28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
ld3772
ஃபேஷன்

லெக்கிங்ஸ் ஆபாசமா?

எதிரொலி

சமீபத்தில் ‘லெக்கிங்ஸ் ஆபாசம்? எல்லை மீறும் இளசுகள்’ என்ற தலைப்பில், அனுமதி இன்றி எடுக்கப்பட்ட பெண்களின் படங்களோடு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது ஒரு பத்திரிகை. அது குறித்து இணைய வெளி எங்கும் ஒலித்த பெண்களின் குரல்கள் சுருக்கமாக இங்கே…

உடை என்பது அவரவர் சௌகரியத்துக்கானது. வாய் இருப்பதால் எதையும் பேசலாம் என்று ஒரு பக்கம் தொடர்ந்து கருத்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள் கலாசாரக் காவலர்கள். இப்போது கேமராவையும் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். எல்லை மீறியிருப்பவர்கள் இவர்கள்தான். ஒரு பெண் எப்போதும் தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்க முடியாது. அவளுக்கு அது வேலையும் இல்லை. இந்த உலகம் பாதுகாப்பானது என்ற எண்ணத்தில் தான் பெண்கள் உடன் இருப்பவர்களை நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையைச் சிதைக்கும் விதமாக நடந்து கொண்டிருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? – ஜீவசுந்தரி பாலன்

பெண்களின் அனுமதியின்றி அவர்களைப் பின் தொடர்ந்து சென்று புகைப்படம் எடுத்ததற்காக அந்தப் பத்திரிகை நிறுவனம்தான் வெட்கப்படவேண்டும். – தர்மினி

வாழ்க்கைப் பயணத்தில் ஓடும்போது புரிகிறது பெண்ணின் உடை மடிப்புக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க அரசியல்.

– பர்வத வர்த்தினி

காற்றுக்கு விலகாத ஆடை ஏதாவது உண்டா? அதை மறைந்திருந்து படம் எடுத்து அட்டைப்படத்தில் போடும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டது. சேலை, சுடிதார் என்று எந்த உடை விலகியிருந்தாலும் படமெடுத்துப்போட ஆரம்பித்தால், ஒரு பெண் கூட வெளியில் நடமாட முடியாது. பெண்களின் உடைதான் பிரச்னை என்பதே ஒரு வக்கிரமான பார்வைதான். பிறகெப்படி 2 வயது குழந்தை கூட பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறது என்று கேட்டுக் கேட்டுச் சோர்வாகி விட்டது.

– ஜோதிமணி சென்னிமலை

‘லெ்க்கிங்ஸ்’ அணிவது ஆபாசம் என்ற கூப்பாடு உடை தொடர்பானது மட்டுமே அல்ல. கைமீறிப் போகும் ஆண்சார் அதிகாரத்தை மீளுறுதி செய்துகொள்ளும் சமூக மனப்பாங்குதான் இது.புடவை உடுத்திய, சுடிதாரின் துப்பட்டா பறக்க இருசக்கர வாகனங்களில் பெண்கள் செல்வதைப் பார்க்கும்போது பதற்றமாக இருக்கும். முந்தானை அல்லது துப்பட்டா சக்கரங்களில் சிக்கிக்கொண்டு விபத்து ஏற்பட்டால்..? வேலைக்கோ, கல்லூரிக்கோ செல்லும் காலைநேரப் பரபரப்பில் இந்த ‘லெக்கிங்ஸ்’ அணிந்து கொண்டு பறப்பது அவர்களுக்கு இலகுவாக இருந்திருக்கலாம். அந்நேரங்களில் மட்டும் கடிகாரத்தில் நான்கு முட்கள் சுற்றுவது அனுபவப்பட்டவர்களுக்குத் தெரியும்.

கால்கள் தெரிய உடையணிவது அழகென்று சில பெண்கள் எண்ணுகிறார்கள் என்றால், அதுவும்கூட அவர்தம் உரிமையின் பாற்பட்டதே. திரைப்படங்களில், பூஜ்ஜியத்துக்குக் கீழ் உறைய வைக்கும் குளிரில், உள்ளாடைகளையே உடைகளாக உடுத்தி பெண்களை ஆட விடும் பாடல் காட்சிகளை கண்ணெடுக்காமல் இந்தச் சமூகம் பார்க்கவில்லையா? அதற்காக, திரைகளைக் கிழித்துத் தொங்கவிட்டுவிட்டார்களா என்ன? உடையணிவதனூடாக உடலமைப்பைக் காண்பிப்பது அழகா இல்லையா என்பதை வயதும் அனுபவமும் பெண்களுக்கு கற்றுத் தரட்டுமே! அதற்குள் இந்த ‘கலாசாரக் காவலர்’கள் பதறுவது ஏன்?

உடைகளை அணிந்து பார்க்கும் இடத்திலோ, விடுதியிலோ ரகசியமாக புகைப்படக் கருவி பொருத்தப்பட்டிருந்தால், அந்தக் குறிப்பிட்ட அங்காடி மீது வழக்குத் தொடுக்க இயலும். அது அடுத்தவர் அந்தரங்கம் சார்ந்தது. அதையே இந்த ஊடகம் செய்திருக்கிறது. இந்த சமூகத்தின் மீதான அடிப்படை நம்பிக்கை குலையுமிடம் இது. இயல்பாக ஓரிடத்தில் நிற்பதைக் கூட படம் எடுத்து அட்டையில் போட்டு விற்றுவிடுகிறார்கள் என்றால். இனி சர்வசதா காலமும் தமது ஆடை குறித்த பிரக்ஞையோடு அல்லவா பெண்கள் இருக்க வேண்டும்? காற்றடிக்கிற போதெல்லாம் ‘எந்த கேமரா கண் உற்றுப் பார்க்கிறதோ’ என்றல்லவா பதற வேண்டும்?

– தமிழ்நதி

உலகில் உலவும் கலாசார உடைகளில் பெண்களுக்கு வசதியாக உள்ள ஒன்றைக் காட்ட முடியுமா, உங்களால்? ஒரு சீனத் தோழி கேட்டார், எங்களூரில் கலாசார உடையை விழா காலங்களில் மட்டுமே அணிவோம். உங்களூரில் ஏன் தினமும் அணிகிறீர்கள்?’என்னிடம் பதிலில்லை.ஒரு உடையானது தற்சார்புடன் இருக்க வேண்டும். உடல் இயக்கத்தை தடை செய்யக் கூடாது. உழைக்க வசதியாக இருக்க வேண்டும். சுனாமியில் அதிக அளவில் பெண்கள் இறக்கக் காரணம், செடிகொடிகளில் சிக்கிக் கொண்ட புடவையும் தலைமுடியும்தானே?

– கீதா இளங்கோவன்

கலாசாரத்தைப் பற்றி பேசினால் பல்வேறு சமூகப் பிரச்னைகளை, ஏற்றத்தாழ்வுகளை, சமூக வன்கொடுமைகளைப் பற்றி பேச வேண்டும். அது பெண்களின் ஆடையில் இல்லை. பெண்கள் என்ன செய்ய வேண்டும், என்ன சிந்திக்க வேண்டும் என்று சதா அறிவுரை கூறும் மனோபாவம் சிக்கலுக்கு உரியது. ஆண்களின் ஷார்ட்ஸ், பட்டா பட்டி ட்ராயர், ஏன் வயல் வேலை செய்யும் போது கோவணம்… இதைப் பற்றி எங்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை. நாங்கள் அறிவுரை சொல்வதும் இல்லை. அது அவர்கள் வேலைக்கு வசதியாக இருக்கிறது அவ்வளவே. வேலைக்கு வசதியாக இருக்கிற எதையும் உடுத்திக் கொள்ள வேண்டியதுதான். அது பிரச்னையாக இருக்கிறவர்கள் மனதுக்கு லகான் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

– கீதா நாராயணன்

சந்தையின் முக்கிய வியாபாரப்பொருள் பெண்ணுடல். பிரச்னை அமைப்பில் இருக்கிறது.

– பிரசன்னா ராமசாமி

ஆடை அணிவதில் எந்த நூற்றாண்டு பாரம்பரியம், கலாசாரத்தை பின்பற்ற வேண்டுமென கலாசாரக் காவலர்கள் குறிப்பிடுவார்களா?

– தயா மலர்

நம் மாநிலத்தின் மிகச்சிறந்த வசதியான பெண் உடை – லெக்கிங்ஸ்! முத்தான 10 காரணங்கள்…

1. அதிக வெப்ப நாட்கள் கொண்ட நம் வாழ்வில், புடவைகள் ஆரோக்கியமானவை இல்லை. எத்தனை முறை துணியால் உடலைச் சுற்றிக்கொள்வது? இடுப்பு தெரிகிறதா, மார் தெரிகிறதா, புடவை நழுவுகிறதா என்று புடவையை ஒதுக்கி விடவே நமக்கு நேரம் போதாது. நேரமும் வாய்ப்பும் இருக்கும் போது புடவையை அணிந்து மகிழலாம்.

2.சமையலையும் குழந்தைகளையும் பொதுவேலைகளையும் கவனிக்க, வாகனங்களை இயக்க, லெக்கிங்ஸே ஜீன்சை விடச் சிறந்த உடை. தடிமனான ஜீன்ஸ், அதிகப்புழுக்கத்தையும் இறுக்கத்தையும் தொற்றுநோய்களையும் கொடுக்கும். லெக்கிங்ஸ் இத்தகைய தொல்லைகளை அளிக்காது.

3.இன்றைய பொருளாதார நிலையில், குறைந்த உடைச் செலவை நிர்வகிக்க லெக்கிங்ஸ் உடையே வாய்ப்பாக இருக்கும். புடவை வாங்கினால், அதனுடன் பாவாடை, ப்ளவுஸ், ஃபால்ஸ், ப்ளவுஸுக்கு லைனிங் இன்ன பிற செலவை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று நீவீர் அறிவீர். அதுமட்டுமல்ல… புடவை அணிந்து சமையலறையில் வேலை செய்வது எவ்வளவு கொடுமை என்று உங்கள் தாயிடமும் மனைவியிடமும் கேட்டுப் பாருங்கள். அதற்கு மாற்றாகத்தான், வீடுகளுக்குள் நைட்டி வந்தது.

4. லெக்கிங்ஸ் மாதவிலக்கு நாட்களுக்கு, கருவுற்ற காலத்துக்கு மிக வசதியான உடை. உடலுடன் பிணைந்திருந்து எந்த அசெளகரியத்தையும் கொடுக்காது. இந்த வகையில், சுடிதாரை விடவும் சிறந்த உடை என்பேன். காட்டன் லெக்கிங்ஸ்
மிகவும் நல்லது.

5. லெக்கிங்ஸ்களின் நிறத்துக்கு ஏற்ற அல்லது மாறான விதவிதமான ‘டாப்’ அணிந்து உற்சாகம் பெறலாம். அதிலும் கழுத்துப்பகுதியிலும் கைப்பகுதியிலும் விதவிதமான ‘கட்’ வைத்து உயர்தர, நவீன உடை ஆக்கலாம். இதனால், பல வேலைகளை ஒரே நேரத்தில் கையாளும் பெண்கள், உடைகளுக்கு அதிக கவனமோ நேரமோ கொடுக்க வேண்டியதில்லை!

6. இந்த ‘லெக்கிங்ஸ்’ ட்ரெண்டும் விரைவில் மாறும் என்று நம்புகிறேன். இன்று லெக்கிங்ஸை ரகசியமாக விரும்பி போட்டோ எடுத்து, வெளிப்படையாக வெறுப்பது போல் காட்டிக்கொள்ளும் ஆண்களின் மகள்களும் மருமகள்களும் எதிர்காலத்தில், காற்றோட்டமான, குட்டைப்பாவாடைகள் அணிந்து ஹீல்ஸில் நடக்கும் காலம் வரும். அதை தந்தையர் ஏற்றே ஆகவேண்டும். ஏனெனில், மகள்களின் அசெளகரியங்களை மாற்றப் போராடும் ஒரே ஆண் வகையினம் ‘தந்தையர்’ மட்டுமே என்பதில் எனக்கு என்றும் மாறாத கருத்து உண்டு.

7.விரைவிலேயே லெக்கிங்ஸ் உடை பள்ளிச்சீருடையாகவும் மாறும் வாய்ப்பிருக்கிறது.

8. ஆண்களுக்கும் லெக்கிங்ஸை உடையாக பரிந்துரைக்க விரும்புகிறேன். தொப்பைக்குக் கீழே வீணே மாட்டிக்கொண்டிருக்கும் டைட் ஜீன்ஸ், மற்றும் குடித்துவிட்டு தெருச்சாலைகளில் விழுந்து கிடக்கையில் நழுவும் வேட்டி… இவையெல்லாம் ஆண்களுக்கு அழகே இல்லை. கைலியும் அந்த வகையில் ‘லெக்கிங்ஸ்’ உடன் சேர்கிறது.

9.’நைட்டி’பரவலான போது, அந்த உடை மீதும் ஆண்களுக்கு இதே வெறுப்பு இருந்தது. பெண்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற உடைகளைக் கண்டறியும் போது ஆண்கள் பதற்றமடைவது வழக்கமே.

10. எந்த உடை அணிந்தாலும், பெண் மீதான பாலியல் வன்புணர்வு என்பதை நியாயப்படுத்த ஆண்கள் பக்கம் மூட்டை மூட்டையாகக் காரணங்கள் இருக்கின்றன என்பதை எந்தச் சிறிய பெண்ணும் இன்று அறிந்து வைத்திருக்கிறாள். இன்னும் நிறைய பலன்கள், லெக்கிங்ஸால் உண்டு என்றாலும், அடுத்த முறை உங்கள் ‘லெக்கிங்ஸ் வெறுப்பின்’ போது அவற்றையெல்லாம் பதிவிடுகிறேன். பெண்ணோ ஆணோ எல்லோரும் லெக்கிங்ஸ் அணியுங்கள்… கொண்டாடுங்கள்!

– குட்டி ரேவதி

ld3772

Related posts

‘டா டா டவல்’ பிரா! புதிய அறிமுகம்

nathan

ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆரோக்கிய அறிவுரைகள் இவை…

sangika

மருதாணி அதிகம் சிவப்பாக பிடிக்க சூப்பர் டிப்ஸ்….பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பொருத்தமான சட்டையை தெரிவுசெய்வது எப்படி?

nathan

சேலையை விட்டுக் கொடுக்க மாட்டோம்!

nathan

நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்

nathan

இத்த‍னை வகைகளா? – பெண்கள் விரும்பி அணியும் சல்வார்!…

sangika

நவீனத்திற்கு ஏற்ப மாறிவிடும் புத்தம் புதிய சேலைகள்

nathan

நிறம் என்பது வெறும் நிறமே!

nathan