கூந்தல் என்சைக்ளோபீடியா!: ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்
எப்படி இருந்த என் முடி இப்படி ஆயிடுச்சு பார்த்தீங்களா? எலிவால் மாதிரி மெலிஞ்சு போச்சு…’கொத்துக் கொத்தா முடி கொட்டுது… இப்படியே போனா வழுக்கையாயிடுமோனு பயமா இருக்கு… அவசரமா இதுக்கு ஏதாவது பண்ணுங்களேன்” எனக் கவலையுடன் வருகிறவர்களை தினம் தினம் சந்திக்கிறேன். Female Pattern Hair Loss (FPHL) எனப்படுகிற இந்தப் பிரச்னையில் மேற்சொன்ன அறிகுறிகள் எல்லாம் இருக்கும்.
FPHLல் கூந்தலின் அடர்த்தி குறையும். முன்னந்தலையில் முடி உதிர்வு அதிகமாகத் தெரியும். இது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும். இந்தப் பிரச்னையானது இருவிதங்களில் பெண்களை பாதிக்கும். ஒருவகை 20 பிளஸ் முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கு ஏற்படும். இது பரம்பரையாக வரலாம். இன்னொன்று 50ன் தொடக்கத்தில் உள்ள பெண்களுக்கு ஏற்படுவது. இது முதுமையின் காரணமாகவே வரும்.
அறிகுறிகள்…
முதல் அறிகுறி வகிடு எடுக்கும் பகுதியானது அகலமாகிக் கொண்டே போகும். அதன் விளைவாக முன்னந்தலைப் பகுதியில் உள்ள முடியானது மெலிந்து, மண்டைப் பகுதி தெரிவதை உணர்வார்கள். மண்டை தெரிகிற அளவுக்கு பிரச்னை தீவிரமானால்தான் பலரும் ட்ரைகாலஜிஸ்டை பார்க்கவே வருவார்கள். ஆனால், சில சின்னச் சின்ன மாற்றங்கள் மூலம் முன்கூட்டியே எச்சரிக்கையாகலாம்.
உங்கள் முன்னந்தலைப் பகுதியை அட்ஜஸ்ட் செய்ய வழக்கத்தை விட அதிக நேரத்தை கண்ணாடி முன் செலவிடுகிறீர்களா?
யாரேனும் உங்கள் முன்னந்தலைப் பகுதியைப் பார்த்துக் கிண்டலடிக்கிறார்களா?
எண்ணெய் தடவுவது, கண்டிஷனர் உபயோகிப்பது, லீவ் ஆன் கண்டிஷனர் உபயோகிப்பது போன்றவற்றை முன் பக்க முடிக்குத் தவிர்க்கிறீர்களா?
கூந்தலை அடர்த்தியாகக் காட்டக்கூடிய வால்யூமைசிங் ஷாம்பு உபயோகிக்க ஆரம்பித்துவிட்டீர்களா?
வகிடு எடுத்து வாருவதையே தவிர்க்கிறீர்களா?
அகலமான பல் வைத்த, மிருதுவான சீப்புகளுக்கு மாறிவிட்டீர்களா? இந்தக் கேள்விகளுக்கு உங்களுடைய பதில் ஆமாம் என்றிருந்தால், உடனடியாக ட்ரைகாலஜிஸ்டை சந்திப்பது சிறந்தது.
சிகிச்சைகள்
FPHL பிரச்னைக்கான சிகிச்சைகள், எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்கப்படுகின்றனவோ, அவ்வளவு நல்ல பலன்களைத் தரும். முடி உதிர்வு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம். அந்த உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டியது ட்ரைகாலஜிஸ்ட்டின் கடமை.இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை என்பது நீடித்த காலத்துக்குக் கொடுக்கப்பட வேண்டியது என்பதால் அதற்கு சம்பந்தப்பட்ட பெண்ணை மனதளவில் தயார்படுத்த வேண்டியதும் மருத்துவரின் கடமை.
முதல் கட்டமாக உதிரும் நிலையில் உள்ள முடிகள், வளரும் நிலைக்கு மாற்றப் படவும், வளர்ச்சி முடிகிற பருவமான கேட்டஜனை தாமதப்படுத்தவும், வளரும் பருவமான அனாஜனை வேகப்படுத்தவும், அனாஜன் பருவத்தில் அதிக அடர்த்தியான முடிக் கற்றைகள் வளரச் செய்யவும் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும்.
வெளிப்பூச்சுக்கு
1. Minoxidil 2. Spironolactone கிரீம் 3. Copper Peptides. 4. மூலிகை எண்ணெய் மற்றும் பேக்குகள் என
வெளிப்பூச்சுக்கான பொருட்கள் பிரதானமாகப் பரிந்துரைக்கப்படும். PRP (Platelet rich plasma) சிகிச்சையும், மீசோ தெரபியும் மெலிந்து போய்க் கொண்டிருக்கும் கூந்தலுக்கு அடர்த்தியைக் கொடுக்கக்கூடியவை. உள்ளுக்கு எடுத்துக் கொள்கிற மருந்துகளும் பலன் தரும். ஆனால், அவற்றை ட்ரைகாலஜிஸ்ட்டின் ஆலோசனையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தற்காலிக நிவாரணத்துக்குவழுக்கை மாதிரித் தோற்றமளிக்கிற தலைப் பகுதியை தற்காலிகமாக மறைக்க விக், ஹேர் பீஸ், ஹேர் லாஸ் கன்சீலர் என ஏதோ ஒன்றை உபயோகிக்கலாம். Hair braiding மற்றும் bonding முறைகளின் மூலம் முடி குறைவான பகுதியை அடர்த்தியாகக் காட்சியளிக்கச் செய்யலாம்.கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய தற்காலிக டெக்னிக்குகள் உள்ளன. அவை…
ஹேர் கன்சீலர்
மைக்ரோஸ்கோப்பிக் கரோட்டின் ஃபைபரால் ஆன இவற்றை முடி உதிர்ந்த அல்லது மெலிந்த பகுதியில் தூவிக் கொள்வதன் மூலம் அந்த இடத்தை அடர்த்தியாகக் காட்டலாம். இவை மற்ற முடிகளுடன் சேர்ந்து, இயற்கையான தோற்றத்தைக் கொடுக்கும். ஸ்கால்ப் பிக்மென்ட்டேஷன் ஸ்கால்ப் மைக்ரோபிக்மென்ட்டேஷன் என்கிற சிகிச்சையின் மூலம் வெளியில் தெரிகிற வெளிறிய மண்டைப் பகுதியை மறைக்கலாம்.
ஆனால் இந்த சிகிச்சை திறமையும் அனுபவமும் உள்ள ட்ரைகாலஜிஸ்ட்டால் மட்டுமேசெய்யப்பட வேண்டும்.ஹேர் எக்ஸ்டென்ஷன்பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, செயற்கையான முடிக் கற்றைகளை அசல் முடியுடன் இணைக்கிற முறை இது. அப்படியே கிளிப் மாதிரி பொருத்திக் கொள்வது, பசை மாதிரி ஒட்டிக் கொள்வது, தொப்பி மாதிரி அணியக்கூடியது என இதில் பல உண்டு. இவற்றை பகலில் அணிந்து கொண்டு, இரவில் எடுத்துவிடுவதே சிறந்தது.
ஹேர் வீவிங்
இப்போது பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் இந்த முறையில்தான் தங்கள் வழுக்கை மண்டையை மறைத்துக் கொண்டு இளமையுடன் வலம் வருகிறார்கள். இயற்கையான அல்லது செயற்கையான முடிகளை ஒருவரது உண்மையான முடியோடு பின்னிப் பொருத்துகிற முறை. இது ஒருவரது தோற்றத்தையே மாற்றிக் காட்டக்கூடியது. இதுவும் திறமையானவர்களிடம் மட்டுமே செய்து கொள்ளப்பட வேண்டியது.
ஹேர் எக்ஸ்டென்ஷன் பயன்படுத்தும் போது, அதில் உள்ள பசையோ, ஒட்டும் பொருளோ அலர்ஜியை ஏற்படுத்தலாம். பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றையும் ஏற்படுத்தலாம். எனவே அவற்றைக் கையாள்வதில் அதிகபட்ச சுத்தமும் சுகாதாரமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
செயற்கை ஒட்டுக்கூந்தல் பொருத்திக் கொள்பவர்கள், அடிக்கடி அவற்றை ஸ்டைல் செய்தால்தான் அசல் முடியுடன் பொருத்திக் காட்ட முடியும். மேற்சொன்ன எந்த முறைகளில் மண்டைப் பகுதியை மறைப்பதானாலும் கூந்தலை அடிக்கடி அலசி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம் அடிக்கடி ஷாம்பு குளியல் எடுப்பதன் மூலம் தொற்றைத் தவிர்க்கலாம்.