இன்ஸ்டன்ட் ஃப்ரெஷ்னஸ்… இமீடியட் பியூட்டி!
தினசரி வேலைப்பளுவினால் சோர்வாகும் மனமும், முகமும் மலர வழிகள் சொல்கிறார், சென்னை, ‘தி விசிபிள் டிஃபரன்ஸ்’ பியூட்டி சலூனின் உரிமையாளர் வசுந்தரா!
“டல்லாயிருக்கும் மனதை உடனடியா புத்துணர்வாக்கலாம்… அரோமா ஆயிலால். எல்லா ஹெல்த் புராடக்ட்ஸ் கடைகளிலும் கிடைக்கும் இந்த ஆயிலில், ஆரஞ்சு, லெமன் ஃபிளேவரில் விருப்பமானதை வாங்கி தரை விரிப்புகளில் சில துளிகள் விட்டால், அந்த மணம் வீடு முழுக்கப் பரவி ஒவ்வொரு சுவாசிப்பின்போதும் புத்துணர்ச்சி அளிக்கும். ஆரஞ்சு மற்றும் லெமன் இரண்டையும் சமமாக கலந்தும் பயன்படுத்தலாம். குளிக்கும் தண்ணீரில் இரண்டு சொட்டுகள் விட்டுக் குளித்தால், உடனடி மலர்ச்சிக்கு உத்தரவாதம்.
லாவண்டர் ஆயிலும் சோர்வை நீக்கிப் புத்துணர்ச்சி தரும். அதில் இரு சொட்டுகள் எடுத்து, இரு காது மடல்களுக்குப் பின்புறமும் தேய்த்து, ஒரு துளியை கை மணிக்கட்டுப் பகுதியில் தேய்த்து அவ்வப்போது நுகர்ந்தால்… ஃப்ரெஷ் அண்ட் கூல்தான். இப்போ எல்லோரும் புத்துணர்ச்சிக்கு நாடும் இன்னொரு வழி, க்ரீன் டீ. அதிலும், துளசி அல்லது சாமந்திப்பூ கலந்த க்ரீன் டீ (கடைகளில் கிடைக்கிறது) டல்னஸை விரட்டி, ஃப்ரெஷ்னஸுக்கு வெல்கம் சொல்லும்.
மல்லிகைப் பூக்களை அலசி சூடான நீரில் போட்டு உடனடியாக மூடி, பத்து நிமிடம் கழித்து பூக்களை எடுத்து அந்தத் தண்ணீரை மட்டும் வெறுமனே அல்லது தேன் கலந்து குடித்தால்… மனதுக்கு ரிலாக்ஸோ ரிலாக்ஸ்தான். உயர் ரத்த அழுத்தம் இருக்கிறவர்களுக்கு, இது நல்ல மருந்தும்கூட!
டல் சருமத்தை உடனடியா பளிச்சிட வைக்க, உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைத்து முகம் முழுக்கத் தடவி உலரவிட்டுக் கழுவலாம். விட்டமின்-சி நிறைந்த இது, சருமத்தை இன்ஸ்டன்ட் பிரைட் ஆக்கும் இயற்கை ப்ளீச்; கருவளையத்துக்கான சிறந்த தீர்வு.
சோர்ந்த கண்களைப் பளபளப்பாக்க, கண்களில் பஞ்சு வைத்து அதன் மேல் வெள்ளரிக்காய் துருவலை வைத்து 15 நிமிடம் கழித்து நீக்கினால், சோர்வு, எரிச்சல் நீங்கி கண்கள் பளீரிடும். அதேபோல, ரோஜா இதழ்களை நன்கு கசக்கி அல்லது அரைத்து பேஸ்ட்டாக்கி கண்களின் மேல் மெல்லிய பஞ்சு வைத்து அதன் மேல் இந்த விழுதை வைத்தால், கண்களுக்கு கிடைக்கும் ஆனந்தப் புத்துணர்வு.
கண் சோர்வு, எரிச்சலுக்கு மிக எளிதாக, உடனடியாக அதிக பலன் தரும் சிகிச்சை… தேயிலை. பயன்படுத்திய டீ பேக் அல்லது இருமுறை டிகாக்ஷன் எடுத்த மிச்ச தேயிலையை ஃப்ரிட்ஜில் குளிர வைத்து எடுத்து, கண்கள் மேல பத்து நிமிடங்கள் வைத்துக் கழுவினால்… கண்கள் கோலிக்குண்டுகளாய் பளபளக்கும்!”