வாயுப் பிரச்சனை, ஏப்பம், அஜீரணம், வயிற்றில் சத்தம், வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் செய்ய வேண்டிய முத்திரையை பார்க்கலாம்.
வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வாயு முத்திரை
ஆள்காட்டி விரல், கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும் குறிக்கின்றன. நெருப்பு விரலால் காற்று விரல் அழுத்தப்பட்டு, உடலில் உள்ள வாயுவைக் குறைக்கிறது (Supress) என்று சொல்லலாம்.
உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு உடலில் வாயு அதிகமாகச் சேரும். மேலும், நம் இந்திய உணவுகள் வாயுவை உண்டாக்கக்கூடியவை. அதனால், மூட்டு வாதம், கை, கால் வலி, ஏப்பம், அஜீரணம், மலக்காற்று பிரிதல், நெஞ்சு எரிச்சல், வயிற்றில் சத்தம், வயிற்று உப்புசம், வயிற்றுப் புண், கை கால் பிடிப்பு, நெஞ்சு குத்தல், நெஞ்சு வலி போன்றவை ஏற்படலாம். வாயு முத்திரை இவற்றைச் சரி செய்யும். 10 நிமிடங்களிலேயே பலன் தெரியும்.
வாயுப் பிரச்சனை இருப்பவர்கள், தொடர்ந்து செய்யலாம். சிலருக்குத் தொடர்ந்து 10 நாட்கள் செய்யும்போது, மூச்சுத் திணறல் ஏற்படலாம். அவர்களுக்கு விசீங் பிரச்னை இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே, இதை அவர்கள் செய்ய வேண்டாம்.
முத்திரைகளின் கட்டளைகள்
தரையில் விரிப்பை விரித்து, கண்கள் திறந்தவாறு கழுத்து மற்றும் முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி சம்மணம் போட்டு நிமிர்ந்து உட்காரவும். முடியாதவர்கள், நாற்காலியில் அமரலாம். ஆனால், பாதங்கள் தரையில் முழுமையாகப் பட வேண்டும். கால்களைக் குறுக்காகவோ, கால் மேல் கால் போட்டு உட்காரவோ கூடாது. படுக்கையில் செய்வோர், தலையணை இல்லாமல் முத்திரைகளைச் செய்யலாம்.
விரல் நுனிகள் தொட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தாலே போதும். மூச்சு இழுத்துப் பிடிக்க தேவை இல்லை. சாதாரணமாக இருக்கலாம்.
வெறும் வயிற்றில் செய்வது சிறப்பு. தவிர, சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்துச் செய்யலாம். பஸ், கார் போன்ற பயணங்களில்கூட முத்திரைகள் செய்யலாம்.
காலை 6, 7 மணிக்குள் செய்தால், முழு பலன் கிடைக்கும். ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) செய்யலாம். புதிதாகச் செய்பவர்களுக்கு, ஐந்து நிமிடங்களே போதுமானது.