இன்றைய தொழில்நுட்பங்கள் நம் பண்டைய மரபின் நீட்சியை ஓரங்கட்டி, நமக்கு நல்வாழ்வு தரும் சில நல்ல விஷயங்களை மறக்கடிக்கச் செய்துவிட்டன. அவற்றில் ஒன்று, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக நம்மிடையே இருந்த சில தடுப்பு முறைகள்!
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரூசல் ஃபாஸ்டர் சமீபத்தில் தன் ஆய்வு முடிவை இப்படி ஒற்றைவரியில் கூறியிருக்கிறார்… ‘நான்கு மில்லியன் வருட மரபை மதிக்காத திமிர் உள்ள ஒரே உயிரினம், மனித இனம்தான்.’ கூடவே, தன் ஆய்வில், இரவில் சரியாகத் தூங்காமல் இருப்பவருக்கும், வேலை நிமித்தமாக இரவில் பணிபுரியும் ஊழியருக்கும் சாதாரண வயிற்று உபாதை முதல் மார்பகப் புற்றுநோய் வரை உருவாகும் ஆபத்துக்களையும் விவரித்திருக்கிறார். அதோடு, `குறைந்த ஆற்றலை எடுத்துக்கொண்டு ஒளியை உமிழும் எல்.இ.டி விளக்கு உள்ள ஸ்மார்ட்போன், டேப்லெட் வகையறாக்கள், தன் ஒளிக்கற்றையில் அதிகபட்ச நீல ஒளியைத் தந்து, இரவில் நெடுநேரம் பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
போர்வைக்குள் ஒளிந்துகொண்டு ஸ்மார்ட்போனில் நடுநிசியையும் தாண்டி சாட் செய்தால், காதல் வருமா..? தெரியாது. ஆனால், கேன்சர் வரக்கூடும். இது போன்ற எத்தனையோ பிரச்னைகள் பிற்காலத்தில் வராமல் இருக்க, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள் நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது.
கிட்டத்தட்ட 16 வகையான வேக்ஸின்களை வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த 23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது.
மதுரை மாவட்டப் பகுதிகளில், பிறந்த குழந்தைக்கு, தாய்மாமன் `சேனை வைத்தல்’ என ஒரு சடங்கு இன்றளவும் நடைபெறுகிறது. அதில் சிலர், `சர்க்கரைக் (சீனி) கரைசலை’ இப்போது கொடுக்கிறார்கள். `சேனை வைத்தல்’ என்பது குழந்தைக்கு வெறுமனே இனிப்பு ருசியைப் பழக்கும் வெறும் சர்க்கரை மருந்து கொடுக்கும் மரபு அல்ல; `சேய் நெய்’ கொடுத்தல் என்பதே காலப்போக்கில், `சேனை கொடுப்பது’ என்றாகி, அதுவும் பின்னாளில் மேலும் மருவி, `சீனி கொடுப்பது’ எனச் சிதைந்துவிட்டது. `சேய் நெய்’ என்பது, குழந்தைகளுக்காக வீட்டிலேயே செய்யப்படும் மிகச் சிறந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து.
குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் மருந்துகள் இரு வகைப்படும். ஒன்று… சளி, இருமலைத் தருவது. இன்னொன்று… வயிற்றுப்போக்கைத் தருவது. இந்த இரு வகைகளுக்கும் காரணமான நுண்ணுயிரிகளைச் செயல் இழக்கச் செய்யும் பல மூலிகைகளைக்கொண்டே இந்தச் `சேய் நெய்’ தயாரிக்கப்பட்டது. ஆடுதொடா, தூதுவளை, இண்டு, வேப்பங்கொழுந்து, கண்டங்கத்திரி… முதலான 57 வகை மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பாற்றல் மருந்து அது.
`57 வகை மூலிகைகளைத் தேடி காடு, மலையெல்லாம் அலைய வேண்டுமா?’… வேண்டியதில்லை. இன்னும் சில கிராம மக்களிடையே `உரை மருந்து’ எனும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழக்கத்தில் இருக்கிறது. இதை, சுக்கு, திப்பிலி, மாசிக்காய், அக்கரகாரம், அதிமதுரம், பூண்டு, கடுக்காய், நெல்லிக்காய், வசம்பு ஆகிய ஒன்பது மூலிகைகளைக்கொண்டு எளிதாகத் தயாரிக்கலாம்.
உரை மருந்து எப்படிச் செய்வது?
சுக்கின் மேல் தோலைச் சீவியும், கடுக்காய், நெல்லிக்காயை அவற்றின் விதைகளை நீக்கியும் வைத்துக்கொள்ள வேண்டும். வசம்பை அதன் மேல் தோல் கருகும் வரை சுட்டு எடுக்க வேண்டும். பிறகு, அனைத்தையும் சேர்த்து வறுத்து, பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை, அதிமதுரக் கஷாயத்துடன் சேர்த்து அரைத்து சிறுசிறு குச்சிகளாகச் செய்து காயவைத்துக்கொண்டால், உரை மருந்து தயார்.
இதைத் தாய்ப்பாலில் இழைத்து, குழந்தை பிறந்த மூன்றாம் நாளில் இருந்து கொடுக்கலாம். முதலில் ஓர் இழைப்பு, பிறகு இரண்டு இழைப்பு எனத் தொடங்கி, குழந்தை வளர வளர இழைப்பை அதிகமாக்கிக்கொள்ள வேண்டும். ஜீரண சக்தியையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கும் இந்த உரை மருந்து, அரசு சித்த மருத்துவமனைகளில் இலவசமாகவே கிடைக்கும்.
வசம்பில் உள்ள நறுமண எண்ணெயில், `பீட்டா ஆசரோன்’ (Beta Asarone) எனும் நச்சுப்பொருள் இருப்பதாகச் சிலர் வாதிடுகிறார்கள். அது தவறு. எப்படியெனில், முதலில், வசம்பின் நறுமண எண்ணெயை நாம் பிரித்து உபயோகிப்பது இல்லை. அதோடு, வசம்பில் இருக்கும் அந்த எண்ணெயின் அளவும் மிகக் குறைவானது. அப்படிப் பிரித்த எண்ணெயிலும் மிக நுண்ணிய அளவே பீட்டா ஆசரோன் உள்ளது. அந்த ஆசரோனும், நாம் வசம்பைச் சுடுவதில் உண்டாக்கும் வெப்பத்தில் 100 சதவிகிதம் ஓடியே போய்விடும்.
குடல் பூச்சியில் இருந்து குடல் புற்றுநோய் வரை நோய் எதிர்ப்பாற்றல் கிடைப்பதற்கு நம் பாரம்பர்யம் சுட்டிக்காட்டுவது வேப்பங்கொழுந்தைத்தான். நல வாழ்வு குறித்த புரிதலும், அக்கறையும், அதற்கான மெனக்கெடலும் நம் சமூகத்துக்கு மிக அதிகம். அதைத் தொலைத்துவிடாமல் பாதுகாக்கவேண்டியது நம் அவசரத் தேவை!