பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை.
இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் கவனிக்க வேண்டியவை
பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைப் பற்றி அவ்வளவாக யாரும் கண்டுகொள்வதில்லை. பொதுவாக அவர்கள் மிக நிதானமாக ஓட்டுவதாகவும், அதிக வேகம் போவதில்லை என்றும் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 15 வருடங்களாக பெண்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அதிகரித்திருக்கிறது, குறிப்பாக நகரப் பெண்கள். சற்று கூர்மையாகக் கவனிக்கும்பட்சத்தில், வெகு சில பெண்களே சரியாகவும் கட்டுப்பாட்டுடனும் வண்டி ஓட்டுகிறார்கள்.
1. தெருமுனை வருவதற்கு சில அடிகள் முன்னமே ப்ரேக் பிடித்து நின்றே திரும்பவேண்டும். எதிரிலோ குறுக்கிலோ வாகனமே வரவில்லையென்றாலும் பரவாயில்லை.
2. எந்த வாகனத்தையும் அவசரப்பட்டு முந்தவேண்டாம். குறிப்பாக இடப்பக்கமாக முந்துவது கூடவே கூடாது. எதிர் வாகனங்களைப் பார்த்தே வலதுபக்கமாக, அதுவும் அத்தியாவசியமெனில் முந்தலாம்.
3. பதற்றமாக இருக்கும்போது இருசக்கர வாகனத்தை எடுக்கக் கூடாது. சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு பின் வண்டியை எடுக்கலாம். பதற்றமாகி பின் கிளம்பும்போது மெதுவாகச் செல்வது உத்தமம்.
4. ஹெல்மெட் கட்டாயம் அணிந்துகொண்டுதான் செல்லவேண்டும்.
5. பெண்கள் முகம் முழுக்க துப்பட்டாவை சுற்றி, ஒரு பெரிய கண்ணாடி அணிந்துகொண்டு நீளக் கையுறைகளுடன் செல்வது தற்போது அதிகமாக தென்படும் சாலைக் காட்சிகளில் ஒன்று. கூடியமட்டும் இப்படி செல்வதைத் தவிர்க்கலாம். அப்படி செய்யும்போது சுவாசம் முட்டாமலும், தலையில் ஹெல்மெட் அணிந்தும் கொஞ்சம் மங்கல்குறைந்த கண்ணாடி அணிந்து செல்வது மிக நல்லது. சரும பாதுகாப்பு முக்கியம்தான். அதைவிட உயிர் பாதுகாப்பு முக்கியம்.
6. வாகனம் ஓட்டும்போது பாட்டு கேட்டுக்கொண்டு செல்வது, ஹெட்ஃபோன் மூலம் பேசிக்கொண்டே செல்வது அறவே வேண்டாம்.
7. பக்கக் கண்ணாடிகளைப் பார்க்காமல் வண்டியைத் திருப்பவோ நிறுத்தவோ சாலை கடக்கவோ கூடாது.
8. வண்டியின் பிடியும், உட்காரும் நிலையும் ஆரம்பிக்கும்போது எந்த அளவு பிடிமானமும் கட்டுப்பாடும் இருக்கிறதோ, அது ஓட்டும்போதும், ப்ரேக் பிடித்து நிறுத்தும்போதும் இருக்கவேண்டும்.
9. இரண்டுபேருக்கு மேல் செல்வதை கூடியமட்டும் தவிர்க்கவும்.
10. பிரச்சனைகளை விவாதித்தபடி வாகனம் ஓட்டுவது அறவே தவிர்க்கவும். (இந்த டிப்ஸ் தம்பதிகளுக்கும், காதலர்களுக்கும்)
– இது அடிப்படை டிப்ஸ்கள் தான். இதை பின்பற்ற ஆரம்பித்தால் மற்ற விஷயங்கள் தானாகவே பிடிபட்டுவிடும்.
வாகனம் ஓட்டுவது என்பது நேர சேமிப்பு, எளிதில் சென்றடைவது போன்றவைகளை விட, அதுவும் ஒரு கலை. அதைக் கலைநயத்துடன் முழுமையாக உணர்ந்து செய்வது இன்னும் உன்னதம்
எது நடக்கவேண்டுமென்று இருக்கிறதோ அது நடந்தே ஆகும் என்றால், அதற்கு பதில் சொல்வது இயலாதகாரியம்.
எது நடந்தாலும் நாம் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காவே இந்தக் கட்டுரை..