காதலிக்கும் போது இருந்த புரிதல். திருமணத்திற்கு பின் இருப்பதில்லை. அதனாலேயே அதிகளவு விவாகரத்துக்கள் நடக்கின்றன.
விவாகரத்து செய்பவர்களில் காதலித்து திருமணம் செய்தவர்களே அதிகம்
நமக்கு பிடிக்காத எந்த குணமும் நாம் காதலிக்கும் நபரிடம் இல்லை. அல்லது நாம் எதிர்ப்பார்க்கும் எல்லாமும் நாம் காதலிப்பவரிடம் இருக்கிறது. இவற்றைதான் காதலிக்க காரணம் என்று அநேக பேர் சொல்வார்கள். காதல் என்பது அவரவர் மனம் சம்பந்தப்பட்டது. அதில் காதலிப்பவர், எண்ணத்துக்குகூட மதிப்பு தர தேவையில்லை. ஆனால் கல்யாணம், சூழல், சமூகம், கலாச்சாரம், குடும்பம் என்று பலவற்றுடன் சம்பந்தப்பட்டது. அதில் பிறர் எண்ணங்களுக்கு மதிப்பளித்தே ஆகவேண்டும்.
‘என் விருப்பத்துக்கு ஏற்பதான் நான் உடை அணிவேன், யாருக்கும் அடிபணிய மாட்டேன், தினமும் குடித்துவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவேன்’ என்றெல்லாம் அடம்பிடிக்ககூடாது. காதலிக்கும்போது எதிர்பாலினத்தை ஈர்க்க, குஷிப்படுத்த எல்லா வித்தையையும் இறக்குவோம். அதற்கு அவர்களை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற மன துடிப்பே காரணம். அதை கல்யாணத்துக்கு பிறகும் எதிர்பார்க்கக்கூடாது. ‘அன்று எனக்காக என்னவெல்லாம் செய்தாய் இப்போது இப்படி இருக்கிறாயே’ என்று கேட்பது மிகவும் தவறு. அது நினைவுகள். அவற்றை எண்ணி மகிழ்ந்திருக்கலாம்.
அதுபோல், தினம் தினம் நடக்க வேண்டும் என்று எண்ணுவது முட்டாள்தனம். இந்த தவறான எண்ணங்கள் தலைதூக்கும் போதே அதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது. சிலர் காதலிக்கும் போது நிறைய பொய்களை சொல்லியிருப்பார்கள். அது திருமணத்துக்கு பிறகு வெளிப்பட்டால் நிச்சயம் தர்மசங்கடம்தான். ஆகையால் நிறைகளைப் பேசுவதற்கு முன், குறைகளைப் பற்றியும் தெள்ளத் தெளிவாக பேசிவிடுவது நல்லது.
நாம் நம் துணைக்காக எவ்வளவு நேரம் செலவிடுக்கிறோம் என்பதைவிட எந்த வகையில் அந்த நேரத்தை செலவிடுகிறோம் என்பதுதான் முக்கியம். இருவருக்கும் பிடித்தமான விஷயங்களைப் பற்றி அதிகம் உரையாடுங்கள். அந்த பிடித்தமான விஷயம் புத்தகம், நாடகம், தொழில்நுட்பம், சினிமா என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தினமும் குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கி, இன்று என்ன வேலைச் செய்தேன் என்பதில் தொடங்கி மேனேஜரிடம் என்ன திட்டு வாங்கினேன் என்பது வரை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தூங்குவதற்கு முன் கொஞ்ச நேரம் ஒதுக்கி, உரையாடுவதற்காக மட்டுமே செலவிடுங்கள். (அப்போது சண்டைகள் எதுவும் வேண்டாம்) சில பெண்கள் “நான் முக்கியமா இல்லை… வேலை முக்கியமா?” என்று சண்டை பிடிப்பார்கள். அவர்கள் யாரும் வேலையில்லாத ஆணோடு நிச்சயம் வாழ மாட்டார்கள். ” நான் உனக்காக, நம் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகதான் வேலை செய்கிறேன்” என்பதை அவர்களுக்கு புரியும்படி எடுத்துசொல்லுங்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, எவ்வளவு வயது கடந்திருந்தாலும் சரி, தினமும் தூங்க போவதற்கு முன்பு மனைவிக்கென நேரம் ஒதுக்குவதை குறைத்துவிடாதீர்கள்.