உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா கடந்த 22ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில், அமெரிக்காவின் ஹூஸ்டனில் வசிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில், ‘பிரபஞ்சம் சொல்வது ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகம் நேற்று வானத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான இந்திய அமெரிக்கர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து, காவி கொடிகளை அசைத்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர்.
விமானப் போக்குவரத்து நிகழ்வின் ஏற்பாட்டாளர் உமாங் மேத்தா கூறுகையில், “ 500 ஆண்டுகால தியாகம் மற்றும் உறுதிப்பாட்டின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஸ்ரீராமர் கோயில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இதை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். ஸ்ரீராமரின் நினைவாக வான்வழி பேனர் ஏற்றப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. ”