கல்லூரியில் படிக்கும்போது நாம் சந்திக்கும் எவராக இருந்தாலும், இந்த திறமை இருந்தால் எளிதில் அவர்களை எதிர்கொள்ளலாம். கம்யூனிகேஷன் ஸ்கில்லில் இது ஒரு முக்கிய அங்கம். Listening… புது நண்பர்கள், காதலி, புரஃபசர் என்று ஆரம்பித்து வேலைக்கு சேரும் நேர்முகத் தேர்வு வரை, கீழே இருக்கும் டிப்ஸ்களை மனதில் நிறுத்திக் கொண்டால், ஆல் இஸ் வெல் ப்ரோ…
வேலைக்கு தகவல் தொடர்பு திறன் முக்கியம்
பேசுபவர் கண்ணைப் பார்த்து கேட்பது
இது அனைவரும் கேள்விப்படும் இயல்பான விஷயமாக தெரியலாம். ஆனால், எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கிறோம் என்பது கேள்விக்குறி தான். உங்கள் குழந்தை ஏதாவது கேட்கும் போது இரண்டு நிமிடம் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்க்காமல் அவர்களின் முகத்தைப் பார்த்து பேசுவதுண்டா? அல்லது உங்களின் பாஸ் ஏதாவது கோவமாக கூறும் பொழுது அவரின் முகத்தையாவது பார்ப்பதுண்டா? இது கேட்கும் ஆற்றலின் மிக முக்கியமான நுணுக்கம்.
கேட்டு கவனியுங்கள், ஆனால் முறைக்காதீர்கள்
சிலருக்கு இந்த பழக்கம் உண்டு. தாங்கள் கேட்கிறோம் என்பதை பேசுபவருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக உடலை நிமிர்த்தி கூர்ந்து கவனிப்பது போல முறைத்துப் பார்ப்பார்கள். இது அவர்கள் கவனிக்கிறார்கள் என்பதை விட, அவர்கள் கோவமாக இருக்கிறார்கள் என்ற அறிகுறியைத்தான் பேசுபவருக்குத் தரும். எனவே, நீங்கள் கவனிக்கிறீர்கள் என்று வெளியே தெரிய வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்யும் எதுவும் நன்றாக தோன்றாது. எனவே இயற்கையாக கேட்பது போலவே கேட்கலாம்.
மனதை திறந்து கேளுங்கள்
ஒருவர் பேசும் முதல் வரியிலேயே அவர் என்ன நோக்கத்துடன், எதற்காக பேசுகிறார் என்பதை அறிய இயலும் என்பது உண்மை. ஆனாலும், அதனை வெளிக்காட்டுவதோ, அதனால் ஒரு முடிவுக்கு வந்து அதை பற்றி நினைப்பதோ கூடாது. கடைசி வரை பேசுவதை கேட்டுவிட்டுத்தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதே போல், ஒருவர் பேசுவதற்கு முன்னரே, முன் முடிவுக்கு வந்து விடக்கூடாது. அது நமக்கு கேட்கும் சுதந்திரத்தைத் தராமல் பறித்துவிடும்.
தகவல் தொடர்பு திறன்
ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம்
ஒருவர் பேசுவதை கேட்கும் பொழுது ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்தல் மிக அவசியம். ஏனென்றால், எந்த வார்த்தையில் பேச்சின் முக்கியமான நுணுக்கம் இருக்கும் என்பது தெரியாது. பேச்சின் முக்கியமான கட்டம் கடந்து விட்டதாக எண்ணி கவனிக்காமல் இருப்பது, அல்லது அதற்கு முன்னால் பேசியதை பற்றி நினைப்பது என்பது தவறு. கவனிக்காமல் இருந்தால் பேசுபவரின் பேச்சைக் குறிக்கிட்டு பேசத் தோன்றும்.
பேசும்போது கேள்வி கேட்பதை தவிர்க்கவும்
ஒருவர் பேசும் பொழுது குறுக்கிட்டு தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டாம். அது பேசுபவரின் தன்னம்பிக்கையை குறைப்பது மட்டும் அல்லாமல், உரையாடலுக்கு ஒரு கசப்பான அனுபவத்தைத் தரும். எப்பொழுதும், பேச்சை முழுமையாக கேட்டு, அதில் கேள்விகள் இருந்தால் அவற்றை எழுதி வைத்துக்கொண்டு, பேச்சு முடிந்த பின் கேட்கவேண்டும். இது உரையாடலை ஒரு நல்ல அனுபவமாக மாற்றும்.
தேவையில்லாத கேள்விகள் வேண்டாம்
ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கேள்வி எழுப்ப வேண்டும் என்பதற்காக கேள்வி எழுப்புவது தவறு. உண்மையான கேள்விகள் இருந்தால் மட்டும் கேட்க வேண்டும், அதுவும் பேச்சு முடிந்த பிறகு. அடிக்கடி கேள்விகளை எழுப்புவது உங்களின் புத்திக் கூர்மையை காட்டாது என்பதை மிகத் தெளிவாக புரிந்துக் கொள்வது அவசியம். அது நீங்கள் ஆர்வத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள் என்றுதான் சொல்லும்.
தகவல் தொடர்பு திறன்
பேசுபவரின் மனநிலையை புரிந்து கொள்வது
ஒருவர் ஒரு விஷயத்தை உங்களிடம் கூறுகிறார் என்றால், மேடையிலேயோ அல்லது தனிப்பட்ட முறையிலேயோ, அவரின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். ஆவர் கூற வரும் கருத்தை சரியாக உள்வாங்கிக்கொள்ள உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை அது அள்ளித்தரும். இதனால் நீங்கள் சரியாக கவனிப்பது மட்டுமின்றி பேசுபவருக்கு தேவையான கருத்தை கூறுவதிலும் வல்லமை பெறுவீர்கள்.
கருத்துகளை அன்பாக சொல்வது
இப்படி பேசி இருக்கலாம், அப்படி பேசி இருக்கலாம் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றுவதுதான். ஆனால், அதனை மனம் நோகும்படி கூறாமல், மென்மையான முறையில் கூறுவது அவசியம்.