நீண்ட நாளாக உள்ள மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த ஆசனம் ஒரு சிறந்த தீர்வு.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் பவன முக்தாசனம்
செய்முறை :
விரிப்பின் மேல் வசதியாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். இது ஆரம்பநிலை.
சுவாசத்தை உள்ளிழுத்து கைவிரல்களைப் பூட்டி வலது காலை சற்று மடக்கி முழங்கால் மூட்டுக்குக் கீழே பிடிக்கவும். பின்பு வலது முழங்காலை மடக்கி, தொடைப்பகுதியை நெஞ்சை நோக்கி இழுக்கவும். இடது கால் தரையில் நேராக இருத்தல் அவசியம்.
சுவாசத்தை உள்ளடக்கி தலை மற்றும் தோள்பட்டையை உயர்த்தி நெற்றியால் முழங்காலைத் தொட முயற்சிக்கவும். இது இறுதி நிலை. 10 விநாடிகள் இதில் நிற்கவும்.
சுவாசத்தை வெளியேற்றி உடலைத் தளர்த்தி ஆரம்பநிலைக்கு வரவும். இதே போல இடதுபுறமும் செய்யவும். இரு கால்களையும் ஒன்றாக மடக்கி நெற்றியால் தொடுதல் பவன முக்தாசனம் ஆகும். 3-5 முறைகள் இப்பயிற்சியைச் செய்யலாம்.
பயன்கள்…
முதுகுத்தசைகளை வலுவடையச் செய்கிறது. வயிற்றுப்பகுதி நன்கு அழுத்தப்பட்டு மசாஜ் செய்யப்படுவதனால் வயிற்றில் உள்ள வாயு வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் இதற்கு பவன(வாயு) முக்த (வெளியேற்றல்) ஆசனம் என்று பெயர். நீண்ட நாளாக உள்ள மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த ஆசனம் ஒரு சிறந்த தீர்வு!