ஸ்டிக் சைடு பெண்ட் அண்டு லெக் லிஃப்ட் (Stick side bend and leg lift)
சிலம்ப ஸ்டிக் அல்லது மெல்லிய மூங்கில் குச்சியை கைகள், தோள்பட்டைக்குப் பின்புறமாக நுழைத்து, நேராக நிற்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும். இப்போது, வலது கையை கீழே தாழ்த்தி, அதே நேரத்தில் வலது காலை மேலே உயர்த்த வேண்டும். பின்னர், இயல்பு நிலைக்குத் திரும்பி, இடது காலுக்கும் இப்படிச் செய்ய வேண்டும்.
பலன்கள்: இடுப்பு மற்றும் உடலின் பக்கவாட்டில் உள்ள டிரங்க் தசையை உறுதிப்படுத்தும்.
ஸ்டிக் ட்விஸ்ட்டிங் (Stick twisting)
கைகள், தோள்பட்டைக்குப் பின்புறமாக ஸ்டிக்கை நுழைத்து நேராக நிற்க வேண்டும். கால்கள் சற்று அகட்டி இருக்கட்டும். இப்போது, இடுப்புப் பகுதிக்கு மேல் உடலை அப்படியே இடது மற்றும் வலது புறம் திருப்ப வேண்டும்.
பலன்கள்: வயிறு, இடுப்பு பகுதியில் பக்கவாட்டுத் தசையை உறுதிப்படுத்தும் பயிற்சி இது.
ஓவர் ஹெட் ஸ்டிக் சைடு பெண்ட் (Overhead stick side bend)
ஸ்டிக்கை இரண்டு கைகளாலும் தலைக்கு மேல் உயர்த்திப்பிடிக்க வேண்டும். இப்போது, உடலை பக்கவாட்டில் நன்கு வளைக்க வேண்டும். இப்படி இருபுறமும் செய்யவும்.
பலன்கள்: பக்கவாட்டுப் பகுதியில் உள்ள தசைகளை உறுதியாக்கி, ஃபிட்டான வடிவத்தைத் தரும்.