காலை நேரத்திற்கான பெண்கள் டிப்ஸ் என்றதுமே, விரைந்து செய்து முடிக்கும் சமையல் குறிப்புகள், கோலம், வீட்டைப் பராமரித்தல் என்பதாக மட்டுமே இருக்க வேண்டுமா என்ன? இந்த உலகிற்கு புதிய ஒளியைக் கொண்டு வரும் காலை வேளை மிக அழகானது; ஒவ்வொரு நிமிடமும் அதை ரசிக்க வைக்கக்கூடியது. சூரிய உதயம் பார்ப்பதற்காக கடற்கரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருப்பதை வைத்தே இதன் அருமையை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
ஆனால், பெரும்பாலான பெண்கள் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்திருந்தாலும் அதை ரசிக்கும் அளவுக்கான நேரம் கிடைப்பதில்லை. வேலை, வேலை, வேலை. ஆணோடு ஒப்பிட்டால் காலை நேரத்தில் மூன்று மடங்கு வேலைகளைப் பெண்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையைக் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள குடும்ப உறுப்பினர்களோடு உரையாடலாம். எல்லோரும் வேலைகளைப் பங்கிட்டுக்கொண்டு, குறித்த நேரத்தில் அவற்றைப் பகிர்ந்து முடிக்கும்போது, அந்த வீட்டில் உள்ள பெண்களுக்கு காலையில் தனக்கென ஒதுக்க நேரம் கிடைக்கும். அப்படியான உரையாடலுக்குப் பிறகு, வரும் நாட்களில் எப்படி சூரியனை வெல்கம் பண்ணலாம் என்பதற்கு சில யோசனைகள்:
புத்தகங்கள்: இரவில்தான் நேரம் கிடைக்கிறது என அதிக நேரம் கண் விழித்து படித்து காலையில் கண் எரிச்சலோடு எழுந்திருக்கும் பழக்கத்திற்கு குட் பை சொல்லலாம். 5 மணிக்கெல்லாம் எழுந்து நல்ல புத்தகங்களை வாசிக்கலாம். வீட்டில் படிக்கும் பிள்ளைகளுக்கு நாம் அடிக்கடி சொல்வது காலையில் படித்தால்தான் மனதில் பதியும் என்று. அந்த யோசனை உங்களுக்கும் பயன்தரும்தானே. காலையில் படிப்பதற்கான நேரம் ஒதுக்கினால், நேரம் பற்றிய சிந்தனை நமக்கு அதிகம் வரும். அதனால், குறிப்பிடத்தகுந்த சிறப்பான புத்தகங்களைத் தேர்ந்தெடுப்போம்.
புத்தகங்கள்
எழுத்து: ஒரு நல்ல வாசகர் விரைவில் எழுதவும் தொடங்குவது இயல்பானது. அப்படி நீங்கள் மாறவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கு எழுதிக்கொண்டிருப்பவர் என்றால் இன்னும் சிறப்பு. காலை நேரம் எழுதுவதற்கு ஏற்ற நேரம். புதிய நாளின் மலர்ச்சியோடு எழுதுவது படைப்பை வலிமைப்படுத்தும். உங்களின் எண்ணங்களை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள பெரும் பெரு வாய்ப்பாகவும் அது அமையும்.
பாடல்கள்: புத்தகம் படிக்கவோ எழுதவோ எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் எனச் சொல்ல முடியாது. அப்படியானவர்கள், தனக்கு விருப்பமான ஒன்றைச் செய்யலாம். பாடல்கள் கேட்பது என்பது பலருக்குப் பிடித்தமான ஒன்று. ஆனால், அந்தப் பாடல்களை, பேருந்தில் செல்லும்போது, சமையல் செய்யும்போது பிரஷர் குக்கரின் சத்தத்தோடு கேட்டுக் கொண்டிருப்பார்கள். இது பாடல் கேட்கும் சரியான முறையல்லவே. பாடல்களைக் கேட்க என அதிகாலை நேரத்தை ஒதுக்கலாம். பாடலின் வரிகளோடு அதன் இசையை நன்கு அனுபவித்து கேட்டுக்கொண்டே சூரியனுக்கு ஹாய் சொல்லுங்கள்.
திறமை ஜொலிக்கட்டும்: ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகள் இருக்கும். பாட்டு பாடுவது, இசைக் கருவிகள் வாசிப்பது… என. ஆனால் அதை மேம்படுத்திக்கொள்ள முறையாக அதைப் பயில வேண்டும் அல்லவா. உதாரணமாக ஒரு பெண்ணுக்கு டிவியில் வயிலின் இசைக்கப்படுவதைப் பார்க்கும்போதெல்லாம், நாம் சின்ன வயதில் வயலின் இசைக்க ஆசைப்பட்டோம். அப்போது படிக்கவே நேரம் போதவில்லை. இப்போதோ வீட்டு வேலைக்கு மத்தியில் நேரமே இல்லை என நினைப்பவர்கள் அதற்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லலாம். இப்படி தொடங்கும் ஒன்று நாளைக்கு உங்களுக்கு பெரும் புகழைப் பெற்றுத்தரலாம்.
விருப்பதை நிறைவேற்ற: பல பெண்களின் படிப்பு எல்லாம் பீரோவில் சான்றிதழ்களாகவே தேங்கியிருக்கின்றன. மேல் படிப்புக்கு அல்லது வேலைக்கான தேர்வுகளுக்குப் படிப்பதற்கு காலை நேரத்தைப் பயன்படுத்தலாம்.
யோகா, உடற்பயிற்சிகள்: யோகா அல்லது உடற்பயிற்சிக்குச் செல்லும் பெண்கள் பெரும்பாலும் காலை, மாலை வீட்டு வேலைகள் இருப்பதால் மதியத்தை ஒட்டிவரும் நேரத்தைக் கேட்பார்கள். ஆனால், அவர்களின் மனதளவில் இந்தப் பயிற்சியை காலை நேரத்தில் செய்யவே விரும்புவார்கள். அப்படி நினைப்பவர்கள், வீட்டு வேலைகளை அனைவரும் பங்கிட்டுச் செய்ய திட்டமிட்டு காலை நேரத்தில் செய்யலாம்.
இவை தவிரவும் ஒவ்வொரு பெண்களின் தனி விருப்பத்தின் அடிப்படையில் காலை நேரத்தை வடிவமைத்துக்கொள்வதே சரியானது. அப்போதுதான் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தங்கள்மீது நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி மட்டுமல்ல, வேலைகளும் குடும்ப உறுப்பினர்களுக்கு பொதுவானது.