26.6 C
Chennai
Monday, Nov 25, 2024
ld2463
ஃபேஷன்

புதுசு புதுசா அணிய புதுமையா சொல்றோம்!

நடிகைகளும் பிரபலப்பெண்களும் அணிகிற உடை முதல் நகை வரை அத்தனையின் மீதும் சாமானியப் பெண்களுக்கு நிச்சயம் ஒரு பொறாமைப் பார்வை இருக்கும். ‘அவங்களுக்கென்ன… பணத்துக்கா பஞ்சம்? ஒரு முறை போட்ட நகையை இன்னொரு முறை போட மாட்டாங்க… தங்கமும் வெள்ளியும் விற்கற விலையில, நமக்கெல்லாம் அது எங்கேருந்து சாத்தியம்?’ என்கிற புலம்பலையும் கேட்கலாம்.

நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரி எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா பிரபலங்களும் தங்கத்திலும் பிளாட்டினத்திலுமே வலம் வருவதில்லை. பொய் தங்கமோ, போலியான முத்தோ… பிரபலங்கள் அணிவதால், அசல் என நம்பப்படுகிறது. ‘அவங்களாவது டூப்ளிகேட் போடறதாவது’ என்கிற நினைப்பில், அவற்றை உண்மையென ஏற்றுக் கொள்கிறோம்.

”அசல் தங்கமும் வெள்ளியும் பிளாட்டினமுமே தோற்றுப் போற அளவுக்கு, அதே அழகில், டிசைனில் செயற்கை நகைகள் கிடைக்குது. பிரபலங்கள் மட்டுமில்லாம, நகைக்கடை விளம்பர மாடல்கள்கூட இதைத்தான் அணிஞ்சுக்கிட்டு வலம் வராங்க” என்கிறார் ‘ஆபூஷன்’ உரிமையாளர் ரமேஷ் ((044 -42555503). ”புகழ் வெளிச்சத்துல இருக்கிற பெண்களுக்கு, ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் போகும் போதும், புதுசு புதுசா நகை அணிய வேண்டியிருக்கும். ஏற்கனவே போட்டதை மறுபடி போட்டுக்கிட்டா, மத்தவங்க சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்க.

எல்லாராலயும் நினைச்ச போதெல்லாம் நகைகளுக்கு செலவு பண்ண முடியாது. தவிர, அந்த நகைகளைப் பத்திரப்படுத்தறது பிரபலங்களுக்கும் சிரமமான வேலைதான். அசல் தங்கத்தையும் வெள்ளியையும் பிளாட்டினத்தையும் போலவே செயற்கையான நகைகள் நிறைய வந்திருக்கு. தங்கமோ, வெள்ளியோ வாங்கறப்ப செய்கூலி, சேதாரம்னு ஒரு பெரிய தொகையை இழக்க வேண்டியிருக்கும். அந்த செலவுலயே செயற்கை நகைகளை வாங்கிடலாம்…” என்கிற ரமேஷ், லேட்டஸ்ட் நகைகள் சிலவற்றைப் பற்றிவிளக்குகிறார்.

ஸெர்கான் நகைகள்

வைரமில்லை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அசல் வைரக் கற்களைப் போலவே மின்னக்கூடியவை. வைரம் வாங்குவதென்றால் ஒரு கேரட் 60 ஆயிரம் ரூபாய். அதுவே செயற்கையானது என்றால் வெறும் 3 ஆயிரத்தில் வாங்கலாம். வெஸ்டர்ன் முதல் பாரம்பரிய பட்டு வரை எல்லா உடைகளுக்கும் அம்சமாகப் பொருந்தும்.

பிளாட்டினம் பிளேட்டட்

மேல்தட்டு மக்களால் மட்டுமே பிளாட்டினம் வாங்கி அணிய முடியும் என மிரட்டுகிறது அதன் விலை. ஆசைக்கு ஒரு மோதிரம் வாங்குவதானால்கூட, கால் லகரத்தை வைத்தால்தான் முடியும். செயற்கையாக வருகிற பிளாட்டினம் பிளேட்டட் நகைகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். வகைக்கொன்றாக வாங்கி, அணிந்து மகிழலாம். வெஸ்டர்ன் உடைகளுக்கு அட்டகாசமாகப் பொருந்தக்கூடிய இதில், சின்ன செயின், பென்டென்ட், நெக்லஸ், காதணிகள், பிரேஸ்லெட் என எல்லாமே கிடைக்கின்றன. விலை 2,500 ரூபாயிலிருந்து ஆரம்பம்.

ஆன்ட்டிக்

பழமையின் பெருமை பேசுகிற ஆன்ட்டிக் நகைகளுக்கு இப்போது தனி மவுசு. ஆன்ட்டிக் நகைகளின் விலையும் சாதாரண மக்கள் யோசிக்க முடியாதது. தங்கம், வெள்ளியில் பெரும்பாலும், கேஸ்ட்டிங் எனப்படுகிற முறையில் உருவாக்கப்படுகின்றன ஆன்ட்டிக் நகைகள். அதே ஃபினிஷிங்கில், அதே அழகில், முழுக்க முழுக்க கைகளால் வடிவமைக்கப்பட்ட ஆன்ட்டிக் நகைகள் செயற்கை உலோகங்களில் கிடைக்கின்றன. பட்டுப் புடவைக்குப் பாந்தமாக இருக்கும். ஆயிரங்களில் இருந்து ஆரம்பிக்கிறது விலை.

கெம்ப் ஸ்டோன் நகைகள்

அதிக பளபளப்பில்லாத, மேட் ஃபினிஷிங்கில் பச்சையும், சிவப்புமான கற்கள் பதித்த கெம்ப் செட் நகைகளுக்கு இன்று எக்கச்சக்க வரவேற்பு. ஒரிஜினல் கெம்ப் நகை என்றால், ஒரு ஜோடி ஜிமிக்கியே 75 ஆயிரம் ரூபாய். அதையே விலை மலிவாக 1,200 ரூபாயில் வாங்கலாம். காதணி, நெக்லஸ் என எல்லாம் உண்டு.

பீடட் நகைகள்

ரூபி, எமரால்ட், அமெதிஸ்ட் என விலை உயர்ந்த கற்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகிற அனைத்து நகைகளும் செயற்கையாகவும் கிடைக்கின்றன. ஒரிஜினல் கற்கள் மற்றும் மணிகள் என்றால் சில பல லட்சங்களை வைத்தாக வேண்டும். ஒரிஜினலாக கிடைக்கிற அத்தனை கற்களின் கலர்களிலும் பளபளப்பிலும் செயற்கையாகவும் உருவாக்க முடியும். விலை சில ஆயிரங்கள் மட்டுமே.

பிளெயின் கோல்ட்

இது தங்கப் பிரியர்களுக்கானது. தங்கம் மாதிரியே இருக்க வேண்டும். ஆனால், கவரிங் விலைக்குக் கிடைக்க வேண்டும் என்பவர்களுக்கானது. மணப்பெண்களுக்கான முழு செட், ஜிமிக்கி, நெக்லஸ், வளையல், செயின், பிரேஸ்லெட், கொலுசு என தங்கத்தில் என்னவெல்லாம் கிடைக்குமோ அத்தனையும் இதிலும் கிடைக்கும். நீங்கள் விரும்பிய கவரிங் விலையில்.

கல்ச்சர்டு முத்து மற்றும் ஸ்டோன் நகைகள்

பிளாஸ்டிக் கலப்பில்லாத முத்து மற்றும் ஸ்டோன்ஸ் கொண்டு தயாராகிற இந்த நகைகள், அழகில் அசல் முத்து, கல் நகைகளை மிஞ்சும். ஜிமிக்கி, வளையல், நெக்லஸ், முகப்பு வைத்த செயின் என எல்லாம் செய்யலாம். வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ற வடிவத்தில், நிறத்தில், எத்தனை சரம் வேண்டுமானாலும் வைத்துச் செய்யலாம். பட்ஜெட் பர்ஸை பதம் பார்க்காது.
ld2463

Related posts

கண்ணாடி போட்டாலும் அழகாக காட்சியளிக்க சில டிப்ஸ்…

nathan

கருப்பான சிவப்பான மற்றும் குண்டான பெண்கள் எப்படி உடை அணிந்தால் அழகு!

nathan

பெண்களை கவரும் கலைநயம் பொருந்திய நவீன நெக்லஸ் வகைகள்

nathan

மங்கையர் விரும்பும் பனாரஸ் புடவைகள்

nathan

பட்டுச்சேலை இவற்றின் காரணமாகவே விரைவில் பழுதடைந்து விடுகின்றன!…

sangika

ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் தேர்தெடுப்பது எப்படி?

nathan

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க.

nathan

எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலைக்கு இதை செய்யாதீர்கள்…

sangika

கன்னிப்பெண்களுக்கு புதிய கால் அணிகலன்

nathan