சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் ‘வெஜிடபிள் சேமியா’ பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப்பேராசிரியர் கெளசிக்.
தேவையானவை:
வறுத்த சேமியா – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 25 கிராம்
கேரட் – 50 கிராம்
முட்டைக்கோஸ் – 25 கிராம்
சிவப்பு குடமிளகாய் – 25 கிராம்
பீன்ஸ் – 25 கிராம்
பச்சைமிளகாய் – 3 (நடுவில் நீளமாக கீறியது)
கடுகு – கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 10 கிராம்
உளுத்தம்பருப்பு – 10 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 30 மில்லி
செய்முறை:
வெங்காயம், முட்டைக்கோஸ், குடமிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்கவிடவும். பிறகு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் பீன்ஸ் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி, துருவிய கேரட், நறுக்கிய முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு, குடமிளகாய் சேர்த்து ஒருநிமிடம் வதக்கி, சேமியாவுக்கு இருமடங்கு தண்ணீர், உப்பு சேர்த்து கலக்கிவிட்டு வேகவிடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க துவங்கியதும் அதனுடன் சேமியா சேர்த்து கலந்து வேகவிடவும். சேமியா நன்கு வெந்து உதிர் உதிராக ஆனவுடன், அடுப்பை அணைத்து, கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கி பரிமாறவும்.
குறிப்பு:
தனியாக ஒரு வாணலியில் தண்ணீரை சேர்த்து கொதிவந்தவுடன் சேமியாவை சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்துவிடவும். சேமியாவை இப்படியும் சேர்த்து வெஜிடபிள் சேமியா செய்யலாம்.