தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் தேதி உலக தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தாய்ப்பால் தினவிழா சேலம் கோரிமேடு மகளிர் கலைக்கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் மணிமொழி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனுப்பிரியா தேவி, வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், மருத்துவர் ரஜினிதிலக், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது வரப்பிரசாதம். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பாலில் உள்ளது. எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை தவிர்க்கவோ, நிறுத்தவோ கூடாது. தற்போது, பணிக்கு செல்லும் பெண்களாலும், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களாலும் தாய்ப்பால் வழங்க முடிவதில்லை. இதற்காக அரசு மருத்துவமனைகளிலேயே தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இரட்டை குழந்தைகள் பிறக்கும் போது, தாய்ப்பால் வழங்குவதில் பெண்களுக்கு சிக்கல் ஏற்படலாம். அதுபோன்ற சூழ்நிலையில், இரு குழந்தைகளுக்கும் ஒரே சமயத்தில் தாய்ப்பால் வழங்குவது ஆபத்தானது. தாய்களுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவருக்கு அளித்து பின்னர், காலம் தாழ்த்தி மற்றொரு குழந்தைக்கு தாய்ப்பால் வழங்க வேண்டும். இவ்வாறு மருத்துவர் ரஜினிதிலக் தெரிவித்தார். விழாவில், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.