எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க கூடியதும், கொழுப்பை குறைக்கவல்லதும், கை கால் குடைச்சலுக்கு மருந்தாக அமைவதுமான பிரண்டையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா. வீட்டில் எளிதில் வளர்க்க கூடிய பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
கொழுப்பு சத்தை கரைக்கிறது. ஒவ்வாமைக்கு மருந்தாகிறது. பிரண்டையை பயன்படுத்தி எலும்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பிரண்டை பொடி, பனங்கற்கண்டு, பால். பிரண்டை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சுண்ணாம்பு தெளிவுநீரில் பிரண்டை துண்டுகளை ஊறவைத்து காயவைத்து பொடி செய்யலாம்.
அரை ஸ்பூன் பிரண்டை பொடியுடன், சிறிது பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடிப்பதால் எலும்புகள் பலப்படும். எலும்பு முறிவு இருக்கும்போது இதை எடுத்து கொண்டால் வலி குறையும். பிரண்டையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கால்சியம் சத்தை கொண்டது. ஈறுகளில் ரத்தம் கசிவை சரிசெய்யும். மரங்கள் மீது படர்ந்து வளரும் பிரண்டையை வீட்டில் அழகுக்காக வளர்க்கலாம். பிரண்டையை பயன்படுத்தி ரத்த மூலத்துக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பிரண்டை துண்டுகள், மிளகு பொடி, சுக்கு பொடி, நெய்.பிரண்டையின் நாரை நீக்கி விட்டு சதைப் பகுதியை எடுக்கவும். இதை புளித் தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, ஊறவைத்த பிரண்டை துண்டுகளை போடவும். இதனுடன் சுக்கு பொடி, மிளகுப் பொடி சேர்க்கவும். இதை பசையாக அரைத்து கொட்டை பாக்கு அளவுக்கு காலை, மாலை என 8 நாட்கள் சாப்பிட்டுவர ரத்த மூலம் சரியாகும்.
ஆசனவாயில் இருந்து வரும் ரத்தம் நிற்கும். மலைப் பகுதியில், வயல் வெளியில் படர்ந்து காணப்படும் பிரண்டை, ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. புண்களை ஆற்றும். பிரண்டையை பயன்படுத்தி சுவையின்மை, வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம்: தேவையான பொருட்கள்: பிரண்டை துண்டுகள், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு, புளி, இஞ்சி, நல்லெண்ணெய்.ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும்.
எண்ணெய் காய்ந்தவுடன் உளுத்தம் பருப்பு சேர்க்கவும். பூண்டு, வரமிளகாய், இஞ்சி துண்டு, சிறிது புளி சேர்த்து வதக்கவும். புளி தண்ணியில் ஊறவைத்த பிரண்டை துண்டுகளை போடவும். நன்றாக வதக்கவும். ஆறவைத்து சட்னி போன்று அறைத்து தாளிக்கவும். இது வாயு பிடிப்பை குணமாக்குவதுடன், கைகால் குடைச்சலை சரிசெய்கிறது. பிரண்டையானது உள் உறுப்புகள், எலும்புகளை பலப்படுத்துகிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை நிலைநிறுத்துகிறது.