும். அது மட்டுமின்றி… சாப்பிடவும், தூங்கவும் மனதுக்கு இதமாக இருக்கும். ஆனால் பனிக்காலத்தில் குளிரின் காரணமாக ஜலதோஷம், இருமல், சளி, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களும் எளிதில் நம்மை தொற்றும். இதிலிருந்து நாம் தப்பிக்க சில டிப்ஸ்கள்.
ஆரோக்கியம்:
* குறைந்த அளவுள்ள கொழுப்புச்சத்துடன் கூடிய உணவை சாப்பிட்டால் போதும். அதிகப்படியான கொழுப்பு உணவுகளை நமது உடல் எளிதில் ஜீரணிக்காது.
* அதேபோல், உணவில் அதிக அளவு பால், பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.
* குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரோக்கியமான தூக்கம் அவசியம்.
* தினமும் 500 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’ சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த ‘சி’ சத்து, ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் ஆகியவற்றில் அதிகம் உள்ளது.
* காய்கறி சூப், கோழி சூப், மிளகு ரசம் அருந்தலாம்.
* கதகதப்பான ஆடையை அணியலாம்.
* சூரியன் மறைவுக்குப்பின் குளிப்பதைத் தவிர்க்கவும். ஈரத்தலையுடன் வெளியே செல்ல வேண்டாம்.
* தினமும் காலை, மாலை சூடான நீரில் குளிப்பது நல்லது.
* உடல்நலக் குறைவுக்கு டாக்டரை கலக்காமல் நீங்களாகவே மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளவேண்டாம்.
அழகு:
* வெறும் பாலாடை அல்லது பாலாடையுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து ஊறிய பிறகு குளிப்பதும் நல்ல பலனைத் தரும். பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி, சிறிதுநேரம் கழித்து குளிப்பதும், சருமத்தை மென்மையாக்கும். ஆலுவேரா எனப்படும் கற்றாழை சேர்த்த மாய்சரைஸரை சோப்புபோல உடல் முழுவதும் தேய்த்து, வெறுமனே தண்ணீர் ஊற்றிக் குளிக்கலாம். சோப்பைத் தவிர்த்து, பால், தயிர் போன்றவற்றையும் உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். கிளிசரின் அதிகம் சேர்த்த சோப்பை உபயோகித்தாலும் தவறில்லை.
* வறண்ட சருமக்காரர்கள் பப்பாளி, ஆப்பிள் போன்றவற்றைத் தவறாமல் சாப்பிட வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இது எல்லா சரும வகையினருக்கும் பொருந்தும்.
* தோல் நோய்கள் வராமல் இருக்க வேண்டுமானால், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பனிக் காலத்தில் உடலுக்கு கடலை மாவு, பயத்தம் மாவு தேய்த்துக் குளிக்கக்கூடாது. அது சருமத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சிவிடும். மிகவும் வறண்ட சருமக்காரர்களுக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து தேய்த்துக் குளித்து வரவேண்டும்.
* சாதாரண மற்றும் எண்ணெய்ப் பசையுள்ள சருமக்காரர்களுக்குப் பனிக்காலம் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்களும் நிறைய தண்ணீர் குடித்து, பப்பாளி, ஆப்பிள் பழ வகைகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* பனிக்காலத்தில் மேக்கப் என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயமே.. ஏனென்றால் ட்ரை ஸ்கின், ஆயில் ஸ்கின் என்று தோலின் தன்மைக்கேற்ப மேக்கப் போடவேண்டும். பனிக்காலத்தில் பெரும்பாலும் சருமம் வறண்டிருக்கும். அதற்குத் தகுந்தாற்போல் சிம்பிளாக மேக்கப் செய்து கொள்வது நல்லது. அலுவலகம், பிசினஸ், வேலை என்று வெளியே செல்லும் பெண்கள், மேக்கப் போட்டதே தெரியாமல் மேக்கப் போட்டுக் கொண்டால் அழகாக இருக்கும். அந்த சிம்பிள் மேக்கப்-ஐ எப்படிப் போடுவது என்பதை படிப்படியாக பார்ப்போம்.
* முதலில் கன்சீலரை லைட்டாக… ஒரே சீராக முகத்தில் பூசினால் மேக்கப் அதிக நேரத்திற்கு அப்படியே இருக்கும்… கலையாது.
* பின்னர் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பிரஷ்ஷினால் பவுடரை பூசவும். எந்த இடத்திலும் அதிகம் படாமல் முகம் முழுவதும் ஒரே மாதிரியாக அப்ளை பண்ணவும்.
* பின்பு, ஐப்ரோ பென்சிலால் புருவங்களை அடர்த்தியாக டச்சப் பண்ணவும். புருவத்தில் முடி இல்லாத இடத்தில் டச்சப் பண்ண வேண்டாம்.
* அடுத்து, கண்களுக்கு மேலே புருவங்களுக்குக் கீழே மூடும் பகுதியை ஐ-ஷேடோ பூசவும். இந்த ஐஷேடோவின் நிறம் நீங்கள் உடுத்தும் உடைக்குப் பொருத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
* அப்புறம், கண்களுக்கு மேலே, இமைகளுக்கு அருகில் ஐ லைனரால் கண் மை போல் மெல்லிய கோடு வரையவும். இதனால் கண்கள் எடுப்பாகத் தெரியும்.
* அதற்கடுத்து, கண் இமைகளை மஸ்காரா மூலம் அழகுபடுத்தினால், பார்ப்பதற்கு இமைகள் அடர்த்தியாகத் தெரியும். இதனால் கண்கள் பளிச்சென்று இருக்கும்.
* கன்னங்களை பளபளப்பாக மின்னவைக்க… ப்ளஸ்ஷை பிரஷ்ஷால் டச்சப் செய்யவும். அப்படி செய்வதால் முகத்திற்கு தகுந்தாற்போல் கன்னங்கள் எடுப்பாக இருக்கும்.
* உதட்டில் லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக, லிப் லைனர் பென்சிலால் அவுட் லைன் வரைந்து கொண்டால் லிப்ஸ்டிக்கை அழகாக வரையலாம். இதனால் லிப்ஸ்டிக் வழியாது.
* இறுதியாக நீங்கள் உதட்டில் வரைந்துள்ள அவுட் லைனுக்குள் லிப்ஸ்டிக் பூசினால் வெளியே கிளம்ப நீங்க ரெடி!