இதயத்தில் ஓட்டை ஏற்படுமா என்றால் இல்லை. அது ஓட்டை இல்லை. முழுமை அடையாத சுவர்.
இதயத்தில் ஓட்டை என்பது சரியா?
சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தின் மீது பரிதாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் அந்த கதாபாத்திரத்திற்கு ‘கேன்சர்’ இருப்பதாக சொல்வார்கள். இல்லையென்றால் ‘இதயத்தில் ஓட்டை’ இருப்பதாக காட்டுவார்கள். உண்மையில் இதயத்தில் ஓட்டை ஏற்படுமா என்ற கேள்வியோடு டாக்டரிடம் சென்றால், அவர் அது ஓட்டை இல்லை. முழுமை அடையாத சுவர் என்கிறார்.
தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே குழந்தைக்கு இதயம் உருவாகி விடுகிறது. அதுவும் முதல் மூன்று மாதங்களிலேயே இதயம் உருப்பெறும். இந்த இதயம் ஒரு அறையைக் கொண்டதாக இருக்கும். படிப்படியாக இதயம் வளர, வளர தனித்தனியாக குறுக்குச் சுவர்கள் உருவாகி நான்கு அறைகளாக பிரிகின்றன. இவற்றில் இரண்டு அறைகளுக்கு இடையேயான தடுப்புச் சுவர் முழுமை பெறாமல் போய் விடுவதைத்தான் ‘இதயத்தில் ஓட்டை’ என்கிறார்கள்.
இதனால் ஏற்படும் விளைவுகள் ஆரம்ப காலக்கட்டத்தில் வெளியில் தெரிவதில்லை. சாதாரண மனிதர்களைப் போலவே இவர்களும் செயல்படுகிறார்கள். ஆனால் 30, 40 வயது எட்டும்போதுதான் இந்த குறை தன் கைவரிசையை காட்டுகிறது. நுரையீரலில் ரத்த அழுத்தம் அதிகமாவதுதான் அபாயத்தின் முதல் தொடக்கம். இந்த நுரையீரல் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை பெண்களுக்கு பிரசவம் கூட எந்த வித சிக்கலும் இல்லாமல் நடந்து முடிந்துவிடும்.
இதயத்தில் ரத்த ஓட்டம் என்பது, இதயத்தின் மேல்பக்கம் வலதுபுறத்தில் உள்ள ‘ஏட்ரியம்’ என்ற அறைக்கு வந்து அங்கிருந்த இதயத்தின் கீழ்பக்கம் உள்ள ‘வென்ட்ரிக்கிள்’ வழியாக நுரையீரலுக்கு போகிறது. நுரையீரலில் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இப்படி சுத்திகரிக்கப்படும் ரத்தம் மீண்டும் இதயத்தின் இடது பக்க ஏட்ரியம் வழியாக இடது வென்ட்ரிக்களுக்கு அனுப்பப்பட்டு உடல் முழுவதும் வினியோகிக்கப்படுகிறது. இதுதான் ரத்த ஓட்ட அமைப்பு.
ஆனால் இதயத்தில் ஓட்டை உள்ளவர்களுக்கு நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்டு வரும் ரத்தம், இடது ஏட்ரியத்தில் இருந்து ஓட்டை வழியாக வலது ஏட்ரியத்துக்கு வந்து மீண்டும் நுரையீரலுக்கு செல்கிறது. இதனால் நுரையீரலுக்கு சுத்திகரிப்புக்காக சாதாரணமாக வரும் ரத்தத்தின் அளவைவிட அதிகமாகிறது.
இதனால்தான் பிரச்சினை ஏற்படுகிறது. இப்படி தொடர்ந்து அதிக அளவு ரத்தத்தை சுத்திகரித்துக் கொண்டே இருப்பதால் நுரையீரலில் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த அழுத்தம் 30 அல்லது 40 வயதில் உச்சத்தை அடைகிறது. ரத்த அழுத்தம் படிப்படியாக உயர்ந்து மிக அதிக அளவை எட்டும்போது, ரத்தம் திருப்பி அனுப்பப்படுகிறது. அதாவது வழக்கமான திசையில் ரத்த ஓட்டம் நிகழ்வது சிரமமாகி, எதிரான திசையில் ஓட ஆரம்பிக்கிறது.
இதுதான் விபரீதத்தின் உச்சக்கட்டம். இதன் விளைவாக சுத்திகரிக்கப்படாத அசுத்த ரத்தம் உடலின் பாகங்களுக்கு அனுப்பப்படுவதால் பலவிதமான உடல் உபாதைகள் நேர ஆரம்பிக்கின்றன.
இதை மூன்று வயதிலேயே எளிதான அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம். வயதானால் செய்வது சிரமம். வயதானவர்கள் என்றால் மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அறுவை சிகிச்சை தான் இதற்கு நிரந்தர தீர்வு என்கிறார்கள். இப்போது நமது நகரங்களிலேயே இதுபோன்ற சிகிச்சை வந்து விட்டது, ஓர் ஆறுதலான விஷயம்.