கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன? என்பதற்கான விளக்கத்தையும், அது செய்யும் வேலையையும் கீழே விரிவாக பார்க்கலாம்.
‘கார்டியாக் அரஸ்ட்’ என்றால் என்ன?
மாரடைப்பு எனப்படும் “ஹார்ட் அட்டாக்”குக்கும் “கார்டியாக் அரஸ்ட்”டுக்கும் சிறு வித்தியாசம் உள்ளது. ‘ஹார்ட்அட்டா’க்கும், “கார்டியாக் அரஸ்ட்”டும் வேறு, வேறானவை.
மாரடைப்பு ஏற்படும் போதுதான் “கார்டியாக் அரஸ்ட்” என்ற நிலை உருவாகும். என்றாலும் இரண்டும் ஒன்றல்ல.
‘ஹார்ட் அட்டாக்’ என்பது நமது இதயம் இயங்குவதற்கு ரத்த நாளங்கள் மூலம் கிடைக்கும் ரத்தம் சீராக கிடைக்காமல் திடீரென தடைபடுவதால் ஏற்படுவதாகும். மார்பில் வலி ஏற்படுவது இதன் அறிகுறியாகும்.
‘ஹார்ட் அட்டாக்’ நிகழும்போது நோயாளிகள் பெரும்பாலும் உணர்வுடன் இருப்பார்கள். சுவாசிப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களது இதயம் தொடர்ந்து துடித்தப்படி இருக்கும். அது ரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பும்.
ஆனால் “கார்டியாக் அரஸ்ட்” என்பது இதயம் தனது வழக்கமான துடிப்பையே அப்படியே நிறுத்திக் கொள்வதாகும். இதயம் துடிப்பது திடீரென நின்று போனால், அது ரத்தத்தை “பம்ப்” செய்யாது.
இதயம் ரத்தத்தை “பம்ப்” செய்யாவிட்டால் உடல் முழுவதுக்கும் ரத்த ஓட்டம் நடக்காது. ரத்த ஓட்டம் நின்றால் மயக்கம் உண்டாகும். உணர்வற்ற நிலைக்கு சென்று விடுவார்கள்.
‘கார்டியாக் அரஸ்ட்’ எனப்படும் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டால் அடுத்த நிமிடமே சிகிச்சைகள் பெற வேண்டியது அவசியமாகும். குறிப்பாக சுவாசத்தை நீட்டிக்க சி.பி.ஆர். எனும் சிகிச்சையை அவசியம் அளிக்க வேண்டும்.
சுவாசம் சீரான பிறகு ‘கார்டியாக் அரஸ்ட்’ நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்து டாக்டர்கள் அதற்கு ஏற்ப சிகிச்சை அளிப்பார்கள். ஏனெனில் ‘கார்டியாக் அரஸ்டில்’ பல வகைகள் உள்ளது.
இதயத் துடிப்பு திடீரென உயர்ந்து இயல்பை விட அதிகமாக துடிக்கும் போது தான் “கார்டியாக் அரஸ்ட்” ஏற்படும். இதுதான் இதயம் செயல் இழந்து போவதற்கான பொதுவான முக்கியமான காரணமாகும். இதை டாக்டர்கள் “வென்ட்ரிக்குலர் பைப்ரிலேசன்” என்று சொல்வார்கள்.
இதயத் துடிப்பு அதிகரிப்பு மட்டுமின்றி இதய நோய்களும் கூட ‘கார்டியாக் அரஸ்ட்’ உருவாக காரணமாகி விடும். இதயம் நல்ல வலுவான நிலையில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை வராது.
‘கார்டியாக் அரஸ்ட்’ பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி உரிய நேரத்தில் மிகச் சரியான சிகிச்சை முறையை அளிப்பதுதான். எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தும் இதற்கு சிகிச்சை அளிப்பதுண்டு.
செயற்கை இதய செயல்பாடு கருவி பொருத்தியும் சிகிச்சையை தொடர்வதுண்டு.