இறவா புகழோடு வாழுகிற நமது தலைவர்கள் என்பதை மாணவர்கள், இளைய தலைமுறையினர் நினைவில் கொள்ளவேண்டும்.
மாணவ-மாணவிகளுக்கு நற்பண்புகளே சிறந்த கல்வி
மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் மட்டுமின்றி, பிற திறன்களையும் கற்றுத்தருவதில் பள்ளிகள் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன. அதற்கு ஏற்ப மாணவர்களும் பல்வேறு திறன்களை வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். பாடப்புத்தகங்களை அப்படியே மனப்பாடம் செய்யும் அளவுக்கு திறன் பெற்றவர்களாக மாறி வருகிறார்கள். இதற்கான பள்ளிகள் பல்வேறு விதமான பயிற்சிகளை தொடர்ந்து மாணவர்களுக்கு அளித்து வருகின்றன.
ஆனால் பண்பு, அறம், நெறி சார்ந்த கல்வி மாணவர்களுக்கு எந்த இடத்திலும் வழங்கப்படாத நிலை உள்ளது. தற்போது போட்டி நிறைந்த உலகமாக உள்ளது. இதில் ஒவ்வொருவரும் போராடித்தான் தங்களின் இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது இருக்கிறது. எனவே எந்த வழியில் பயணிக்கிறோம் என்பது பற்றி யாரும் கவலைப்படாத நிலை உருவாகிவிட்டது.
மாறாக வெற்றி முக்கியம். எந்த வழியிலும் பயணிக்கலாம் என்ற மனப்போக்கு அதிகரித்துவிட்டது. இது மாணவர்கள் சிலரை தவறான திசையில் பயணிக்க செய்து விடுகிறது. அதுபோன்ற நேரங்களில் நல்லது, கெட்டது பற்றி அவர்கள் சிந்திப்பது இல்லை. மேலும் தவறு செய்வதால் தங்களின் நிலை தாழ்வாக கருதப்படும் என்று நினைத்துப்பார்ப்பதும் இல்லை.
இதற்கு ஒருவரிடம் இயல்பிலேயே இருக்க வேண்டிய பணிவு, விட்டுக்கொடுத்தல், பிறரை மதித்தல், உதவி செய்தல் போன்ற பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது காரணமாகிறது. மேலும் பண்புள்ள நபர்கள் குறித்து தவறாக சித்தரிப்பதையும் ஆபத்தான போக்காகவே கருத வேண்டி இருக்கிறது.
நற்பண்புகள் தான் ஒருவனை எந்த நிலையிலும் தலைகுனியவிடாது. எந்த இடத்திலும் நெஞ்சை நிமிர்த்தி நடைபோட வைக்கும். யாரையும் தைரியமாக சந்திக்கும் துணிவை தரும். எனவே மாணவர்கள் எந்த சூழலிலும் தவறான வழிகளை தேர்ந்தெடுத்துவிடக்கூடாது.
எப்போதும் நல்ல வழிகளில் நம்பிக்கை கொண்டு பயணிக்க வேண்டும். அதற்கு தேவையான பண்புகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது வெற்றியை மட்டும் நோக்கியது என்று கருதி செயல்பட்டால் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் இழந்துவிட நேரிடும். அப்படிப்பட்ட நிலையில் எவ்வளவு பெரிய வெற்றியின் பீடத்தில் அமர்ந்திருந்தாலும், அதனால் எந்த பயனும் இல்லை.
எனவே வறுமை வாட்டிய நிலையிலும் பண்புகளோடு இருக்கிறவர்கள் எப்போதும் மதிப்பிற்குரியவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். எனவே மாணவர்கள் நற்பண்புகளை கற்றுக்கொண்டு, அதன்படி நடக்கவேண்டும். நல்ல நடத்தை தான் ஒருவனின் மரணத்துக்கு பிறகும் போற்றுதலுக்குரிய சொத்தாக இருக்கும். அப்படி வாழ்ந்தவர்கள் தான் இறந்ததும். இறவா புகழோடு வாழுகிற நமது தலைவர்கள் என்பதை மாணவர்கள், இளைய தலைமுறையினர் நினைவில் கொள்ளவேண்டும்.
அதற்கு ஏற்ப மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்காத தனது தரத்தை தாழ்த்திக்கொள்ளாத பண்புகளோடு எப்போதும் செயல்படவேண்டும். அந்த நற்பண்புகள் தான் ஒருவருடைய பெயருக்கான உண்மையான அடையாளமாக வெற்றியாக திகழும். கல்வி கற்றதன் மூலம் ஒருவர் எவ்வளவு உயர்ந்த பதவி மற்றும் அதிகாரத்தில் இருக்கலாம். ஆனால் நற்பண்புகள்தான் ஒரு மனிதன் கற்ற சிறந்த கல்வியாக இருக்கும்.