ஃபேஷன்

ஜீன்ஸிற்கு ஏற்ற பொருத்தமான டாப்சை தேர்ந்தெடுப்பது எப்படி?

புடவையும், தாவணியும் தான் பெண்களின் உடை என்று இருந்த காலத்தில், வாகனம் ஓட்டுபவர்களுக்கும், வேலைக்குச் செல்பவர்களுக்கும் வரப்பிரசாதமாக வந்ததுதான் சுடிதார். சுடிதாருக்கு இன்றல்ல நேற்றல்ல எப்போதுமே மவுசு அதிகம் தான். தாவணியை முற்றிலுமாக மறந்து சுடிதாருக்கு வந்த பெண்கள் படிப்படியாக ஜீன்ஸ் டி-சர்ட்டிற்கு மாறினர். எங்கு பார்த்தாலும் சுடிதார் கடைகளும், ஜீன்ஸ் கடைகளும் என காட்சி அளித்தன. அங்கு தான் பெண்களின் கூட்டமும் இருந்தது.

தாவணி என்பது ஏதோ முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் ஒரு சிலரால் விரும்பி அணியப்படும் ஆடையாக மாறியது. பள்ளிச் சீருடை வடிவத்திலாவது தாவணிகளுக்கு உயிர் கொடுத்து வந்த பல பள்ளிகளும் தாவணியின் கழுத்துக்களை சுடிதார் கயிற்றால் இறுக்கிக் கொன்றன.தற்போது தாவணி என்ற ஒரு ஆடையே வெகுவாக மறைந்து முற்றிலுமாக கிழிந்துவிட்டது. சரி தற்போது ஜீன்ஸ் கொடி கட்டிப் பறக்கும் பல இடங்களில் அதற்கு எடுப்பாக போடப்படும் மேல் ஆடை அதாவது டாப்ஸ்கள் பற்றி பார்ப்போம்.

பல்வேறு வகைகளில் தற்போது டாப்ஸ்கள் கிடைக்கின்றன. முழுவதும் வேலைப்பாடு செய்யப்பட்டது, கை மற்றும் கழுத்துப் பகுதியில் மட்டும் வேலைப்பாடு செய்யப்பட்டது, சமிக்கி, மணிகள் வைத்து தைக்கப் பட்ட டாப்ஸ் என இது நீண்டு கொண்டே செல்லும். பொதுவாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் தங்களது உடல் அளவிற்கு ஏற்ற சிறிய டாப்ஸ்கள் அல்லது சர்ட்டுகளை தேர்ந்தெடுக்கின்றனர். பெண்களுக்கு என தற்போது பல சட்டைகள் வருகின்றன. முழுக்கை மற்றும் பாக்கெட்டுகளுடன் அவை வெகு அசத்தல். மென்மையான நிறங்களில் அது போன்ற சட்டைகளை எடுத்து கருப்பு, அடர்ந்த நீலம் போன்ற ஜீன்ஸ் பேன்ட்டுகளுக்கு அணியலாம்.

அல்லது சட்டையை விடக் கொஞ்சம் நீளம் கூடுதலாக வரும் டாப்ஸ்களும் உள்ளன. அவற்றில் பல்வேறு விதங்களில் பல விலைகளிலும் கிடைக்கின்றன. எடுப்பான தோற்றம் கொண்டவர்கள் இது போன்ற டாப்ஸ்களை வாங்கும் போது அதற்கேற்ற வலைப் பின்னல் ஷால்களையும் வாங்கி அணிந்து கொள்வதும் ஒரு பேஷன் ஆகிவிட்டது. கை நீளம், கைக் குட்டையானது அல்லது கையே இல்லாத டாப்ஸ்களில் உங்கள் தோற்றத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ஆடை உங்களது உடல் அளவுக்கும், உடல் நிறத்திற்கும் ஏற்றதாகவும், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்காமலும் இருப்பது நலம். உடல் அதிக பருமன் கொண்டவர்கள் நீண்ட டாப்ஸ்களையும், அதற்கு மேல் ஒரு ஷாலையும் அணிவது உங்களை அழகாகக் காட்டும். ஒல்லியான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் அதிக வேலைப்பாடு கொண்ட டாப்ஸ்களை அதிகம் அணியலாம்.

ld910

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button