சிறுநீரகக் கல் பிரச்சினை பெரிதாகும்போது, உரிய சிகிச்சை எடுத்து அதற்கு தீர்வு பெற வேண்டும்.
சிறுநீரகக் கற்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?
உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்திகரித்து, கழிவை சிறுநீராக வெளியேற்றும் முக்கியமான பணியை நமது சிறுநீரகங்கள் செய்கின்றன.
பொதுவாக சிறுநீரில் பல வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் கால்சியம், ஆக்சலேட் போன்ற உப்புகள் வழக்கமாக ஒன்று சேர்ந்து திடப்பொருள் களாக மாறுவதில்லை.
சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள், இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
பொதுவாக இந்தக் கற்கள் சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுத்தாதவரை, அறிகுறிகள் வெளியில் தென்படாது.
சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் இந்தக் கல், உடலில் இருந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது கடுமையான வலி ஏற்படும்.
இதனால் சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினை உண்டாகும். கற்களின் வெளிப்பரப்பு முட்கள் போல் இருந்தால் நீர்ப் பாதையின் சவ்வுப்படலத்தில் உராய்ந்து சிறுநீரில் ரத்தம் வெளி வரக்கூடும், மேலும் முதுகில் வலி ஆரம்பித்து, அது வயிற்றுப்பகுதிக்கு மாற்றம் ஆகும்.
அடிவயிற்றில் வலித்தல், தொடைகள், அந்தரங்க உறுப்புகளில் வலி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை ஏற்பட்டால் அது சிறுநீரகக் கல்லாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
சிலருக்கு சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கு உணவுப் பழக்கம் ஒரு காரணமாக இருக்கலாம். பரம்பரையால் கூட சிறுநீரகக்கல் பிரச்சினை ஏற்படலாம்.
சில உணவு வகைகளை தவிர்ப்பதன் மூலமும், தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவதன் மூலமும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் ஓரளவு தடுக்கலாம்.
பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை தினசரி உணவு களில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உப்பு, இனிப்பு வகைகள், இறைச்சி ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்களின் சாறைக் குடித்தால், அது சிறுநீரில் அமிலத் தன்மையைக் குறைத்து கல் உருவாவதைத் தடுக்கும்.
சிறுநீரகக் கல் பிரச்சினை பெரிதாகும்போது, உரிய சிகிச்சை எடுத்து அதற்கு தீர்வு பெற வேண்டும்.