ஆசனங்களைச் செய்யும் முன் உடல், மூச்சு மற்றும் மனம் மூன்றும் தயாராக இருக்க வேண்டும். இந்த மூன்றும் சரியாக, இயல்பாக இணையும்போதுதான் பலன்கள் அதிகம் கிடைக்கும். மேலும், ஆசனங்களை எந்தப் பிரச்னையும் இன்றி நல்லமுறையில் செய்ய முடியும். மாற்று ஆசனமும் (Counter Pose), ஓய்வும்கூட சரியாக இடம்பெறும்போதுதான் பிரச்னைக்கு வழியில்லாமல் போகும்.
இப்படி ஒவ்வோர் ஆசனத்தையும் அறிவியல்பூர்வமாக வரிசைப்படுத்துவதால், அதற்கான பலனை அளிப்பதுடன், அடுத்த ஆசனம் செய்யவும் நம்மை தயார் செய்கிறது. அந்தவகையில்தான் சென்ற இதழில் ஓய்வோடு முடித்தோம். அதன்பிறகு செய்ய வேண்டிய பெண்களுக்கான ஆசனங்கள் சிலவற்றை இப்போது பார்ப்போம்.
ஜதார பரிவிருத்தி தழுவல்
முதுகை தரையில் வைத்துப் படுக்கவும். கால்களை மடக்கி, சிறிது இடைவெளியுடன் உடலுக்கு நெருக்கமாக வைத்துக்கொள்ளவும். கைகளை தோள்பட்டைவரை பரப்பி, உள்ளங்கைகளை தரையைப் பார்த்தபடி வைக்கவும். இந்த நிலையில், மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும். பிறகு, வெளியேவிட்டபடி கால்களை இடப்பக்கமாகச் சாய்க்கவும். தலையை தரையை ஒட்டியபடியே வலப்பக்கம் கொண்டு செல்லவும். பிறகு மூச்சை உள்ளிழுத்தபடி முட்டியையும் தலையையும் நேராக்கிக்கொள்ளவும்.
மூச்சை வெளியே விட்டவாறு முட்டியை, வலப்பக்கம் கொண்டு செல்ல, தலை இடது பக்கம் போகும். இது ஒரு சுற்று. இதுபோல ஆறு முறை செய்ய வேண்டும். பிறகு இருகால்களையும் நீட்டி, கைகளை உடலுக்குப் பக்கத்தில் வைத்துக் கொள்ளவும்.
பலன்கள்: மேல் உடலின் இறுக்கம், பிடிப்புகளை தளர்த்தும். வலி இருந்தால் குறையும். முதுகெலும்பு நன்கு அசை வதால் அந்தப் பகுதி நன்கு வேலை செய்யும். கழுத்துப்பகுதி நன்றாக அசைவுப் பெறும். வயிற்றுப் பகுதி நன்கு வேலை செய்யும்.
அபானாசனம்
முதுகு தரையில்படும்படி படுக்கவும். கால்களை மடித்து சற்று உயர்த்திய நிலையில் முட்டிகளை உள்ளங்கைகளால் பிடித்துக்கொள்ளவும். இருமுட்டிகளுக்கும் இடையில் சிறிது இடைவெளி இருக்கட்டும். மூச்சை உள்ளிழுத்துக்கொள்ளவும். பிறகு, மூச்சை வெளியே விட்டபடி முட்டிகளை மார்புப் பக்கம் கொண்டு செல்லவும். பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடியே பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்யவும்.
பலன்கள்: வயிறு நன்றாக அமுக்கப்படுவதால் அப்பகுதி மசாஜ் செய்யப்பட்ட உணர்வு ஏற்படும். முதுகு, தோள்பட்டையில் ஆரோக்கியம் பெறும். வயிறு சம்பந்தமான பிரச்னைகள் குறைந்து, அடிவயிற்றில் தேங்கி இருக்கும் கழிவுகள் நீங்கும்.
ஊர்துவ பிரஸ்ரித பாதாசனா
முதுகுத் தரையில் இருக்கும்படி படுக்கவும். கைகள் உடலை ஒட்டியும், உள்ளங்கைகள் தரையைப் பார்த்தும் இருக்கட்டும். உடலை அசைக்காமல் மூச்சை உள்ளிழுத்து, வெளியே விட்டவாறே இடது காலை மேல் நோக்கித் தூக்கவும். எவ்வளவு தூரம் நேராக்க முடியுமோ அவ்வளவு தூரம் உயர்த்தலாம். ஓரிரு வினாடிக்குப் பிறகு மூச்சை உள்ளிழுத்தபடி இடது காலை தரைக்குக் கொண்டு வரவும். பிறகு, மூச்சை வெளியே விட்டபடி வலது காலை மேல்நோக்கித் தூக்கவும். மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு தரைக்குச் கொண்டு வரவும். இது ஒரு சுற்று. இவ்வாறு ஆறு முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: அடிவயிற்று தசைகள் இறுக்கம் அடைவதால், தொப்பை குறையும். முட்டியின் பின்புறம் நன்கு நீட்டப்படும். கெண்டை சதை நன்கு வேலை செய்யும். கணுக்கால் இறுக்கம் நீங்கி, நெகிழ்வுத் தன்மையைப் பெறும். இடுப்புப் பகுதி நன்கு வேலை செய்யும்.
அபானாசனாவில் இருந்து ஊர்துவப்பிரஸ்ரித பாதாசனா
முதுகுப் பக்கம் தரையில் படும்படி படுக்கவும். கால்களை மடக்கி உள்ளங்கைகளால் முட்டியைப் பிடித்துக்கொள்ளவும். இந்த நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தபடி உள்ளங்கைகளின் உதவியோடு கால்களை நேராக்க வேண்டும். பாதங்களை சற்று தரையை நோக்கி நகர்த்தவும். பிறகு மூச்சை வெளியில் விட்டவாறு முட்டிகளை மடக்கி அபானாசனாவுக்கு வர வேண்டும். இதுபோல ஆறு முறை செய்யவும்.
பலன்கள்: முன்பு பார்த்த அபானாசனாவின் பலன்களுக்கு மேல் முட்டிகள் நன்கு வேலை செய்யும். பாதங்கள், அது சார்ந்த பகுதிகள் வளைந்துகொடுக்கும் தன்மையைப் பெறும்.
த்துவிபாதபீடம் தழுவல்
தரையில் முதுகு படும்படி படுத்து, கால்களை மடக்கி உடலுக்கு அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். இரு பாதங்களுக்கு இடையில் சற்று இடைவெளி இருக்கட்டும். கைகள் உடலுக்கு அருகில் இருக்க வேண்டும். இந்த நிலையில் இருந்து, மூச்சை உள்ளிழுத்தபடி, இடுப்பையும், கைகளையும் ஒரே நேரத்தில் மேலே தூக்க வேண்டும். கைகள் மேல் சென்று தலைக்கு மேல் தரையில் இருக்கும். ஓரிரு வினாடிக்குப் பிறகு, மீண்டும் பழைய நிலைக்கு மூச்சை வெளியே விட்டவாறு வர வேண்டும். இவ்வாறு ஆறு முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: கீழ் முதுகு நன்கு வேலை செய்வதுடன், பலம் பெறும். முழு முதுகெலும்பும் நீட்டப்படும். மேல் முதுகு இழுக்கப்பட்டு பயன்பெறும். கணுக்கால்களும் முட்டிகளும் பலம் பெறும்.
த்துவிபாத பீடத்துக்குப் பிறகு கால்களை நீட்டி சற்று ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் அபானாசனத்தை ஆறு முறை செய்யவும். அதன்பிறகு தேவையெனில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம்.