அழகு என்பது என்ன?
‘அழகு என்பது நிறத்துக்கு அப்பாற்பட்டது… கறுப்பும் அழகே’ என்று வெள்ளை மீதுள்ள அதீத கவர்ச்சிக்கு எதிரான சவால்கள் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டிருந்தாலும், இப்போது டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவிகள் புதிய பிரசாரத்தை சமூக ஊடகங்கள் வாயிலாக உலகம் முழுவதும் தொடங்கி வைத்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் நிறத்துக்கு எதிரான உலகளாவிய பிரசாரம் #unfairandlovely என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. வெள்ளையே கவர்ச்சி என்ற உலக மக்களின் நம்பிக்கைக்கு எதிராக சவால்களை விடுத்துள்ளனர் இப்பெண்கள். வெள்ளை சருமப் பெண்களுக்கு மட்டுமே பெருநகரங்களில் வேலை கிடைப்பது போலவும், எளிதில் மாப்பிள்ளை கிடைப்பது போலவும் ஆண்டாண்டு காலமாக விளம்பரங்களிலும், மேட்ரி மோனியல் வெப்சைட்டுகளிலும் கற்பனையாக சித்தரிக்கப்படுகிறது.
இந்நிலை நம் நாட்டில் மட்டுமல்ல… உலகம் முழுக்கவே உண்டு. இதனால் பல கோடி மக்கள் தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்ள சருமத்தை ப்ளீச் செய்துகொள்கிறார்கள். சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை தயாரிக்கும் கம்பெனிகள், ‘உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டுமா? நல்ல துணை கிடைக்கவேண்டுமா? உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டுமா? எங்கள் க்ரீம்களை உபயோகியுங்கள்’ என்று விளம்பரம் செய்கிறார்கள். இந்த விளம்பரங்கள், தங்களைப் பற்றிய அவநம்பிக்கைகளையே அவர்கள் மனதுக்குள் விதைக்கின்றன.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் டெக்சாஸ் மாணவியான 21 வயது பேக்ஸ் ஜோன்ஸ் தன்னுடன் படித்தவர்களில் மிருஷா, யனூஷா மற்றும் யோகராஜா ஆகிய சகோதரிகளின் புகைப்படத் தொடரை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.”எங்கள் இலக்கு, ஊடகங்களில் கறுப்பு நிறத்தவர்களை புறம் தள்ளுதலுக்கும் நிறப்பாகுபாடுக்கும் எதிரானது. நிறப்பாகுபாடு, கறுமை நிறத்தவர்களின் வாழ்வில் ஊடுருவுவதை எதிர்க்கும் சவால்களை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். உலகில் உள்ள கறுப்பு நிற பெண்களின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்” என்கிறார் பேக்ஸ் ஜோன்ஸ்.
“கல்லூரியிலேயே நிறம் சார்ந்த ஏராளமான அவமானங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஒருமுறை கல்லூரி வளாகத்தில் எங்கள் மீது ப்ளீச்சிங் பலூன் ஒன்றை வெள்ளை சரும மாணவர்கள் எறிந்தனர். இதுபோன்ற அவமானங்கள் எங்கள் மனதை மிகவும் புண்பட வைத்தன. மக்கள் ஏன் இப்படி மனிதாபிமானமற்ற வழியில் நடந்து கொள்கின்றனர் என்று சிந்தித்தோம். எங்களது தோற்றத்தை மட்டுமே பார்க்கும் இவர்கள் எங்கள் மனதை சிறிதும் மதிப்பதில்லை. நிறம் சம்பந்தமான விவாதங்களை தொடங்க இந்த சம்பவங்களே தூண்டுகோலாக இருந்தன. அதில் வெற்றியும் பெற்றுவிட்டோம்” என்று கோரஸாக குரல் எழுப்புகிறார்கள் இம்மாணவிகள்.