இரத்த கொதிப்புள்ளவர்கள் தொடர்ந்து வரும் இந்த எளிய பயிற்சியினை செய்வதினால் இரத்த கொதிப்பை கட்டுக்குள் வைக்கலாம்.
பயிற்சிமுறை 1
குதிகால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து வைத்துக்கொண்டு கைகள் இரண்டையும் மடக்காமல் முன்புறமாக முழு தலையையும் குனிந்து தாடை மார்பைத் தொட்டுக்கொண்டிருக்க உடலை விறைக்காமல் சாதாரண நிலையில் வைத்துக்கொண்டு மூச்சு சுவாசத்தை வெளியே விடவேண்டும்.
பயிற்சிமுறை 2:
சுவாசத்தை மெதுவாக இழுத்து அடக்கி உடலை விறைத்து தலையை பின்புறமாக சாய்த்து அமுக்குதல். இந்நிலையில் மார்ப்பினை கூடுமான வரை முன்னுக்கு தள்ளுதல் வேண்டும். கைகள் இரண்டும் பின்புறம் நீட்டி இருத்தல் வேண்டும். மீண்டும் சாதாரண நிலைக்கு திரும்பவேண்டும்.
பயிற்சிமுறை 3:
இடுப்பிலே கைகளை ஊன்றிக்கொண்டு கால்களை சமதூரத்தில் ஒரு அடி அகலம் பரப்பி நுனிப்பாதத்தில் உடம்பைத்தாங்கி தலையை நிமிர்ந்து நிற்கவேண்டும். இப்போது மூச்சை வெளியே விடவேண்டும். பிறகு மூச்சை இழுத்து மெதுவாக முழங்கால்களை மடக்கி தாழ்த்தி உட்கார வேண்டும். முழுவதும் உட்கார்ந்து விடக்கூடாது.
பயிற்சிமுறை 4:
கால் நுனிப்பாதத்தைச் சிறிது விரித்து வைத்து இடுப்பில் கைகளை ஊன்றி மூச்சை தளர்த்தி தலை நேராக இருக்கவேண்டும். பின்பு சுவாசத்தை இழுத்து நுனிப்பாதத்தில் உடம்பை தாங்கிக் குதிக்கால்களை மேலே எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது கால்கள் நேராக இருத்தல் வேண்டும் சற்றும் வளையாமல் வைத்திருக்கவேண்டும்.
பயிற்சிமுறை 5:
குதிகால்கள் இரண்டையும் சேர்த்து வைத்து நேராக நின்று கொண்டு முன்புறமாக குனிந்து மூச்சை தளர்த்தி கைவிரல்கள் பூமியை தொடுமாறு நிற்கவேண்டும். இது சற்று சிரமமாக இருந்தாலும் பழக பழக எளிதாகும்.
பயிற்சிமுறை 6:
குதிக்கால்கள் இரண்டையும் நேராக நின்று தலைக்கு மேல் இரண்டு கைகளையும் நீட்டி, மூச்சினை இழுத்து விலாப்புறமாக இடது புறம் எவ்வளவு சாய்க்க முடியுமோ அந்த அளவிற்கு சாய்தல் வேண்டும். மீண்டும் பழையப்படி நேராக வந்து மூச்சினை தளர்த்த வேண்டும்.
பயிற்சிமுறை 7:
குதிக்கால்கள் இரண்டையும் நேராக நின்று தலைக்கு மேல் இரண்டு கைகளையும் நீட்டி, மூச்சினை இழுத்து விலாப்புறமாக வலதுபுறம் எவ்வளவு சாய்க்க முடியுமோ அந்த அளவிற்கு சாய்தல் வேண்டும். மீண்டும் பழையப்படி நேராக வந்து மூச்சினை தளர்த்த வேண்டும். இப்பயிற்சியின் போது கால் மற்றும் கைகளை மடக்குதல் கூடாது.
பயிற்சிமுறை 8:
தரையினில் ஒரு விரிப்பினை போட்டு அதில் மல்லாந்து படுத்துக் கொள்ளவேண்டும். காலிரண்டையும் ஒன்றாக சேர்த்து இடுப்பினில் கையினை ஊன்றி மூச்சினை வெளியிட வேண்டும். பின்பு மூச்சை இழுத்துக்கொண்டு ஒரு காலினை மட்டும் மெதுவாக தூக்கி வயிற்றுக்கு நேராகக் கொண்டுவந்து நுனிபாதத்தை மேல்நோக்கி நிமிர்த்த வேண்டும். காலைக் கீழ் இறக்கும் போது மூச்சை தளர்த்தியும்,மேலே தூக்கும் போது இழுத்துக்கொண்டு இந்த பயிற்சியினை செய்தல் வேண்டும்.
பயிற்சிமுறை 9:
இந்த பயிற்சியின் போது ஒரே நேரத்தில் இரண்டுகால்க்களையும் மல்லாந்து படுத்துக்கொண்டு மேலே தூக்கவேண்டும். மேலே தூக்கும் போது இழுத்துக்கொண்டும், கீழ் இறக்கும் போது மூச்சை தளர்த்தியும் இந்த பயிற்சியினை செய்தல் வேண்டும்.
மேற்சொன்ன இந்த பயிற்சியினை மேற்சொன்னது போல் முறையாகவும் அளவோடும் செய்தல் வேண்டும். மிகுந்த சிரமத்துடன் இதனை செய்யக்கூடாது. நாள் ஒன்றுக்கு ஒன்று என செய்தாலே போதுமானது. இதனை செய்ய காலை நேர பொழுது மிகச் சிறந்தது. இந்த பயிற்சியின் போது வாய் வழியாக சுவாசம் செய்யக்கூடாது. மூக்கினாலேயே சுவாசிக்க வேண்டும்.
இந்த பயிற்சி முடிந்த உடன் மல்லாந்து படுத்துக்கொண்டு, கண்களை இறுக்கி மூடிக்கொண்டு அசையாமல் பத்துநிமிடம் படுத்திருத்தல் வேண்டும். இதன்மூலம் உடலுக்கு இதமாகவும் மற்றும் இரத்த ஓட்டம் சீராகி இதயத்துக்கு பலத்தினை அளிக்கும். இந்த பயிற்சி மூலமாக இரத்த ஓட்டம் சீராகி, இரத்த கொதிப்பு ஏற்படுவதை தடுக்கின்றது.
Related posts
Click to comment