அதிரசத்துக்கு மாவை வீட்டிலேயே அரைக்கலாம். நாலு கப் பச்சரிசியை நன்றாக களைந்து ஒரு வடிதட்டியில் தண்ணீரை வடிய விடவும். வடிந்த அரிசியை ஒரு கெட்டியான டவலில் பரத்தி கொஞ்சம் ஆறவிடவும். லேசாக அரிசி ஈரமாக இருக்கும்போதே மிக்சியில் போட்டு அரைக்கணும். பிறகு சல்லடையில் சலித்து, மீண்டும் அரைத்து சலித்து என்று கொஞ்சம் Long Process தான். மிஷினில் தந்து அரைப்பதானால் நன்றாக காயவைத்து தரணும். இல்லையென்றால் சேமியா போலாகிவிடும் என்று கேள்விப்பட்டேன்.
நான் மாவு அரைப்பது வீட்டிலேயே தான். மாவு கொஞ்சம் நறநறவென்று இருந்தாலும் பரவாயில்லை. இந்த மாவு வெள்ளை வெளேரென்று இருக்கும். மாவு உள்ள அளவுக்கு முக்கால் பங்கு வெல்லம் தேவை. பாகு வெல்லமாயிருந்தால் நல்லது. பொடியாக நறுக்கிய வெல்லம் நாலு கப் மாவுக்கு மூணு கப் வேண்டும். மாவு ஈர மாவு என்பதால் லைட் ஆக இருக்கும். சோ, அளக்கும்போது கப்பை தட்டி தட்டி மாவை அளக்கவும்.
அடுத்து பாகு வைக்கணும். பாகு இளம் பாகாக இருக்க வேண்டியது அவசியம். இளம் பாகு என்றால் பாகை ஒரு கப் நீரில் விட்டதும் கையால் எடுத்தால் தொய்யும். முதலில் வெல்லத்தில் நீர் சேர்த்து கரைந்ததும் வடிகட்டி குப்பை மண்ணை நீக்கணும். பிறகு மீண்டும் அடுப்பிலேற்றி காய்ச்ச பாகு வரத்தொடங்கும். இளம் பாகு வந்ததும் ரெண்டு மூன்று கரண்டி பாகை தனியாக எடுத்து வைத்துவிடவும். ஏனென்றால் இந்த அளவு வெல்லப்பாகுக்கு சில சமயம் மாவு பத்தாமல் போய்விடும். மீண்டும் அரிசி களைந்து உணர்த்தி என்று பெரிய process இருப்பதால் பாகை கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டால் மாவை அட்ஜஸ்ட் பண்ண சரியாக இருக்கும்.
பாகை இறக்கி வைத்து அது கொள்ளும்வரை மாவை கொட்டி நிதானமாக கலக்கவும். பாகும் மாவும் சேர்ந்த கலவை கொஞ்சம் தளர்த்தியாக இருந்தாலும் சரி. ஏனென்றால் மறுநாள்தான் அதிரசம் செய்ய முடியும். மறுநாள் பார்க்கும்போது மாவு சரியான பதத்துக்கு வந்துவிடும். இப்படி கலந்து வைத்த மாவை மேலே ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு நன்கு பிசைந்து வைக்கவும். ஒரு எவர்சில்வர் டப்பாவில் அழுத்தமாக மூடி வைக்கவும்.
மறுநாள் மாவை எடுத்து அதில் ஏலக்காய் பொடி கொஞ்சம், ரெண்டு ஸ்பூன் வெள்ளை எள் சேர்த்து மீண்டும் பிசையவும். இனி அதிரசத்தை தட்டிப் பொரிக்க வேண்டியதுதான்.
பிசைந்த மாவை படத்தில் காணலாம்.
ஒரு வாழையிலை அல்லது பாலிதீன் ஷீட்டில் எண்ணெய் தடவிக்கொண்டு கையிலும் எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு லெமன் சைஸ் மாவு உருண்டையை எடுத்துக்கொண்டு ஷீட்டில் வைத்து மெலிதாக தட்டவும்.
எண்ணெய் வாணலியில் நன்கு காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஒவ்வொன்றாக பொறித்து எடுக்கணும். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் எண்ணெய் நன்றாக காய்ந்து அடுப்பும் பெரிதாக இருந்தால் அதிரசம் மேலே கோல்டன் கலரில் அழகாக இருக்கும். உள்ளே வேகாமல் மாவு நம்மை பார்த்து சிரிக்கும். இதெல்லாம் அனுபவத்தில் தெரிந்து கொண்டவை.
நிதானமாக பொரித்த அதிரசத்தை ஒரு தோசை திருப்பி ஒரு ஓட்டை கரண்டி அதாவது ஜல்லிக்கரண்டி ரெண்டுக்கும் நடுவில் வைத்து அழுத்த அதிகப்படி எண்ணெய் வடியாகும். அதை ஒரு தட்டில் சாய்த்து வைத்துவிட்டால் ஆறும். ஆறிய பின் ஒரு டப்பாவில் அடுக்கி வைத்துவிடவும்.
ரெண்டு கரண்டிகள் நடுவே மாட்டப்போகும் .
அதிரசங்கள்:
முதல் நாள் soft ஆக இருந்தாலும் மறுநாள் சரியான பதத்தில் இருக்கும்.
வெல்லத்தை பாகு வரும்வரை விட்டுவிட்டால் அதிரசம் கல் போலாகிவிடும். இந்த காமெடியும் நான் செய்திருக்கிறேன்.
அன்றே மாவும் அரைத்து அன்றே செய்தும் சாப்பிடவேண்டும் என்றால் பாகு இளம் பாகாக வந்தவுடன் மாவைக்கொட்டி கலந்து ஆறவிடவும். மாவு கொஞ்சம் அதிகம் சேர்த்து கெட்டியாக பிசைந்து நன்றாக ஆறியதும் ஒரேயொரு ஸ்பூன் தயிர் சேர்த்துப் பிசைந்து உடனே அதிரசம் செய்யலாம். இது soft ஆக இருக்கும். சில சமயம் shape சரியாக வராது. ஆனால் சுவையில் இது பெஸ்ட்.